சர்க்கரை, ஹார்ட் அட்டாக்.. - மரபியல் ரீதியானதா???

அனுப்பி மகிழ்ந்தவர்: ஏ.சி.எம். இபுராகிம்
நன்றி: அவள்விகடன்

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...


"சர்க்கரை, ஹார்ட் அட்டாக்... இவையெல்லாம் மரபியல் ரீதியில் வருவதில்லை!" உடைபடுகிறது உலக நம்பிக்கை...

அடடா, இந்த சின்ன வயசுலயே உங்களுக்கு சுகர் வந்திருக்கே..! உங்க அப்பா, அம்மா யாருக்காவது உண்டோ?"
ஹார்ட் பிராப்ளம் வந்திருக்குனா... உங்க பேரன்ட்ஸ் ரெண்டு பேர்ல யாருக்காச்சும் இருந்திருக்கும். இல்ல... உங்க தாத்தாவுக்குக்கூட இருந்திருக்கலாம்..."

- நீரிழிவு, இதயக்கோளாறு என்று டாக்டரிடம் போய் நின்றாலே... கண்டிப்பாக இப்படிப்பட்ட டயலாக்குகள் ஓட ஆரம்பித்துவிடும்.

‘இந்தியர்களை இதய ரத்தநாள அடைப்புப் பிரச்னை, நீரிழிவு நோய் இதெல்லாம் அதிகமாகக் தாக்குவதற்கு மரபியல் ரீதியிலான காரணங்களும் இருக்கின்றன' என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் காலம் காலமாக கூறிவருவதன் விளைவுதான் இது.

ஆனால், 'இதில் எந்தவித உண்மையும் இல்லை. இத்தகைய நோய்களுக்கும் மரபியல் ரீதியிலான விஷயங்களுக்கும் தொடர்பில்லை' என்று அந்த நம்பிக்கைகள் இப்போது தூள்தூளாக ஆரம்பித்துள்ளன.

சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இதய மருத்துவத் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் தணிகாசலம், இந்தியாவில் உள்ள பிரபல இதயநோய் மருத்துவர்களில் முக்கியமானவர். இவருடைய தலைமையிலான சித்தமருத்துவ ஆய்வுக்குழு, மத்திய அரசு, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன், கடந்த மூன்று ஆண்டுகளாக சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுதான்... 'மரபியல் என்ற விஷயமே தவறு' என்கிற உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது!


அடிப்படையில் அலோபதி டாக்டரான (ஆங்கில முறை மருத்துவம்) தணிகாசலம், சித்தமருத்துவம் குறித்த ஆராய்ச்சியில் குதித்திருப்பதே ஒரு ஆச்சர்யமான விஷயம்தான். அதிலிருந்தே ஆரம்பித்தார் தணிகாசலம்...

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு பணக்கார வர்க்கத்தினரை மட்டுமே தாக்கி வந்த ஹார்ட் அட்டாக், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம் போன்ற நோய்களெல்லாம்... ஏழைகள், பணக்காரர்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் இன்று பரவிக்கிடக்கின்றன. இந்த நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகிவிட்டது. ஆனால், இவர்களில் பலரும் இத்தகைய நோய்களுக்கான மருந்துகளை வாங்கிச் சாப்பிட முடியாத அளவுக்கு, ஆங்கில மருந்துகளின் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. வசதியானவர்களாக இருந்தாலும்... போலி மற்றும் காலாவதியான மருந்துகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, சித்த மருந்துகள் நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுதான், இந்த ஆராய்ச்சியில் நான் இறங்குவதற்கு காரணம்'' என்று சொல்லி வியக்க வைத்தவர்,


"இந்த ஆராய்ச்சி இன்னும் ஓராண்டுக்குள் முழுமையடையும். என்றாலும், அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டு, விஷயத்துக்குள் புகுந்தார்.

'‘சித்த மருத்துவம் தமிழ்நாட்டில் தோன்றி... மலேசியா, சிங்கப்பூர், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இன்று சீனாவில் பெரும்பாலும் சித்த மருத்துவத்துக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூரில் எந்தமாதிரியான சித்த மருந்துகளும் எளிதில் கிடைக்கும். அப்படியிருக்கும்போது நம் நாட்டில் மட்டும் அதன் முக்கியத்துவம் இத்தனைக் காலம் முழுமையாக உணரப்படாததற்கு காரணம்? 'முக்கால்வாசி மூலிகை மருந்துகளில் உலோகம் இருக்கிறது. மாமிசம் இருக்கும். மிருகத்தின் கழிவுப் பொருட்கள்கூட இருக்கலாம்' என்று நம் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் பரவியிருப்பதுதான்!

இந்தச் சூழலில், இந்திய மருத்துவ முறை சித்த மருத்துவர்கள் சிலர் என்னை அணுகி, ‘அலோபதி மருத்துவத்தில் புகழ்பெற்றிருக்கும் உங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னால்தான், சித்தமருத்துவத்தின் மகத்துவம் குறித்த விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் விரைவாக ஏற்படும்' என்றார்கள். அவர்கள் கொடுத்த மருந்துகளை முதலில் ஆராய்ந்தோம். ஏழு மூலிகை மருந்துகளை உள்ளடக்கிய 'மதுமேக சூரணம்' என்பதை மொத்தமாக எடுத்து, அதில் எவ்வளவு உலோகம் இருக்கிறது? எவ்வளவு இருந்தால் நல்லது? என்பதை முதலில் ஆராய்ந்தோம். 'புடம் போடுதல்' எனும் முறையில் அதிலிருக்கும் நச்சுத்தன்மைகளை குறைத்துவிட்டு, மருந்துகளை பரிசோதனைக்குப் பயன்படுத்தினோம்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து, பரிசோதனை பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவரவர் விருப்பத்துக்கேற்ப அலோபதி அல்லது சித்த மருத்துவ முறையில், உரிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தோம். சித்த மருத்துவத்தை விரும்பியவர்களுக்கு, மதுமேக சூரணம் கொடுத்தோம். சுகர், பிளட்பிரஷர், கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் குறைக்கக்கூடிய தன்மை அதற்கு இருக்கிறதா... நெஞ்சு எரிச்சல், லிவர் கோளாறு, கிட்னி கோளாறு, மலச்சிக்கல் போன்று ஏதேனும் சைடு எஃபெக்ட் வருகிறதா? என்று மாதம் ஒரு முறை பரிசோதனை செய்தோம். பலருக்கும் நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. பக்க விளைவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

அதேசமயம், இந்த மருந்துகளால் சிலருக்குப் பலனில்லாமலும் போனது. ஆனால், அதற்குக் காரணம் மருந்தின் கோளாறு இல்லை. உடல்வாகுதான். அதாவது, 'பித்த உடம்பா... வாத உடம்பா? என்று ஒவ்வொருவரின் உடல் அமைப்பைப் பொறுத்தும் மருந்து வேலை செய்வது மாறுபடும்' என்பார்கள் சித்த மருத்துவர்கள். அலோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டால்கூட, சிலருக்கு அரை மாத்திரையில் சுகர் குறைந்துவிடும். சிலருக்கு குறையவே குறையாது. உடல்வாகைப் பொறுத்ததுதான் மருந்துகள் வேலை செய்யும்'' என்ற தணிகாசலம், தங்களுடைய ஆராய்ச்சியில் அதிசயிக்க வைத்த ஒரு விஷயத்தையும் சொன்னார்.

"ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனியாக மருந்துகளை கொடுக்கவேண்டியிருக்கிறது. ஆனால், சுகர் பிரச்னைக்காக கொடுக்கப்பட்ட சூரணம், கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்ததுதான் ஆச்சர்யம்!'' என்றவர்,
அதன்பிறகு, ஆய்வின் முக்கியமான கட்டத்துக்கு வந்தார் தணிகாசலம்.

'‘'மரபியல் காரணமாகத்தான் இதய ரத்தநாள அடைப்புப் பிரச்னை, நீரிழிவு நோய் இதெல்லாம் வருகிறது என்கிற ஒரு கூற்று இருக்கிறது. அது முழுக்க தவறு என்பதை இந்த ஆய்வின் மூலம் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். எங்களின் ஆய்வில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் கலந்தே இருக்கிறார்கள். நகர்ப்புற மக்களின் நோய் பாதிப்புகளுக்கும் கிராமப்புற மக்களின் நோய் பாதிப்புகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிராம மக்கள் அதிகமாக உடல் உழைப்பைக் கொடுப்பதால், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அதனால், அவர்களிடையே இதய ரத்தநாள அடைப்பு பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், நகர்ப்புறவாசிகளிடம் இந்த பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இந்த நோய், மரபு ரீதியிலான விஷயம் என்றால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இரண்டு இடங்களிலுமே ஒரேமாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

ஆக, நம்மைச் சுற்றியிருக்கிற சூழ்நிலைதான் நோய்கள் வருவதற்கான முக்கிய காரணம். நடைக்கு தடை, அதிக அளவு ஸ்மோக்கிங், ஃபாஸ்ட் ஃபுட் உணவு, நேரம் காலமில்லாமல் கண்ட நேரத்தில் சாப்பிடுவது... என்று நம் வாழ்க்கை முறையே மொத்தமாக மாறிப் போயிருக்கிறது. அதனால்தான், எங்களுடைய ஆய்வில் இருப்பவர்களுக்கு சிகிச்சையைத் தவிர, உடற்பயிற்சி, யோகா, மெடிடேஷன், டயட் ஃபுட் என்று பலவித ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம். அதன் பலன்... சிகிச்சைக்கு முன்பு மிகவும் பதற்றமாக இருந்தவர்கள், இப்போது சாந்தமாக மாறியிருக்கிறார்கள்.

இந்தச் சூரணத்தைக் கொடுத்தால், 'இன்னும் மூன்று ஆண்டுகளில் இவருக்கு ஸ்ட்ரோக் வரலாம். இவருக்கு சுகர் வரலாம். இவரை இதய நோய் தாக்கலாம்' என்பதை எல்லாம்கூட முன்கூட்டியே கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்பும் இருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இதை ஆரம்ப நிலை வியாதி அறிதல் என்று சொல்லலாம். இவர்களுக்கு அத்தகைய நோய்களைத் தடுக்கக் கூடிய மருந்துகளையும் கொடுத்து வருகிறோம்.

எங்களோட ஆராய்ச்சி அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு, இந்த அதிசயத் தக்க முடிவுகளைப் பற்றி உலகுக்கு முறைப்படி அறிவிப்போம்" என்று உற்சாகமாக சொன்ன தணிகாசலம், நிறைவாக...

"சுகர், இதய நோய் என்று எந்தப் பிரச்னை வந்தாலும், குடும்பத்தில் உள்ள பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைக்கோ... கணவருக்கோ பிரச்னை என்றால் மொத்த பாரத்தையும் சுமப்பது அவர்கள்தான். அவர்களுக்குதான் சித்த மருந்துகளின் அருமையும் நன்கு தெரியும். ஏனென்றால், ஒரு தலைவலி என்றால் கூட அடுக்களையில் இருக்கும் சித்தரத்தை, சுக்கு என்று எதையாவது எடுத்து உடனே சிகிச்சையை ஆரம்பித்து விடுவார்கள். எனவே, சித்த மருத்துவம் பற்றிய எங்களின் ஆராய்ச்சி முடிவுகள் முக்கியமாக பெண்களுக்கு பெரியநிம் மதியைக் கொடுக்கும்" என்று சொன்னார்.
மதுமேக சூரண மகாத்மியம்!

இந்த ஆய்வின்போதே... 'மதுமேக சூரணம்' மேலும் புகழ்பெற ஆரம்பித்துள்ளது. இதைப்பயன்படுத்தி குணமடைந்தவர்களின் வாயிலாகவே செய்தி பரவி, 'மதுமேக சூரணம் எங்கு கிடைக்கும்?' என்று கேட்டு, ஏராளமான கடிதங்கள் வருகின்றனவாம்.
இதைப்பற்றி பேசும்போது, ''பாளையங்கோட்டை, அரசு சித்த மருத்துவமனை; சென்னை, அண்ணாநகர் 'இந்திய மருத்துவமுறை சித்த மருத்துவமனை' இவை இரண்டிலும் பல வருடங்களாகவே இந்த சூரணத்தைக் கொடுத்து வருகிறார்கள். தாம்பரத்திலிருக்கும் தேசிய சித்தமருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் இது கிடைக்கிறது'' என்றார் டாக்டர் தணிகாசலம்.

--------------------------------------------------------------------------------

இந்த ஆய்வில் சென்னை மாநகரம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் நேரடியாகச் சென்றே இப்பணிகளை மேற்கொள்கிறார்கள். சம்பந்தபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, திரும்பக் கொண்டுவிடுவது வரை எல்லாவற்றையும் இந்தக் குழுவே செய்துவருகிறது. இதுவரை 6,200 நபர்களிடம் ஆய்வு முடிந்திருக்கிறது. இது, எட்டாயிரம் என்ற அளவைத் தொட்டதும் ஆய்வு முடிவுக்கு வரும்.

chittarkottai.com