தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு


தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்யலாம் என்று வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த உரிய சட்ட முன்வடிவு அடுத்த மாதம் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சென்னை, நவ.14-

தமிழ்நாட்டில் மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற தொழிற்படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.

வல்லுனர் குழு

இந்த நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு பெரிய சுமையாக இருக்கிறது என்று கூறி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது.

இதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

நுழைவுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக சென்னை மற்றும் மதுரையில் இந்த குழுவினர் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தினார்கள். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிபுணர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் இந்த குழுவினர் கருத்துக்களை கேட்டு அறிக்கை தயார் செய்தனர்.

அறிக்கை தாக்கல்

இந்த குழு தலைவர் டாக்டர் எம்.ஆனந்தகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதியை நேற்று நேரில் சந்தித்து தாங்கள் தயார் செய்திருந்த அறிக்கையை கொடுத்தனர்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏழை மாணவர்கள் பாதிப்பு

2006 மே மாதம் கவர்னர், சட்டமன்றத்தில் உரையாற்றிய போது-தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக் கூடியதாகவும், அதிக பொருள் செலவை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது என்பதாலும்-கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வில் சம வாய்ப்பு இல்லை என்ற நிலை இருப்பதாலும்; நுழைவுத் தேர்வினை ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும் - என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 7.7.2006 அன்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

ரத்து ஆகிறது

அந்த வல்லுனர் குழு தனது பரிந்துரைகளை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நேற்று அளித்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி தொடங்கப்படும் சட்டமன்ற கூட்டத் தொடரில் உரிய சட்ட முன்வடிவினைக் கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி
 

www.Chittarkottai.comBook