21-ஆம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலை

அனுப்பியவர்: எம். முஹம்மது ஹுசைன் கனி,   

Refer this Page to your friends

Monday September 4 2006 00:00 IST


இந்தியக் கல்வி வரலாற்றில் சென்னை, கோல்கத்தா, மும்பை ஆகிய மூன்று பல்கலைக் கழகங்கள் மூத்தவை. இம்மூன்றும் 150ஆம் ஆண்டு கல்விப் பணியைத் தொடர்கின்றன. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழகத்தின் தாய்ப் பல்கலைக்கழகம். அதன் தொடக்க விழா நிகழ்வுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று தொடக்கி வைக்கிறார்.


இவ்விழாவில், பல்கலையின் நூற்றைம்பது ஆண்டுகளை நினைவூட்டும் வகையில் 150 நூல்களை வெளியிடும் திட்டத்தின் முதற்கட்டமாக 15 நூல்களை வெளியிடுவது வரலாற்றில் இடம்பெறத் தக்க நிகழ்வாகும்.


1857-இல் லார்டு எல்பின்ஸ்டன் என்பாரால் சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு, பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பல்கலையின் 127 இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருகிறார்கள். 46 கல்லூரிகளுக்கு எம்.பில்., பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது. 14 கலை - அறிவியல் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி (Autonomous Status) உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலையில் 69 துறைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 1981-இல் அஞ்சல்வழிக் கல்வி நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் சுமார் 1.60 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பயிலுகின்றனர்.

2005 - 2006ஆம் கல்வி ஆண்டு முதல் தொலைதூரக் கல்வி மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் புதிய அணுகுமுறையில் (Sim Format) உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.


உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்குதல்; ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல்; பல்கலைப் பேராசிரியர்கள் ஆய்வுத் திட்டப் பணிகளை (Projects) மேற்கொள்ளச் செய்தல்; காலத்திற்கேற்ற புதிய படிப்புகளை (New Courses) அறிமுகம் செய்தல்; உலகத் தரத்திற்கு இணையாகக் கல்வித் தரத்தை உயர்த்துதல் போன்ற குறிக்கோள்களை மையப்படுத்திப் பல்கலை செயல்படுகிறது.

அதன் ஓர் அங்கமாக ஆய்வுத் திட்டப்பணிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2003 - 2004ஆம் கல்வியாண்டில் சுமார் 120 ஆய்வுத் திட்டப் பணிகள், ரூ.19.58 கோடி நிதியுதவியுடன் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரு கல்வியாண்டுகளில் எழுநூற்றுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டங்கள் (Doctorate Degree) பெற்றுள்ளனர்.


இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல்கலைக் கழகம் புதுப் பொலிவு பெற்று வலிமையுடன் திகழ்ந்து வருகிறது. தேசிய தரமதிப்பீட்டுக் குழுவால் ஐந்து நட்சத்திரத் தகுதியையும், பல்கலைக்கழக நல்கை ஆணையத்தால் உயர்திறன் மையம் என்ற தகுதியையும் சென்னைப் பல்கலைக்கழகம் பெற்றது. சகோதரப் பல்கலைக்கழகங்களான மும்பையும், கோல்கத்தாவும் சாதிக்க முடியாததைச் சென்னைப் பல்கலைக் கழகம் சாதித்தது. இதனை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.
 

பல்கலையின் பதிப்புத்துறை வருமானம் ஈட்டும் துறையாக மாற்றியமைக்கப்பட்டு, நூல்கள் மக்களைச் சென்றடைவதற்கான மார்க்கங்கள் உருவாக்கப்பட்டன.


அலுவலகங்களில் தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உதவிடும் வகையில் "பல்கலைக்கழக அலுவலகப் பயன்பாட்டுச் சொல்லகராதி' வெளியிடப்பட்டது. மேலும் பல அரிய தமிழ் நூல்களும், பிறதுறை நூல்களும் பதிப்பிக்கப்பட்டன.


பல பல்கலைக்கழகங்களின் அலுவலகங்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், பதிவாளர், துறைத்தலைவர் போன்ற பொறுப்பும் மதிப்பும் மிக்க பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டது தனிச்சிறப்பாகும்.
 

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டும்; பல்கலை நிதிநல்கைக் குழு, தமிழ்நாடு அரசு நிதியுதவி, பல்கலைக்கழக நிதியுதவி ஆகிய மூன்றும் சீரமைக்கப்பட்டும்; அனைத்துப் பிரிவினருக்கும் ஆய்வுக்கொடை (Fellowship) தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வழி காணப்பட்டுள்ளது. தமிழுக்கு வளம் சேர்க்கவும்; மக்கள் பயன்பாட்டிற்கு உதவிடவும்; உயர்கல்வியில் தமிழ் கொணரும் முயற்சிக்கு உறுதுணையாகவும், தமிழ்ப் பேரகராதித் திருத்தத் திட்டப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


அப்பேரகராதியில் சுமார் 4 லட்சம் சொற்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலையின் கீழைக் கலையியல் துறையில் தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றோடு பிரெஞ்சு, சமஸ்கிருதம், அராபி, பெர்சியன், உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அம்மொழிகளுக்குத் தனித்துறைகளும் அமைந்துள்ளன.
 

சென்னைப் பல்கலைத் தமிழ் மொழி வளர்ச்சி ஈடுபாட்டுடன், பிற மொழிகளைக் கற்பிப்பதிலும் ஆய்வுகளை மேற்கொள்வதிலும் பரந்த நோக்கும் நேயமும் கொண்டுள்ளது. இதுபோன்ற 21ஆம் நூற்றாண்டின் தொடக்கக்கால பணிகளை இத்தருணத்தில் எண்ணிப் பார்ப்பது, எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

நன்றி: திணமனி - Monday September 4 2006 00:00 IST


Refer this Page to your friends


Chittarkottai.com