இரு காட்சிகள்

Refer this Page to your friends

நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. 10 சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ள நான் ஒரே ஒரு கவிதை நூலைத்தான் , என் மல்லாரி பதிப்பகத்தின் மூலம் தந்திருக்கிறேன். அந்த "இருகாட்சிகள்" நூலிலிருந்து சில காட்சிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதைப்பற்றி, மறைந்த இறையருட்கவிமணி, பேராசிரியர், கா.அப்துல் கபூர், எம்.ஏ.; டி.லிட். அவர்கள் எழுதிய சில வரிகளை முன்னுரையாக வைப்பதில் மகிழ்ச்சி. "

இந்த நூலில் 'இருகாட்சிகளாக ஹிமானாசையத் காட்டும் காட்சிகள் ஒரு புதிய இலக்கிய வடிவம். இதில் ஒரு சமகால சமுதாயச்சிறுகதை, ஒரு வரலாற்றுச் சிறுகதை இரண்டையும் பிசிறில்லாமல் இணைத்துக்காட்டுகிறார்.....' என்ன செய்வது? சொல்லுங்கள் , என்ன செய்வது?' என்று அவர் ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் போது, நாம் வித்தியாசமான ஓர் உணர்ச்சிக்கு ஆளாகிறோம்..."  

 

நேர்மை

இன்று:

ஆயிஷத்து பாக்கிரா
அலிக்கமா லின்மனைவி!
அரசுப் பணியில்
அலிக்கமால் ஒருகுமாஸ்தா!
ஆயிரத்து எண்ணூறு
அவனுக்கு வருமானம்!
ஒண்டுக் குடித்தனம்;
ஓயாத பற்றாக்குறை!
உள்ளதைக் கொண்டு
நல்லது காணும்
உயர்ந்த மனநிலை
ஆயிஷாவுக் கில்லை!
அவள் அடிக்கடி
அரற்றுவாள்; எகிறுவாள்!
கண்ணைக் கசக்குவாள்;
கணவனை ஏசுவாள்!
"பிழைக்கத் தெரியாத
பித்துக் குளியாக
எனக்குக் கிடைத்தது
இருக்குதே?" என்றவள்
அங்க லாய்ப்பாள்;
அடிக்கடி சண்டைதான்!
வேறு வழியில்லை
விலகவும் மதியில்லை!
மனைவியின் அழுத்தத்தால்
மாறினான் அலிக்கமால்!
கைகூ சாமல்
கையூட்டு வாந்கினான்!
காசு சேர்ந்தது
கஷ்டமும் மறைந்தது!
ஆனால் ஒருநாள்
அவன்லஞ்சம் வாங்கையில்
கையும் களவுமாய்
காவலர் பிடித்தனர்!
வேலை போனது;
வீதிக்கு வந்தானே!

அன்று

டமாஸ்கஸ் நகரின்
தலைவர்; கவர்னர்
அமர்பின் அப்துல்
அஜீஸெனும் நல்லார்!
நீதி வழுவா
நேர்மை யாளர்!
நிலைத்த புகழின்
நேரடி முகவரி!
அந்தத் தலைவரின்
அன்பு மனைவி
அருமை பாத்திமா
ஒருநாள் சொன்னாள்:
"பிள்ளைகள் தமக்குத்
துணிமணி எடுக்கனும்
துட்டுஎதுவும் இல்லைகையில்!
ஒருவாரச் சம்பளத்தை
ஒன்றாகக் கொடுத்தால்
எடுத்து விடலாம் "
என்றவள் சொன்னதும்
துடித்துப் போனார்
தூயவர் அஜீஸும்!
"என்ன பாத்திமா,
இப்படிப் பேசுறே?
ஒருவாரம் பதவியில்
ஒட்டியிருப்பேன் என
உத்தர வாதம்
உள்ளதா? யோசி!
மக்கள் என்னை
மாற்றிட நினைத்தால்
மாசுகள் பட்டு
மருகனும் அல்லவா?
வேண்டாம்; வேண்டாம்!
வீண் பழி நமக்கு!"
என்றனர் கவர்னர்
என்னே நாணயம்!
அந்த அப்துல் அஜீஸும்
அவரது மனைவியும்
இந்த அலிக்கமாலும்
இவரது துணைவியும்
சொந்த பந்தம்தான்!
சோதர முஸ்லிம்கள் தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்....
என்ன செய்வது?
 

d.முந்தைய பகுதி.

அடுத்த பகுதி..a

Refer this Page to your friends

Chittarkottai.com