|
முன்னோடி சமுதாய எழுத்தாளர் ஷாஹா சிங்கப்பூர் வருகை |
இராமனாதபுரம்
மாவட்டம், சித்தார் கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ்.எம். ஷாஹ¤ல்
ஹமீது என்ற ஷாஹா அவர்கள். 91 வயதினையுடைய ஷாஹா அவர்கள் தமது குடும்பத்தினருடன்
மியான்மர் (பர்மா) நாட்டின் யாங்கோன் (ரங்கூன்) நகரில் வாழ்கிறார்கள்.
அவர்கள் கடந்த ஜூன் 12 முதல் ஜூலை 5 2009 முதல் வரை சிங்கப்பூருக்கு அவர்களது புதல்வர் கமால் ஷாஹாவுடன் வருகை புரிந்தார்கள்.
அவர்களது தாய்மாமா மகனான சமுதாய எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் இல்லத்தில் தங்கியிருந்த அவர்களை சிங்கப்பூர் சமுதாயப் பிரமுகர்கள் சந்தித்து அளவளாவி அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.
பீச் ரோடு ஹஜ்ஜா பாத்திமா பள்ளிவாசலில் ஜூன் 21 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார்கள். புதியநிலா சிறப்பாசிரியரும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத் தலைவருமான ஜனாப் மு. ஜஹாங்கீர் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்த, மூத்த சமுதாய எழுத்தாளர் ஹாஜி ஜே.எம்.சாலி அவர்கள் பொன்னாடை அணிவித்தார்கள். ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கப் பிரமுகர் ஜனாப் இக்பால் உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் ஷாஹா அவர்கள் ரங்கூன் சோலியா முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்த போது மாணவர்கள் மனதில் பதியும் வகையில் எளிமையாக எழுதிப் பயிற்றுவித்த இஸ்லாமிய அடிப்படை விழுமியங்கள் பற்றிய கவிதைகள் அச்சிடப்பட்டு வந்திருந்தவர்களுக்கு வழங்கப் பட்டது.

ஷாஹா அவர்கள் 1941-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர்கள்.
தமிழில் அழுத்தமான முஸ்லிம் சமூகநாவல்களை முதலில் தந்த பெருமை ஷாஹாவையே சாரும்.
இன்பவேதனை, பாசக்கடல், அன்னை பூமி ஆகிய 3 நாவல்களை மணிவிளக்கிலும், மலர்மாலை நாவலை முஸ்லிம் முரசிலும் தந்த அன்னார் சுமார் 50 சிறுகதைகளை முஸ்லிம் முரசு, மணிவிளக்கு, அமுதசுரபி, சுதேச மித்திரன், மர்ஹும் மஹதி (கவிக்கோவின் தந்தையார்) அவர்களின் இஸ்லாமியச் சோலை ஆகிய இதழ்களின் தந்திருக்கிறார்.
அன்னாரின் சிறுகதைகள் சில உர்து, ஹிந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஸரிகா போன்ற பிரதம வட இந்திய இதழ்களின் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஷா அல்லாஹ் அவர்களது ஆக்கங்கள் விரைவில் மல்லாரி பதிப்பகம் மூலம் வெளியீடுகாணவுள்ளன.