குளிர்பானங்களில் நச்சுப்பொருள் பரிசோதனையில் கண்டுபிடிப்பு

நன்றி: தினத்தந்தி ஆகஸ்ட் 3.

அதிக அளவில் பூச்சி மருந்து கலப்பு


கோககோலா, பெப்சி உள்பட 11 வகை குளிர்பானங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனையில், அந்த பானங்களில் அதிக அளவில் பூச்சி மருந்து மற்றும் நச்சுப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் நச்சு பொருட்கள் கலந்து இருப்பதாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது.

மீண்டும் பரிசோதனை

அதைத்தொடர்ந்து, கடந்த 2003-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு நடந்தது. அதில் 11 வகையான மென்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்தது தெரிய வந்தது.

இந்தநிலையில் இதே பரிசோதனைக் கூடத்தில் கோககோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் உள்ள பூச்சி மருந்து பற்றி மீண்டும் பரிசோதனை நடந்தது.

அதிர்ச்சி தகவல்

இந்த பரிசோதனையில், முன்பை விட தற்போது கூடுதலான அளவில் பூச்சி மருந்துகளுகம், நச்சுப் பொருட்களும் கலந்து இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஆய்வு முடிவுகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குனர் சுனிதா நாராயண் நேற்று வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:-

24 மடங்கு பூச்சி மருந்து

கடந்த 2003-ம் ஆண்டைவிட, தற்போது நடந்த சோதனையில், கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் அதிக அளவில் நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சோதனையில் இக்கம்பெனிகளின் 11 குளிர்பான வகைகளில் இருந்து மொத்தம் 57 மாதிரிகள் இடம் பெற்றன. இவை 12 மாநிலங்களில் உள்ள 25 தயாரிப்பு மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும். இவற்றில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 24 மடங்கு கூடுதலான பூச்சி மருந்து உள்ளது.

குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட பூச்சி மருந்தின் அளவு 0.5 பி.பி.பி. (பார்ட்ஸ் பெர் பில்லியன்) ஆகும். ஆனால் புதிதாக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 11.85 அளவுக்கு பூச்சி மருந்து காணப்படுகிறது. இதில் பெப்சி கோலா பானங்களில் 30 மடங்கும், கோக கோலா பானங்களில் 27 மடங்கும் கூடுதல் நச்சுப்பொருள் உள்ளது.

5 நச்சுப்பொருட்கள்

இந்த மாதிரிகளில் லிண்டேன் (இது புற்றுநோயை உண்டாக்க கூடியது), குளோரோபைரிபிஸ், ஹெப்டாக்லார், மெலாத்தியன் மற்றும் எச்சிஎச் என்ற 5 நச்சுப்பொருட்கள் உள்ளன. 3 வருடத்துக்கு முன் நடந்த சோதனையில் மொத்தம் 4 நச்சுப்பொருள்தான் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இது 5 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஹெப்டாக்லார் இந்தியாவில் தடை செய்யப்பட்டது ஆகும். 71 சதவீத மாதிரிகளில் இது 4 மடங்கு கூடுதலாக உள்ளது.

பூச்சி மருந்துகள் நச்சுத்தன்மை வாய்ந்த சிறிய பொருட்கள் ஆகும். இவற்றால் உடலில் ஏற்படும் பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும். நம்முடைய மென்பானங்கள் பாதுகாப்பு இல்லாமலும், ஆரோக்கியமற்றதாகவும் உள்ளன.

இவ்வாறு சுனிதா நாராயணன் தெரிவித்தார்.

 Refer to your friends / Relatives