நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

ஹிமானாசையத் பதில்கள்

1987 முதல் வாசக அன்பர்களின் கேள்விகளுக்கு பத்திரிக்கைகளின் வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறேன். உடல்நலம், அரசியல், ஆன்மீகம்,  சமூகநலம், கல்வி, மார்க்க நடைமுறை, உலகநடப்பு, தனிப்பட்ட வாழ்வியல் பிரச்சினைகள், தற்கால இலக்கியம், சர்வதேச அளவில் முஸ்லிம்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் என்று அது ஒரு பரந்த பரப்பிலானது. இதுவரை சுமார் 10,000 பத்தாயிரம் பதில்கள் சொல்லப்பட்டிருக்கலாம். இவற்றில் உடல்நலம் சம்பந்தப்பட்ட பதில்கள்கள் மட்டும் "பொது மருத்துவம் கேள்விபதில்" என்று தலைப்பில் நூலாகியது. இவை அனைத்தையும் நூலாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை விளக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

இங்கே உங்களுக்காக அவ்வப்போது சில முக்கியமானவற்றை மட்டும் தொகுத்துத்தர விழைகிறேன். தமிழகத்தில் இப்போது ரொம்ப ரொம்ப சூடான விஷயம் சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் கைது விவகாரந்தான்.அதிலிருந்தே தொடங்குவோமே!


13.கேள்வி: கிறுஸ்துவர்களுக்கு போப் தலைவராக இருப்பது போல் நமக்கு தலைவர் இருக்கிறாரா என்று என் மகன் கேட்கிறான். எனக்கு சொல்லத் தெரியவில்லை, நீங்கள் கூறுங்களேன்? - நௌஷாத், திருச்சி.

பதில்: உங்கள் மகனின் மனதில் இஸ்லாத்தின் தனித்தன்மையைப் பதிய வைக்க இதுதான் நல்ல தருணம். இஸ்லாத்தின் தலைமைத்துவம் இறுதி நபியாக வந்த முகம்மத் நபி (சல்) அவர்களுடன் முடிவு பெற்றுவிட்டது என்பதைச் சொல்லி விளக்குங்கள். அவர்கள் வாழ்ந்த படியும், சொன்னபடியும் வாழ்வதில்தான் ஒரு முஸ்லிமுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியிருக்கிறது என்பதை அழுத்தமாக அவனது நெஞ்சில் எழுதுங்கள்.


14. நமது உயர்கல்வி அமைப்பின் பலம் என்ன?  ஹாஜி முபாரக் அலி, சென்னை- 1

பதில்:  நான் சொல்வதை விட
முன்னாள் துணைவேந்தர் திரு மு.அனந்த கிருஷ்ணன சொல்வதைக் கேளுங்கள்:

  • "கடந்த 10 ஆண்டுகளில் நமது உயர்கல்வி மிகப் பெரிய அளவுக்கு விரிவாக்கம் பெற்றுள்ளது. மொத்தமாக 350 - க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களும், 15000 கல்லூரிகளும் இருந்த போதும், ஒரு 40- 50 பல்கலைக் கழகங்களும், சுமார் 1000 கல்லூரிகளும் மட்டுமே உலக அளவில் மற்றவர்கள் மதிப்பைப் பெறத்தக்க தரத்தில் – அளவில் கல்வியை வழங்கக் கூடியவையாக உள்ளன.

  • தமிழ்நாட்டில் உள்ள 265 பொறியியல் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகள் 15 மட்டுமே! இவற்றில் மட்டும்தான் குறைந்த கட்டணம்.....  கலப்படம் செய்யும் வியாபாரி மீது மட்டும் நடவடிக்கை - ஆனால், தரம் குறைந்த தனியார் கல்லூரிகளின் மீது நடவடிக்கை இல்லை.... ஒரு தனியார் பல்கலைத் துணை வேந்தர் தானே அரசியல் கட்சியே நடத்துகிறார்!”

என்று மனம் நொந்து பேசியிருக்கிறார் அவர். அவரே இதைச் சரி செய்ய வழியும் சொல்கிறார்:
மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டுத்தான். ஆனால், தேர்தலில் தரமான கல்வி எப்போதுமே முன்னிருத்தப் படுவதில்லை. அந்த நிலை வரும் வரை மாற்றத்துக்கு வழியில்லை என்கிறார் அவர்.


15. தமிழர் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்றுள்ளாரே? குறைஷா பீவி, ஹோசூர்; ரஹிம், தஞ்சாவூர்

பதில்: ஆம். 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். அதில் 42 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முதலிடம் நம் நாகராஜனுக்கு!. இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு இப்பெருமையை வாங்கித் தந்திருக்கிறார். 4 - வது முறையாக அவர் விடாது முயன்று இந்த வெற்றியை எட்டியிருக்கிறார்.


16. சமீபத்தில் கவனத்தைக் கவர்ந்த விசயம்? ஹஸன் ஃபாத்திமா, காயல்பட்டினம்

பதில்: அன்மையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் மைதிலி சிவராமன் உள்ளிட்ட நாட்டின் தலை சிறந்த பெண்ணிய வாதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரின் பேச்சிலும் விரக்தியே மிஞ்சி நின்றது. காங்கிரஸ் எம்.பி.யும் – முக்கியத் தலைவியுமான திருமதி ஜெயந்தி நடராஜன் ஒரு முறை பார்லிமெண்டில் பேசிய போது அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாத ஒரு எம்.பி. “ நீங்கள் எப்படி எம்.பி. ஆனீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று கொச்சையாய்ப் பேசி அதிர வைத்தாராம்.
அடித்துக் கொடுமைப் படுத்தும் கணவனைப் பற்றி கம்ப்லைண்ட் கொடுக்கப் போன பெண்ணிடமே “இது ஒரு கம்ப்லைண்டா? நானே என் பொண்டாட்டியை அடித்து விட்டுத்தான் ஆஃபிஸுக்கு வந்தேன்” என்று அலட்சியமாய் ஒரு காவல் துறை பெரிய அதிகாரியே சொன்னாராம்.


17. டிவி-யில் மெகாத்தொடர் பார்ப்பதுண்டா?  மெட்டிஒலி எப்படி? தாஹா கமால், கோவில்பட்டி; ஷரீபா அபுல் ; பரகத் பானு, கோவை - 2 ; பாத்திமா, கீழக்கரை; ரஹ்மத், ராம்னாட்; உம்முகுல்தும், கும்பகோணம், மற்றும் 20 –க்கும் மேற்பட்ட வாசகர்கள் மெட்டி ஒலி பற்றிக் கேட்டிருக்கிறார்கள்

பதில்: டிவி தவிர்க்க முடியாத பூதமாகி விட்ட நிலயில் தமிழ் சினிமாவை விட அது மேல் என்ற ஆறுதல்! அவ்வப்போது பிரபலமாகப் பேசப்படும் ஒரு சில தொடர்களை வாய்ப்பு நேரும்போது பார்ப்பதுண்டு. மெட்டி ஒலி பார்த்த ஆயிஷா, அபிராமம், கும்பகோணம் உம்முகுல்தும், மற்றும் சிலர் -
நர்கிஸில் 1996 தொடங்கி 99 - இல் நிறைவுபெற்ற “கண்மணி கண்மணி’ மருமகள் ‘சல்மா’வையும்- மாமியார் ‘மைமூனா’வையும், மெட்டி ஒலி மருமகள் சரோவுடனும், மாமியார் ராஜத்துடனும்; கண்மணி முஸ்தபாவை- மெட்டி ஒலி மாணிக்கத்துடனும் ஒப்பிட்டு பிரமாதமாக எழுதியிருக்கிறார்கள். நன்றி.

சல்மா போல எந்த மருமகளும் பொறுமையாக இருக்க முடியாது என்று வாதித்தவர்கள் உண்டு. மெட்டி ஒலி இதற்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறது. நல்ல வேளை
கண்மணி மெட்டி ஒலி வருவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இல்லையென்றால் கண்மணி மெட்டி ஒலியின் காப்பி என்று கூட ஒரு சிலர் சொல்லி விடுவார்கள். கண்மணி நாவலை பைன்ட் செய்து வைத்திருப்பவர்கள் - அல்லது நூல் வைத்திருப்பவர்கள் சல்மாவின் கிளைமாக்ஸ் குமுறலையும் – சரோவின் கேள்விக்கணைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். மல்லாரி பதிப்பகத்தில் ஒரு சில பிரதிகள் கிடைக்கலாம்.


18. நோய் எதிர்ப்புச் சக்தி என்றால் என்ன? முகம்மத் காஸிம், பரங்கிப்பேட்டை

பதில்: மனித உடலை இடைவிடாமல் நோய்கள் தாக்கிக் கொண்டே உள்ளன. இந்த நோய்களை உண்டாக்குபவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமல் நம் உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள்தான். அவற்றில் முக்கியமானவை பாக்டீரியா, வைரஸ், மற்றும் ஃபன்கஸ் . இவை உடலுக்குள் நுழைந்தவுடன் தங்களது தீய நடவடிக்கைகளைத் தொடங்கி விடுகின்றன. ஆனால், அல்லாஹ் அவற்றை எதிர்த்துப் போராட நமக்குள்ளேயே எதிர்ப்பு மண்டலம் ஒன்றையே படைத்துவைத்திருக்கிறான். அதில் தோல், எலும்பு மஞ்ஜை, மண்ணீரல், , ரத்தத்தின் வெள்ளை அணுக்கள், தைமஸ் என்ற சுரப்பி, நிணநீர் முடிச்சுகள் போன்றவை அடங்கும். இந்த மண்டலம் நம் உடலுக்குள் நுழையும் தீங்கிழைக்கும் எந்தப் பொருளையும் உடனே ஏற்றுக் கொள்ளாது. அதை எதிர்த்துப் போராடும். முக்கியமாக வெள்ளை அணுக்கள் போர் வீரர்களைப் போன்றவை. அந்தப் போரில் எதிர்ப்பு சக்தி ஜெயித்தால் நோய் பாதிப்பில் இருந்து மீள்கிறோம். நோய் வெளிப்பாடு வெளியே தெரியாமலே மறைந்து விடுகிறது. அந்தப் போரில் கிருமிகள் ஜெயித்தால் நாம் நோயில் படுத்து விடுகிறொம். அதன் கை ஓங்கி விடுகிறது. இந்தப் போராட்டம் தான் “நோய் எதிர்ப்புச்சக்தி" என அழைக்கப் படுகிறது. இதனால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி நோய் "எதிர்ப்புத்தன்மை" என்று அழைக்கப்படுகிறது


b  முந்தைய பகுதி

அடுத்த பகுதி..a

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

Chittarkottai.com