44 கல்வி நிலையங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதியை இழக்கின்றன!


மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனின் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்பட நாட்டில் உள்ள 44 கல்வி நிலையங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதியை இழக்கும் என்று மத்திய அரசு திங்கள் கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் பயிலும் சுமார் 1,19,363 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், எம்.பில். மற்றும் பிஎச்.டி. ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள 2,124 மாணவர்கள் மற்றும் தொலை தூரக் கல்வி பயிலும் 74,808 மாணவர்கள் தங்கள் கல்வியை இதே கல்விக் கூடங்களில் தொடரலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி பெறும் முன் இணைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழகங்களின் பட்டங்கள் தற்போதைய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான வழிகாட்டல்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விபல் சர்மா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் ஏ.கே. பட்னாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தகுதி இழக்கும் 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை தமிழகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செயின்ட் பீட்டர்ஸ் தொழில் நுட்பக் கல்லூரி - ஆவடி, நூருல் இஸ்லாம் தொழில்நுட்பக் கல்லூரி - தக்கலை, மீனாக்ஷி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - காஞ்சீபுரம், செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - புதூர், செட்நாடு நர்சிங் கல்லூரி, சவீதா பல்மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி, அருள்மிகு கலசிலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி - விருதுநகர், பெரியார் மணியம்மை நுட்பக் கல்லூரி - தஞ்சாவூர், கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை, வேல்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கற்பகம் உயர்கல்வி நிறுவனம் - பொள்ளாச்சி, விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் - சேலம், பாலாஜி வித்யாபீடம் - பாண்டி ஆகிய கல்வி நிறுவனங்கள் தகுதி இழப்பைச் சந்தித்துள்ளன.

அங்கீகாரம் ரத்து - மாணவர்களின் கல்வியைப் பாதிக்காது

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் மாணவர்களின் கல்விக்குபாதிப்பில்லை என்று சென்னை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்தார்.

அரசு பல்கலைக்கழகங்களைப் போல தனியார்களும் நிகர்நிலை என்ற பெயரில் பல்கலை கழகங்களை நடத்துகின்றனர். மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்ப பிரிவுகள், மருத்துவ மேற்படிப்பு என பல்வேறு படிப்புகளை அரசுக்கு நிகராக தனியார் கல்வி நிறுவனங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை செயல்படுத்தி வருகின்றன.

நிகர்நிலை பல்கலைகழகங்களின் செயல்பாடு, மாணவர்களின் சேர்கையில் விதிமுறை மீறல், அதிகக் கட்டணம் வசூல், அடிப்படை வசதி இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்தன.பொதுநல வழக்கு தொடரப்பட்டதையடுத்து நிகர்நிலை பல்கலை கழகங்களை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் நாடுமுழுவதும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கமிட்டி கண்டுபிடித்தது. தமிழகத்தில் 17 நிகர்நிலை கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள 17 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளும் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். எனினும் அந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு பல்கலைகழகங்களில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் அளித்த பேட்டியில் கூறியிருப்தாவது:-

தமிழ்நாட்டில் 17 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்தாகிறது. இந்த பல்கலைகழகங்களில் சுமார் ஒரு லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் அரசு பல்கலைக்கழகங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றன.

மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்காதபடி அருகில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்படும். சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தோடு சேர்ந்துபடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் பாடத் திட்டமும், அரசு பல்கலைகழகப் பாடத்திட்டமும் வெவ்வேறாக உள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பொதுவான பாடத்திட்டம் வழங்கப்பட வேண்டும்.

என்ஜினீயரிங் மாணவர்களில் பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் மாணவர்களை அருகில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவும் வழி காணப்படும்.

நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியை பொறுத்தவரை ஒரு சிறப்பு வழக்காக எடுத்து செயல்படுத்த வேண்டும். மத்திய அரசும் அதைத்தான் விரும்புகிறது. அப்போதுதான் அவர்களின் கல்வி பாதிக்காது. தடைபடாது.
 

www.Chittarkottai.comBook