புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும் சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிநடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாகுவதோடு, மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற
இருக்கும் சகோதரர்களே!
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்
விடுத்த அழைப்பிற்காக
பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை
செலவு செய்து, உலகிலேயே முதல்
இறை இல்லமான புனித கஃபாவிற்கு
ஹஜ்ஜுக்காக செல்லும் உங்கள்
ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்ட
ஹஜ்ஜாக இருக்கவும், அப்புனித
இல்லத்தில் நீங்கள் எமக்காக
பிரார்த்திக்கவும் முடியுமான
அளவு முயற்சிகள் செய்து,
அல்குர்ஆன், ஆதாரபூர்வமான
ஹதீஸ்களில் இருந்து ஹஜ்,
உம்ரா, ஸியாரத் பற்றிய
விளக்கக் குறிப்பேட்டை
எடுத்தெழுதியுள்ளோம்.
இங்கு எந்த மத்ஹபையும் சாராது முன்வைக்கப்படும் செய்திகளால் சில வேளை அது சார்ந்தோருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் அதில் உண்மைக்குப் புறம்பானவைகளோ, அல்லது இஸ்லாத்திற்கு முரணான செய்திகளோ கிடையாது. நமது இக்குறிப்பேட்டில் காணப்படும் செய்திகள் நாமறிந்தவரை அல்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் உடன்பட்டவையாகவே காண்கின்றோம்.
ஆகவே, இதில் உள்ளவற்றை நீங்கள் மிகக்கவனமாகவும், நிதானமாகவும் படியுங்கள், ஆதாரமற்றவை என உங்களால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்படுபவை -இன்ஷா அல்லாஹ்- திருத்திக் கொள்ளப்படும்.
ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது . உங்களின் ‘ஹஜ்” அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும்.
பல அறிஞர்களின் நூல்களின்
துணை கொண்டே இது
தொகுக்கப்பட்டுள்ளது. உங்கள்
மனங்களைப் புண்படுத்தும்
நோக்குடன் மத்ஹப், மௌலவி என்ற
சொற்பிரயோகங்கள்
ஆளப்படவில்லை.
இதைப்படித்து அமல் செய்யும்
பாக்கியம் பெறும் நீங்கள்
ஹஜ்ஜின் இறுதியில் இதன்
நன்மைகள் பற்றி பேசுவீர்கள்.
அல்லாஹ்விடம் எமக்காக
நிச்சயம் பிரார்த்தனையும்
செய்வீர்கள். அதையே நாம்
உங்களிடம்
எதிர்பார்க்கின்றோம்.
அல்லாஹ் நம்மனைவரையும்
பொருந்திக் கொள்வானாக!
மார்க்கத்தில் அனைவருக்கும்
அல்லாஹ் விளக்கத்தை தருவானாக!
இவண்:-
எம். ஜே. எம். ரிஸ்வான்
(மதனி).
மொபைல்:-0094773730852
————————————————————————————————————————————–
ஹஜ் பயணத்திற்கு முன் :
பணம் தூயவழியில் பெறப்பட்டதா?
என பரிசோதனை செய்தல்.
தூய முறையில் பெறப்பட்ட
பணத்திலே ஹஜ் செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் அருட்பாக்கியம்
பெற்ற மக்களைத்தவிர ஏனையோர்
இந்த விஷயத்தில் தமது
பொருளீட்டல் முறைபற்றி
பரிசோதிக்க வேண்டியர்களே! பிற
மனிதர்களிடம் சுரண்டப்பட்ட
பணங்கள் மீட்டப்படல்
வேண்டும். அநீதி
இழைக்கப்பட்டோரிடம்
மன்னிப்புக் கோர வேண்டும்,
இனியும் இவ்வாறான பாவங்கள்
பக்கம் மீள்வதில்லை என
உறுதிபூண வேண்டும்.
அல்லாஹ்வுக்காக
நிறைவேற்றுதல்.
அல்லாஹ்வுக்காக அல்லாது
பிறருக்காக செய்யப்படும்
வணக்கங்களின் முதல் நிலையில்
புனித ஹஜ் ஆகிவிட்டதோ என
எண்ணத்தோன்றுகின்றது.
ஹாஜியார், ஹாஜி, ஹாஜிம்மா,
ஹாஜியானி, அல்ஹாஜ் போன்ற
நாமங்கள் சமுதாயத்தில் பவணி
வருவதைப்பார்த்தால் ஹாஜிகளின்
முகஸ்துதியின் யதார்த்த
நிலையைப் புரிந்து
கொள்ளலாம். ஹாஜிகள்
வீடுவீடாகச் சென்று
மன்னிப்புக்கோரும் போதும்,
பள்ளிகளில் ஹஜ்ஜுக்கான
முஸாபஹா செய்கின்ற போதும்
தற்பெருமை அற்றவர்களாக
இருப்பார்களா?
“ஹஜ்” மற்றும் ‘உம்ரா” பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன், وأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ ‘ஹஜ்ஜையும், உம்ராவையும், அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள்” என்று குறிப்பிடுகிறது. ஒருவர் இக்கடமையினை அல்லாஹ்வுக்காகவே நிறைவு செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்தவில்லையா?
நபி வழிமுறை பற்றி அறிந்து
செயற்படுதல்.
இதில்தான் ஒரு ஹாஜியின்
ஹஜ்ஜின் திருப்தி
தங்கியுள்ளது. இதில்
அதிகமானோர் குறைவு செய்வதையே
அவதானிக்க முடிகின்றது.
ஒவ்வொருவரும் தான் கொண்ட
கொள்கை, அல்லது மத்ஹபு
அடிப்படையில் மக்களை ஹஜ்
செய்ய பயிற்றுவிக்கிறார்களே
அன்றி மாநபியின் வழியில்
பயிற்றுவிக்கப்படுவதாக
அறியோம்.
நபி (ஸல்) அவர்கள் செய்தது ஒரேயொரு ஹஜ்ஜுதான். ஆனால் அதில் நூற்றுக்கணக்கான வழிமுறைகள் பதிவு செய்யப்படடிருப்பதை பார்க்கின்ற போது நமது ஹாஜிகளை வழி நடத்தும் முகவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ( صحيح مسلم )
இறுதி ஹஜ்ஜின் போது மக்களிடம், ‘நீங்கள் உங்கள் ஹஜ்ஜுக்கான வணக்க முறைகளை (என்னில் இருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).
நபியைப் போன்று ‘ஹஜ்” செய்ய வேண்டியதன் அவசியத்தை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த பின்வரும் நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.
…أَخْبِرْنِي عَنْ حَجَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِيَدِهِ فَعَقَدَ تِسْعًا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَثَ تِسْعَ سِنِينَ لَمْ يَحُجَّ ثُمَّ أَذَّنَ فِي النَّاسِ فِي الْعَاشِرَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجٌّ فَقَدِمَ الْمَدِينَةَ بَشَرٌ كَثِيرٌ كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَعْمَلَ مِثْلَ عَمَلِهِ (مسلم)
முஹம்மத் பின் அலி பின் ஹஸன் என்பவர் ஜாபிர் (ரழி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கேட்டார். அதற்கு அவர்கள், (ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காக) ஒன்பது முறை தனது கையை (விரல்களை) மடக்கிக் காட்டி, ஒன்பது ஆண்டுகள் நபி (r) அவர்கள் ‘ஹஜ்” செய்யாது இருந்தார்கள். (ஹிஜ்ரி) பத்தாவது வருடம்தான் ‘ஹஜ்” செய்யப்போவதாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிடவும், அவர்கள் அமல் செய்வது போன்று அமல் செய்யவும் (மதீனாவை நோக்கி) பெரும்திரளான மக்கள் வந்து சேர்ந்தனர் … (முஸ்லிம்).
எனக் குறிப்பிடும் ஜாபிர் (ரழி) அவர்களின் மேற்படி செய்தியை அவதானித்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வாறு ஹஜ் செய்தார்களோ அதே போன்று ஹஜ் செய்வதாலேயே அதன் பரிபூரண நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். என்பதை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் விளங்கிய காரணத்தினால்தான் பெரும் திரளான மக்கள் ‘ஹஜ்” செய்வதற்காக மதீனாவில் நபியுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பதை விளங்கலாம்.
இதை விடுத்து, ‘நமது மத்ஹபே நமக்குப் புகலிடம்” என்ற நிலையில் ‘மத்ஹப்” சார்ந்த மௌலவிகள் தமது ஹாஜிகளுக்கு குழப்பமான கருத்துக்களை போதிப்பதால் நபி வழிக்கு முரணான பல வழிமுறைகள் அப்புனித பூமியில் அரங்கேற்றப்படுவதை பார்க்கிறோம். அந்த நிலை மாறுவதற்காக ஹஜ்ஜில் நபியின் வழிமுறை பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.
ஹஜ்ஜின் அவசியம்.
ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும்
கடமைகளில் ஒன்றாகும்.
மக்காவில் இருக்கும் புனித
கஃபா ஆலயத்தையும், அங்குள்ள
புனித இஸ்லாமியசின்னங்களை
பிரதானப்படுத்தியும்
மேற்கொள்ளப்படும்
இவ்வணக்கத்தை, அவ்வில்லம்
சென்று நிறைவேற்ற சக்தியும்,
வசதியும் பெற்ற, வயது வந்த
ஒவ்வொரு முஸ்லிமும்
வாழ்நாளில் அவசியம் ஒரு தடவை
மிகவிரைவாக நிறைவேற்றுவது
கடமையாகும்.
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ [آل عمران : 97
மனிதர்களில் அல்லாஹ்வின் (இல்லத்திற்கு சென்றுவர) வசதி பெற்றோர் அவ்வில்லத்தை ஹஜ் செய்வது அவர்கள் மீது கடமையாகும். (அத்: ஆலுஇம்ரான். வச: 97)
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ (متفق عليه)
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. (அவை) உண்மையாக வணங்கப்படுவதற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு லயாரும் இல்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமவார்கள், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகியனவாகும். (புகாரி, முஸ்லிம்).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا ( مسلم)
எமக்கு பிரசங்கம் நிகழ்;த்திய நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆகவே விரைந்து ஹஜ் செய்யுங்கள்” என கட்டளையிட்டார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).
மேற்படி கடமையினை ஒருவர் திடகாத்திரமாகவும், உடல்வலிமையோடும் இருக்கின்ற போது செய்கையில் அலாதியான திருப்தி அடைவார். காலம் தாழ்த்தி, வயதான பின்னர் செய்கின்ற போது ஏதோ கடமை முடிந்து விட்டதுதானே என பெருமூச்சு விடுவார் அவ்வளவுதான். அதனால் விரைந்து இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ்ஜின் சிறப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ (متفق عليه)
ஒரு உம்ரா, மறு உம்ரா வரையுள்ள சிறுபாவங்களுக்குப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனமாகும். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி , முஸ்லிம்).
… أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ (مسلم )
‘இஸ்லாம்” அதற்கு முன்னால் உள்ள பாவங்களை அழித்துவிடும், ‘ஹிஜ்ரத்” அதற்கு முன்னர் உள்ள பாவங்கைள அழித்துவிடும், ‘ஹஜ்” அதற்குமுன்னருள்ள பாவங்களை அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ், உம்ராவின் சிறப்பை எடுத்துக் கூறும் ஆதாரபூர்மான பல நபி மொழிகள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் விரிவை அஞ்சி இந்த ஹதீஸுடன் போதுமாக்கிக் கொள்வோம்.
வருடந்தோறும் ஹஜ் செய்வது கடமையா?
வாழ்நாளில் ஒரு தடைவ ஹஜ் செய்வதே கடமை. வருடாவருடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின்வரும் நபிமொழியின் மூலம் உறுதி செய்யலாம்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا فَقَالَ رَجُلٌ أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ وَلَمَا اسْتَطَعْتُمْ (مسلم)
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில் மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி உள்ளான். ஆகவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! வருடந்தோறுமா ? (செய்யவேண்டும்)? ஏனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் எதுவும் பேசாது, அவர் மூன்று தடவைகள் கேட்கும் வரை மௌனமாக இருந்து விட்டு, ‘நான் ஆம் (கடமைதான்) எனக் கூறினால் அது கடமையாகி விடும், நீங்கள் அதனை நிறைவு செய்ய சக்தி பெறமாட்டீர்கள்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
இயலாத பெற்றோருக்காக பிள்ளைகளின் ஹஜ்
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ سَأَلَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ جَمْعٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ فَرِيضَةُ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَمْسِكُ عَلَى الرَّحْلِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ (بخاري) وفي رواية له :- وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ (متفق عليه)
‘ஹஸ்அம்” கோத்திரத்தைச்
சேர்ந்த பெண்மணி ஒருவர்
அல்லாஹ்வின் தூதரிடம் வந்து
‘அல்லாஹ்வின் தூதரே, ஹஜ்
அல்லாஹ்வின் அடியார்கள்
மீதுள்ள அவனது கடமையாக
இருக்கின்றது. எனது தந்தை
வாகனத்தில் அமர முடியாத அளவு
முதியவராக இருக்கின்றார்.
ஆகையால் அவருக்காக நான் ஹஜ்ஜை
நிறைவேற்றலாமா?” எனக்
கேட்டார். ‘ஆம். அவருக்காக நீ
ஹஜ் செய்து கொள்” என நபி
(ஸல்) அவர்கள் பதில்
கூறினார்கள். (புகாரி,)
புகாரியின் மற்றொரு
அறிவிப்பில், இது ‘ஹஜ்ஜத்துல்
வதா” வில் நபி (ஸல்)
அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது
நடை பெற்றதாகும் எனக்
கூறப்பட்டுள்ளது.
நிபந்தனை
ஒருவர் தனது
பெற்றோருக்காக, அல்லது
உறவினர்களுக்காக ஹஜ்
செய்வதாயின் அவர் முதலாவதாக
தனக்குரிய ஹஜ்ஜை நிறைவேற்றி
இருக்க வேண்டும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ مَنْ شُبْرُمَةُ قَالَ أَخٌ لِي أَوْ قَرِيبٌ لِي قَالَ حَجَجْتَ عَنْ نَفْسِكَ قَالَ لَا قَالَ حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ (أبوداود)
ஒருமனிதர் ‘லைப்பைக்க -அன்- ஷுப்ருமா” இது ‘ஷுப்ருமா என்பவருக்கான” ஹஜ், எனக் கூறியபோது ‘யார் அந்த ஷுப்ருமா என நபி (r) அவர்கள் வினவினார்கள். அவர், ‘எனது சகோதரர், அல்லது உறவினர் எனப் பதில் கூறினார். நீ உனக்காக ஹஜ் செய்து விட்டாயா?” எனக் கேட்டார்கள். ‘இல்லை” என்றதும் (முதலில்) உனக்காக ஹஜ் செய், பின்வருங்காலங்களில் ஷுப்ருமாவிற்காக ஹஜ் செய் எனக் கூறினார்கள். (அபூதாவூத்)
மஹ்ரமின்றி
ஒருபெண்ணோ, அல்லது பல பெண்களோ
தனித்து ஹஜ்ஜுக்காக செல்ல
முடியுமா?
ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும்
பிரதான கடமைகளில் ஒன்றாகும்.
அதனை ஒரு ஆண் தனிமையாக
நிறைவேற்ற அனுமதி இருப்பது
போன்று ஒரு பெண் செய்ய
மார்க்கத்தில் அனுமதி இல்லை.
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً وَاكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا قَالَ ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ (متفق عليه)
நபி (ஸல்) அவர்கள் ஒரு
நாள் தனது உரையில், ‘அந்நிய
ஒரு பெண்ணுடன் எந்த ஒரு ஆணும்
தனித்திருக்க வேண்டாம்”,
மஹ்ரம் (மணம் முடிக்க
மார்க்கத்தில் தடை
செய்யப்பட்டவர், அல்லது
கணவர்) உடனே அன்றி பயணம்
செய்ய வேண்டாம் எனக் கூறியதை
செவிமடுத்த ஒரு மனிதர்
எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே!
நான் இன்ன, இன்ன போர்களில்
கலந்து கொள்ள வேண்டும் எனப்
பதியப்பட்டிருக்கிறேன், எனது
மனைவியோ ஹஜ் செய்வதற்காக
புறப்பட்டு சென்று விட்டார்
என்றார். ‘உடன் திரும்பிப்
போய், உனது மனைவியுடன் ஹஜ்
செய்” எனப் பணித்தார்கள்.
(புகாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே
ஒரு பெண்ணோ, அல்லது பல
பெண்களோ (திருமணம் முடிக்க
தடை செய்யப்பட்ட) மஹ்ரமான
ஆண்கள் துணையின்றி தனிமையில்
ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ
செல்லக் கூடாது எனக்
கூறுகின்றோம்.
இதற்கு தவறான வியாக்கியானம்
செய்யும் ஷாஃபிமத்ஹபைச்
சார்ந்தோர் ‘நம்பகமான பெண்கள்
பலருடன் சேர்ந்து ஒரு பெண்
ஹஜ்ஜை நிறைவேற்றலாம்” என
வாதிடுகின்றனர். ஒரு பெண்
தனிமையில் பள்ளிக்குச் சென்று
தொழுகையை நிறைவேற்றுவது
போன்று ஹஜ் செய்யச்
செல்லலாமா? முடியாதா என்ற
வாதப்பிரதிவாதங்கள் மார்க்க
அறிஞர்கள் வட்டத்தில்
காணப்பட்டாலும் ‘மஹ்ரம்” என்ற
ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே
நபி (ஸல்) அவர்கள்
கட்டாயப்படுத்தி இருப்பதைப்
பார்க்கின்றோம். ஒரு பெண்
மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய
முடியாது என்பதையே நாம்
சரியான கருத்தாகவும்
கொள்கின்றோம்.
ஐயம்: ஹஜ்குழுவினர் சிலர்,
தமது ஹஜ் குழுவுடன் ஒருவரை
அதிகரித்துக் கொள்வதற்காக,
தமது வசதிக்காக பெண்கள்
பலருடன் ஒரு பெண் செல்வதில்
தவறில்லை என்கின்றனர்.
உண்மையில் இக்கூற்றிற்கு
அவர்கள் சார்ந்திருக்கும்
மத்ஹபின் பெயரால்
எழுதப்பட்டுள்ள
கருத்துக்களும் ஒரு காரணமே!
மேலும், குர்ஆன், சுன்னாவைப்
பின்பற்றும் சிலர் ஒருபடி
மேலே சென்று ஒரு சில
அறிஞர்கள் தனிமையாக ஹஜ்
செய்யலாம் என்பதற்கு ‘அதிய்யே
அல்ஹீரா என்ற
நகரைப்பார்த்திருக்கிறாயா?
நான் அதைப்பார்த்தில்லை. அது
பற்றி கேள்விப்பட்டுள்ளேன்
எனக் கூறினேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் அவர்கள்
‘நீ நீண்ட காலம் வாழ்ந்தால்
தனது ஒட்டகத்தில் பயணம்
செய்யும் ஒரு பெண் அந்த
அல்ஹீராவில் இருந்து கஃபா வரை
வந்து (தன்னந்தனியே) தவாஃப்
செய்வாள். அல்லாஹ்வைத்தவிர
வேறு யாரையும் அவள்
அஞ்சமாட்டாள்.” (புகாரி 3328)
எனக் கூறிய அதிய் பின் ஹாதிம்
(ரழி) அவர்கள் அறிவிக்கும்
செய்தியை ஆதாரமாகக் கொண்டு
ஒரு பெண் ஹஜ்ஜுக்காக
தனிமையில் பயணம்
மேற்கொள்வதில் தவறில்லை
என்கின்றனர்.
விளக்கம்: நம்பகமான
பெண்களுடன் செல்லலாம் என்றால்
ஏன் அந்த நபித்தோழரை அவரது
மனைவியுடன் ஹஜ்ஜை
நிறைவேற்றும்படி நபி (ஸல்)
அவர்கள் பணித்தார்கள்.? நபி
(ஸல்) அவர்களின் காலத்தில்
வாழ்ந்த ஆண்களையும்,
பெண்களையும் விடவுமா
இந்தக்காலத்துப் மக்கள்
நம்பிக்கையிலும்,
நாணயத்திலும் உயர்ந்தவர்களா
!!!
அதி பின் ஹாதிம் (ரழி)
அவர்களின் ஹதீஸ் அச்சம், பீதி
அற்ற ஒரு காலத்தை அதுவும்
முன்னறிவிப்பு ஒன்றைக்
குறிக்கின்றது. நபி (ஸல்)
அவர்களின் காலத்தில் நடை
பெற்ற வழிப்பறிக் கொள்ளை,
வறுமை ஆகியவற்றை முறைப்பாடு
செய்த போதே இந்த
முன்னறிவிப்பைக் கூறினார்கள்.
தனது காலத்தைக்கூட அச்சம்,
பீதி, வறுமை அற்ற காலம் எனக்
கூறவில்லை.
மாற்றமாக அதை ஒரு
முன்னறிவிப்பாகவே
கூறினார்கள். அது அதிய் (ரழி)
அவர்களின் வாழ்நாளிலேயே
நடந்தேறியது. இதை
உண்மைப்படுத்தும் வகையில்
அதன் அறிவிப்பாளரான அதிய்
(ரழி) அவர்கள் இது
பற்றிக்குறிப்பிடுகின்ற போது,
‘ஒரு பெண் ஒட்டகத்தில் ஏறி
அந்த அல்ஹீராவில் இருந்து
கஃபாவரை வந்து (தனிமையாக)
தவாஃப் செய்வதைக் கண்டேன்.
அல்லாஹ்வைத்தவிர வேறு
யாரையும் அவள் அஞ்சமாட்டாள்”,
என
குறிப்பிடுகிறார்கள்.(புகாரி).
இப்படியான காலத்துடன்
கொலைகளும், கொள்ளைகளும்
மலிந்து காணப்படும்
இந்தக்காலத்தை ஒப்பிடலாமா
என்றால், அனைவரும் இல்லை!
என்றே கூறுவர். உலகில்
அச்சமற்ற நாடுகளில் முன்னணி
நாடு என போற்றப்படும் சவூதி
அரேபியாவில் கூட கணவனுடன் ஹஜ்
செய்யச் சென்ற பெண்கள் பலர்
கடத்திக் கற்பழிக்கப்பட்டு,
கொலை
செய்யப்பட்டிருக்கின்றனர்
என்றால் நடந்தேறிய
முன்னறிவிப்பைக் கொண்டு
பெண்கள் தனிமையில் ஹஜ்
செய்யலாம் என முடிவு செய்வது
ஹதீஸுக்கு உடன்பாடான
விளக்கமாகத் தெரியவில்லை.
ஐயம். அன்னை ஆயிஷா (ரழி)
அவர்கள் ஜமல் போரின் போது
கூபா நோக்கி
பயணித்துள்ளார்களே! நாம்
ஹஜ்ஜுக்காக செல்வதை எவ்வாறு
தவறாகக் கொள்ள முடியும் ?
தெளிவு:- இது அவர்களின்
தனிப்பட்ட ஒரு முடிவாகும்.
நபித்தோழர்கள் பலர் இதனை
விரும்பவில்லை. அப்படி
இருந்தும் இஸ்லாத்தில் சமரசம்
செய்துவைத்தல் விரும்பத்தக்க
செயல் எனக் காரணம் காட்டியே
அவர்கள் அவ்வாறு புறப்பட்டதாக
வரலாறு சொல்கிறது. அத்துடன்,
பிற்காலத்தில் தனது
இந்தத்தவறை உணர்ந்த அன்னை
அவர்கள் அவர்களது முந்தானை
நனையும் அளவு அழுது கண்ணீர்
வடித்துள்ளார்கள் என
ஆதாரபூர்வமான செய்திகள்
குறிப்பிடுவதைக் கவனித்தால்
இது போன்ற செய்திகள்
ஆதாரமாகக் கொள்ள முடியாதவை
என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்களின் மேற்படி
கட்டளையை மீறி ஸஹாபிப்
பெண்கள் யாராவது இவ்வாறு
சென்றிருப்பார்களாயின்,
அவர்கள் என்ன ஆதாரத்தின்
அடிப்படையில் சென்றார்கள்
என்பதைக் கவனிக்க வேண்டும்.
பின் அவர்களின் விருப்பம்
மார்க்கமாக முடியாது
என்பதையும் முடிவு செய்ய
வேண்டும்.
தமது மனைவியர் மாற்றானுடன்
புன்முருவல் பூப்பதையே
விரும்பாத இம்மேதாவிகள்,
மாற்றான் மனைவி தனது
குரூப்பில் இணைந்து ஹஜ்
செய்வதை அனுமதிக்கிறார்கள்
என்றால் அதில் உலகியல்
இலாபமின்றி வேறு என்னதான்
இருக்க முடியும்?
தொடரும்...