|
Refer
this Page to your friends
சுதந்திரதின விழா - சில சிந்தனைகள்
நமக்குச் சுதந்திரம் கிடைத்து 59 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வைரவிழா ஆண்டுக்குள்
அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் நாம் நடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பி
பார்த்து நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வது நல்லது என்ற நினைப்பில் இந்தத்
தலையங்கம்.
நமக்குச் சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை. அதற்காக பெரும்போராட்டம் நடத்த
வேண்டியிருந்தது இரு நூற்றாண்டுகளுக்கும் மேல். 1857 சிப்பாய் புரட்சிக்கும் முன்பே
சுதந்திர தாகம் துளிர்விட்டு தழைத்துக் கிளைத்திருந்தது இன்று அழுத்தமாகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரிபல் சேதுபதி, வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு
சுல்தான் என்று பல தென்னக சிங்கங்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடத்திய
போராட்டங்கள் வரலாற்றில் வைரங்களாக ஜொலிக்கின்றன.
கொடுத்த விலை
சுதந்திரப் போராட்டம்,
• லட்சக்காணக்கான உயிர்களைப் பலி கொண்டது
• பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கியது.
• பல இளைஞர்கள் / இளம்பெண்கள் இளமைச் சுகத்தை அனுபவிக்காமலே போராடி மடிந்தார்கள்
• சிறையில் சொல்லவொண்ணா சித்திரவதைகளுக்கு ஆளானோர் எண்ணற்றோர்.
• நாட்டின் இயற்கை வளம் திட்டமிட்டு சுரண்டப்பட்டுக் கப்பலேறியது.
• தேசப் போராட்டத்தை வழி நடத்திய தலைவர்கள் அவமானப்படுத்தப் பட்டார்கள்.
• நாட்டைக் காட்டிகொடுத்த கயவர்கள் கண்ணியப் படுத்தப்பட்டார்கள்
ஒரு வழியாக சுதந்திரம் தந்தார்கள்; விரும்பியல்ல - வேண்டா வெறுப்பாக. விடுதலைப்போராட்டத்தின் வித்தியாசமான பரிமாணத்தில் விழிபிதுங்கியவர்களாக; இனம்
-மதம்-மொழி -கல்வியில் பிற்போக்கு-
வறுமை இப்படி பல படப் பிரிந்திருக்கும் பஞ்சைகள்
நம்மை என்ன செய்துவிட முடியும்? என்ற இறுமாப்பில் இருந்தவர்கள் தேசப்பற்று என்ற
மந்திரத்தில் கட்டுண்டு ஒன்று சேர்ந்து சுதந்திரப் போராட்ட ஜுவாலையின் அனலை
அதிகரிக்கச் செய்து அதிரவைத்ததன் விளைவாக!
என்றாலும், கெடுமதியையே மூலதனமாகக் கொண்டவர்கள் சுதந்திரத்திலும் ஒரு பொடியை
- வெடியை வைத்தார்கள், தேசப் பிரிவினை என்ற கூராயுதத்தின்
வழி! அது ஆறாத புண்ணாக
இன்னமும் கூட சீழ் வடித்துக்கொண்டும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டும் நமது அமைதியைக்
கெடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையாண்டுகளுக்கு அது தொடரும் என்பதை
ஊகிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
புனருத்தானம்
பெரிய நாடு; கோடிக்கணக்கான மக்கள் தொகை; இருப்பு ஒன்றுமில்லை -எதிர்பார்ப்போ இமய
உச்சி! இதற்கிடையில் இழிகுணம் படைத்தோர் திட்டமிட்டுக் கிளறிவிட்ட மதக்கலவரங்கள் ;
அகதிகள் வருகை ; எல்லையில் போர்.... இப்படி பல சோதனைகள்!
தளர்ந்துபோய்
விடவில்லை நம் தலைவர்கள்; களைத்துப் போய்விடவில்லை இந்திய மக்கள்!
அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் - நம்மைக் கட்டிபோட்டிருந்த நுகத்தடி
முழுதுமாக நீக்கப் பட்டுவிட்டது என்ற பூரிப்பே நாட்டை முன்னுக்கு இழுத்துச்
சென்றது.
ஆங்கிலேயருக்கு அடிமைகளாய்- அவர்களுக்கு ஒத்தூதும் ஓநாய்களாய் இருந்து இப்போது
அனாதைகளாய் விடப்பட்டவர்கள் நாட்டின் வளர்ச்சியை முடக்குவதற்கு எத்தனையோ
சூழ்ச்சிகளைச் செய்தார்கள்; இன்னமும் செய்துகொண்டு இருக்கிறார்கள் இன-மத- மொழிப்
பூசல்களைத் தூண்டி விடுவதன் வாயிலாக ; தீவிரவாதச் செயல்கள் மூலமாக; வணிகத்தில்
கள்ளம் , வாழ்முறையில் வஞ்சம் என்ற இழிசெயல்கள் வழியாக!
ஆனால் நாடு தளர்ந்துவிடவில்லை. அத்தனை கீழறுப்புகளையும் முடிந்தவரை வெற்றிகரமாக
எதிர்கொண்டு நூறுகோடி மக்களையும் நிமிர்ந்து நிற்கச் செய்து இன்று எந்த மேலை
நாட்டவர் இனிமேல் நாம் கடைத்தேற
மாட்டோம் என்ற கணிப்பில் இறுமாந்திருந்தார்களோ
அவர்களே நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு - அச்சப்படும் அளவுக்கு -
கல்வியில் , தொழில்துறை அறிவில், ஜனநாயக கம்பீரத்தில் , மனிதவளமேம்பாட்டில்
முன்னிற்கிறோம். புகழனைத்தும் இறைவனுக்கே!
வளர்ச்சியின் பின்னணி
• எத்தனை சோதனைகள் வந்தாலும் ஜனநாயகத்தில் மக்களுக்கிருந்த- இருக்கிற அழுத்தமான
நம்பிக்கை .
• கல்வி வளர்ச்சியில் காட்டிய அக்கறை
• அறிவியல் வளர்ச்சியே முன்னேற்றத்தின் அடிப்படை என்ற உண்மையை தாமதமாகவேணும்
புரிந்துகொண்டமை. விவசாயம்
/ சிறுதொழில்
/ பெருந்தொழில்
/ உற்பத்தித்துறை
/ போக்குவரத்து
/ தொலைதொடர்பு
/ பொதுசுகாதாரம்
/ எரிசக்தி அனைத்திலும் மெல்ல மெல்ல நவீனத்தை அறிமுகம்
செய்வித்தமை.
• மனிதவளமே அனைத்து வளங்களிலும் சிறந்த -செரிந்த வளம் என்பதைப் புரிந்துகொண்டமை
• தன்னிறைவை நோக்கிய நிமிர்ந்த தொடர் பயணம்
இப்படி ... பல ஆரோக்கியமான கூறுகள்!
வளர்ச்சியைத் தாமதப் படுத்தியவைகள்
• பெரும்பான்மை -சிறுபான்மை என்ற பேதங்களை உசுப்பிவிட்டு மதமாச்சரியப் பூசல்களைத்
தூண்டிவிடும் நச்சு சக்திகளை கட்டுக்குள் வைக்காமை
• அதிகார/ அரசியல் வர்க்கத்தில் ஊடுறுவிட்ட லஞ்ச லாவண்யம்
• கள்ளச் சந்தையைக் கொழுத்து வளர அனுமதித்தது
• பேச்சுரிமை/எழுத்துரிமை என்ற பெயரில் வரையறையில்லாத வகையில் மக்களின் உணர்வுகளோடு
விளையாடி மாசுபடுத்தும் மீடியாக்களின் மீது போதிய மேற்பார்வை செய்யாமை
• பொதுவாழ்வில்/ சுற்றுச் சூழல்/ சுகாதார பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாமை
• வைரவிழாக் காணும் நேரத்திலும் கூட எழுத்தறிவின்மையை இன்னும் 50 விழுக்காட்டுக்கு
வைத்திருத்தல்
இப்படி .... பல கீழறுப்புக் கூறுகள்.
இன்னும் பிரகாசமான எதிர்காலம் அமைய....
• எவையெல்லாம் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கருதுகிறோமோ அவற்றை
தாட்சண்யம் பார்க்காமல் கட்டுக்குள் கொண்டு வருவது.
• அதிகார வர்க்கத்தின் மேல் குறிப்பாக காவல்துறை- திட்ட அமல் பிரிவு -நிதி
நிர்வாகம்- லஞ்ச ஒழிப்புத் துறை மீது தொடர் கன்காணிப்பு
• அரசியலில் - பொதுவாழ்வில் பெருகிவிட்ட வன்முறைகள்/கயமைத்தனங்களைக் களைய அனைவரும்
ஒத்துழைத்தல்; அதை மத்திய - மாநில அரசுகள் காய்வு -உயர்வின்றி கண்காணித்தல்
• எழுத்தறிவின்மையை முற்றிலுமாக ஒழித்தல்
• மக்களால் -மக்களுக்காக என்ற உண்மை ஜனநாயகக் கோட்பாட்டின் இலக்கணப்படி ஜனநாயகத்தை
வலுப்படுத்தல் ; அதே நேரத்தில் அதன் பெயரில் பொதுக் கட்டொழுங்கையும் , நாகரிக
நல்வாழ்வையும் கொச்சைப் படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல்
• "வேற்றுமையில் ஒற்றுமை " " இந்தியர் அனைவரும் எல்லா நிலைகளிலும் சமம்" என்ற நம்
அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டை மீறும் எவர் மீதும் பரிவு காட்டாமை.
பிரார்த்தனை
நாம் சுதந்திரமடைந்த போது நம்மோடு சுதந்திரம் பெற்றவர்கள் பலர் இன்னும் ராணுவ
ஆட்சியின் கீழ்; பலர் போர்களுக்கு நடுவில்; பலர் வறுமையின் பிடியில் ...
ஆனால் இந்த 59 ஆண்டுகளில் நாம் அனைத்துத்துறைகளிலும் நிறைய முன்னேற்றம்
கண்டிருக்கிறோம். நமக்கு எதிரான கூறுகளை மனதில் வைத்து நிறுத்துப் பார்க்கும் போது
இது சற்று அசாதாரணமானதாகவே படுகிறது.
அதற்காக நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம்; நமது தலைவர்களுக்கு- வல்லுநர்களுக்கு
வாழ்த்துச் சொல்வோம். அனைத்துக்கும் மேல் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்வோம்; புகழ்
மொழிவோம்.
எதிர்காலத்தில் இதைவிடவும் குறுகிய காலத்தில் அல்லவை ஒழித்து நல்லவை பெருக்கி
உலகில் சிறந்து வாழ அந்த வல்லோனிடமே மனமுருகப் பிரார்த்திப்போம்.
நன்றி : நர்கிஸ்
செப்டம்பர் -2006 இதழ்
Refer
this Page to your friends
|