இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!

 

ஆக்கம்: சகோதரி. ஃபரீதா 

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..


"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)

இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.

ஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்?


ஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா?


வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.

நாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.

முடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன?

அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது.

ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை.

மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான்.

பாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன.

இப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்

மனிதாபிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும்.

"தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).

இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா?

"அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கையில்லாதவன்?" என வினவப்பட்டபோது, "எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).

இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே!

அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.

இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தை

பேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.

ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும்.

இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான்.

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும்.

இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.

நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.

கண்ணியத்தைப் பேணி,
கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,
காட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,
கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,
ஒற்றுமை என்னும் கயிற்றைப்
பற்றி பிடித்து வாழ்வோமாக..!


நாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..! வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.

chittarkottai.com