ஒரு வேட்டை நடந்து முடிந்திருக்கிறது!
ஆம்! ஒரு மெகா வேட்டை - மெகா மெகா வேட்டை நடந்து முடிந்திருக்கிறது!
ஒரு மாத காலம் முழுக்க நடந்தது அந்த வேட்டை!
யார் நடத்தியது அந்த வேட்டையை?
யாரால் நடத்தப்பட்டது அந்த வருடாந்தர வேட்டையை?
உலகத்தின் முதல் பணக்காரரா?
பொருளாதார மாட்சிமிக்க மெகா கம்பெனியா?
உலகத்தின் மிகப் பெரிய பலசாலியா? அல்லது....
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய அரசியல் சக்தியா?
இல்லை!
இவற்றில் எதுவுமில்லை!
படைக்கப் பட்ட எந்த மனிதராலும்...
படைக்கப்பட்ட எந்தப் பொருளாலும்....
படைக்கப் பட்ட எந்தச் சக்தியாலும் .........
நடத்தப் பட்டதல்ல அந்த வேட்டை!
ஆனால் அது நிஜமாகவே நடந்தது !
நம் அனைவரின் கண்முன்னேயே நடந்தது!
ஒரு மாத காலம் நடந்து ....
இரவிலும்... பகலிலும்
விநாடி இடைவெளிகூட இல்லாமல்....
அமோகமாக நடந்து ... இப்போதுதான் முடிந்தது!
அந்த வேட்டையில்......
வென்றவர்கள் கொண்டு சென்றது....
வேட்டையாடி அள்ள முடியாமல் அள்ளிச் சென்றது...
காசா? பணமா?
பொருளா? பொக்கிஷமா?
இல்லை! இதில் எதுவுமே இல்லை!
அதை பார்க்க முடியாது!
புறக்கண்களால் பார்க்கவே முடியாது!
வெற்றி ஆரவாரத்தைக் கேட்க முடியாது! கேட்டு ரசிக்க முடியாது!
புறச் செவிகளால் எல்லாம் அதைக் கேட்கவே முடியாது!
பின் எப்படி?
எப்படிப் பார்ப்பது?
எப்படி ரசிப்பது?
அதைப் பார்க்க.... பார்த்து ரசிக்க..
அதைக் கேட்க ... கேட்டுச் சிலிர்க்க ...
அகக்கண் வேண்டும் ... அகச்செவி வேண்டும்!
ஓர் அரூபமான சக்தி ! அனைத்துக்கும் மூலமான ஒரு சக்தி !
அனைத்தையும் படைத்து, பரிபாலித்து.....ஒரு நாளில்
அனைத்தையும் அழித்து அதன் பக்கமே திருப்பிக்கொள்ளும்
அழிவில்லா சக்தி !
என்றைக்கும் சாசுவதமான இணையற்ற சக்தி !
அல்லாஹ் என்ற எஜமானின்
அருளைப் பெற்றுக்கொள்வதே குறிக்கோளாய்
அவன் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து
பகலெல்லாம் பசித்திருந்து...
இரவெல்லாம் விழித்திருந்து..
இல்லாதாருக்கு வழங்கி...
இருப்பதைக் கொண்டு பொருந்தி
பிழை பொறுக்கக் கெஞ்சி
பெரு நெருப்புக்கு அஞ்சி
பெற்றுக் கொண்ட பேறுகளால்
அருட் கடாட்சத்தில் கண்கள் கசிய ... தலைகள் குனிய
உலகுக்கு எளிமையாய் .. ஆனால் மறுமைக்கு மகுடமாய்
வேட்டையில் ஜெயித்துவிட்ட மகா மனிதர்களே!
எங்களின் இனிய சகோதரர்களே!
உங்களுக்கு சுப சோபனம்!
கோட்டைவிட்ட தவிப்பில்...
தோற்றுவிட்ட துயரில்
கலங்கி நிற்கும் எங்களுக்காக..
உங்கள் சகோதரர்களுக்காக..
இன்னொரு ரமலானைத் தந்துதவுமாறு
அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் கொண்ட
அல்லாஹ்விடம் இறைஞ்சுவீர்களா?