பிரபல இத்தாலி பாதிரியார் இஸ்லாத்தை ஏற்றார்!

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் ஏற்பட்ட மனமாற்றம்.

அப்துல்அலீம் சித்தீக் - நன்றி: மக்கள் உரிமை வார இதழ்

Refer this Page to your friends

சமீபத்தில் சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல்அஜீஸ் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. தற்போது அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.

ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.

இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.

மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.

டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் டலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.

'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.

மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.

62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.

ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.

'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார்.

http://idhuthanislam.com


Refer this Page to your friends


Chittarkottai.com