தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends




சச்சார் வெளிக்கொணர்ந்த சரியான சான்றுகள்! சரிந்து வீழ்ந்தன சங்பரிவார் சரடுகள்!


• முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை
• முஸ்லிம்கள் ஜனத்தொகை வளர்ந்துகொண்டே போய் இந்துக்களை மிகைத்துவிடும்! இன்னொரு பிரிவினைக்கு அது வித்திட்டுவிடும்!
• காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஏராளமான சலுகைகள் அளித்து வாக்குவங்கியாக பயன் படுத்துகிறது; இதனால் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப் படுகிறார்கள்!

இவையெல்லாம் பல வருடங்களாக சிறுபான்மையினருக்கெதிராக சங்பரிவாரினர் மக்களைத் திசைதிருப்ப கட்டவிழ்த்து விற்றுவந்த பொய்மூட்டைகள்!

நடுநிலையாளர்களில் ஒரு பிரிவினரும் கூட இந்தத் தொடர் கூப்பாடுகளைக் கேட்டு 'இது உண்மையாய் இருக்குமோ?' என்று ஐயப்பட்டதுண்டு!

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தக் கூப்பாடுகள் அதிகரிக்கும்!

இந்தமுறை பொதுத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியடைந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சிறுபான்மையோரின் ஏகோபித்த ஆதரவுடன் மத்தியில் பதவிக்கு வந்தவுடன் - குறிப்பாக 'முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு செய்யப்படும் ' என்று சில மாநில அரசுகள் அறிவிப்புச் செய்ததும் , மத்திய மனிதவள - கல்வி அமைச்சர் திரு அர்ஜுன்சிங் ஆணித்தரமாக அறைகூவல் விடுத்ததும் பரிவாரின் இந்தக் கூச்சல்கள் பல மடங்கு வீரியம் பெற்றன. தனியார் வழக்குகள் என்று முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. நீதிமன்றங்களும் சரியான புள்ளிவிபரங்கள் இல்லாத நிலையில் அரசுகளிடமே பொறுப்புக்களை ஒப்படைத்து அவை குளறுபடிகள் செய்ததைச் சாக்காக்கி 'மதரீதியான ஒதுக்கீடு கூடாது' என்று தீர்ப்பளித்து, சிறுபான்மை எதிரிகளின் கரங்களை வலுப்படுத்தின.

இந்தக் குளறுபடிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் , உண்மையை நிறுவும் ஆர்வத்துடனும் மத்திய அரசு, நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் முஸ்லிம்களின் கல்வி , சமூக, பொருளாதார நிலைமையைக் கண்டறிய 'பிரதமரின் மேலதிகாரக் கமிட்டி'யை (PRIME MINISTERIAL HIGH POWER COMMITTEE) நியமித்தது.

அக்கமிட்டி தன் ஆய்வு முடிவைத் தெரிவித்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று அது நேரடியாகக் கூறவில்லை என்றாலும் அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விரிவான அறிக்கையினைச் சமர்ப்பித்திருக்கிறது.

இதோ அதில் வெளிக்கொணரப் பட்ட அழுத்தமான உண்மைகள்:

• இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நவீன கருத்தடை முறைகள் வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அதிகரித்து வருகிறது. தற்போது 2 கோடி முஸ்லிம் தம்பதியினர் நவீன கருத்தடைச் சாதனங்களை உபயோகிகின்றனர். கருத்தரித்தல் குறைந்து வருகிறது; அதனால், இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இப்போது முஸ்லிம்கள் 13 கோடியே 80 லட்சம்; 21-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக இருக்கும்; அதில் முஸ்லிம்கள் வெறும் 32 முதல் 34 கோடியே இருப்பர்.


• தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்
• நாடு முழுதும் மிகக் குறைந்த வருமானம் முஸ்லிம்களுக்கு
• நகர்ப்புற ஏழை இந்தியர் சராசரி விகிதம் 22.8% ; ஆனால் முஸ்லிம்கள் 28%
• நீதித்துறையில் மிகப் பிற்படுத்தப் பட்டோர்/ தாழ்த்தபட்டோர் 23% மற்றும் 20%; ஆனால் முஸ்லிம்கள் வெறும் 7.8% மட்டுமே!
• 14 லட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%; அதுவும்கூட மிகக் கீழ்மட்டப் பணிகளில்தான்.
• நாட்டின் உயர் அரசுப் பணிகளில் வெறும் 3% (ஐ.ஏ.எஸ்: 3%; ஐ.எ•ப்.எஸ்: 1.8%; ஐ.பி.எஸ்: 4%)
• மாநில வாரியாக முஸ்லிம் மக்கள் தொகைக்கும் அவர்களது வேலைவாய்ப்பு நிலைக்கும் சம்பந்தமே இல்லாத நிலைமை நிலவுகிறது:

உதாரணம்:

அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9% ; ஆனால் பணியில் 11.2% மட்டுமே
மேற்குவங்கம்: முஸ்லிம்கள் 25.2% ; ஆனால் பணியில் 4.2% மட்டுமே
உத்தரப்பிரதேசம்: 18.5%; 5.1%
பீஹார் : 16.5% ; 7.6%
தமிழ்நாடு : 5.6%; 3.2%
கேரளா : 24.7% ; 10.4%
ஆந்திரா : 9.2%; 8.8%
கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே சற்றே அதிக விகிதாச்சாரம்.

(INDIAN EXPRESS; HINDU ; தினமணி ; TIMES OF INDIA )
• அச்சமுதாயத்தைச் சேர்ந்த 4% சிறுவர்களுக்கும் குறைவானவர்களே மதரஸா கல்விக்குச் செல்கின்றனர்.

இத்தகைய உயர்மட்டக் குழு ஆய்வு நடப்பது சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் முறை! இது சோனியாவின் தலைமையில் இயங்கும் காங்கிரஸின் கட்சியின் பிரதமரான மன்மோஹன் சிங் அவர்களது தனித்துவமான சாதனையாகும்.

இந்தக் கமிட்டி வழங்கியுள்ள சில முக்கியப் பரிந்துரைகள்:

• 'மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கல்வி அறக்கட்டளை' க்கு ரூ 200 கோடி ஒதுக்கீட்டை 1000 கோடியாக உயர்த்துதல்
• அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வு அமைப்புக்களிலும் ஒரு முஸ்லிம் இடம் பெறுவதைக் கட்டாயமாக்குதல்
• அனைத்து உள்ளாட்சி அமைப்புக்களிலும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பைப் பெறுதல்
• மதரஸாக்கள் தரும் பட்டங்களை அங்கீகரித்தல்
• முஸ்லிம்கள் 'தேசவிரோதிகள்' என்ற குற்றச்சாட்டையும் 'வாக்குக்காக சலுகைபெறுகிறார்கள்' என்ற பொய்யையும் சுமக்கவேண்டிய இரட்டை நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் மீது காட்டப்படும் பாகுபாடு அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுங்கிப்போக வைக்கிறது. எனவே 15 கோடி முஸ்லிம்களை தேசிய மைய நீரோட்டத்துக்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இருக்கிறது. அது கல்வி, வேலை , வீடமைப்பு போன்ற அத்தனை தளங்களிலும் முஸ்லிம்கள் இந்தியப் பன்முகசமூகயதார்த்தத்தின் பிரிக்கமுடியாத ஒன்றினைந்த சமமான ஒரு பகுதி என அங்கீகரிப்பதன் மூலமே சாத்தியம்.



சச்சார் அறிக்கையை பரிவாரினர் தவிர , கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பிரதான மதச் சார்பற்ற கட்சிகள் , நடுநிலையாளர்கள் , அறிவுஜீவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இவை ஏற்கனவே மீடியாக்களில் பேசப்பட்ட விசயங்கள்தானே என்று படலாம். ஆம்! பேசப்பட்ட விசயங்கள்தான்.

அதைப் பேசியோர் அனைவரும் நடுநிலைப் பத்திரிக்கையாளர்கள்; சிறுபான்மை சார்பு அரசியல்வாதிகள்; சிறுபான்மை இனப் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள்!

அவர்கள் தெரிவித்த அக்கருத்துக்களை நீதிமன்றமோ அல்லது சிறுபான்மை எதிர்ப்பாளர்களோ ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது!'நம்பகத்தன்மை அற்றது' என்று இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியும்; முடிந்தது!

ஆனால் இந்த சச்சார் உயர்மட்டக் கமிட்டியின் ஆய்வையும் - முடிவையும் -பரிந்துரையையும் எவரும் 'நம்பகமற்றது' எனப் புறக்கணிக்க முடியாது!

அதனால்தான் "இது அசைக்கமுடியாத- ஓர் நம்பத்தகுந்த- ஆதாரப்பூர்வமான ஆவணம்" என்று மூத்த அரசியல் வாதியும் மஜ்லிஸே முஷவராத்' தலைவருமான செய்யது சஹாபுத்தீன் வர்ணித்திருக்கிறார்.

'நான் ஒரு பொறியியல் பட்டாதாரிக்கிணையான பொறியியலறிவு பெற்றிருக்கிறேன்;எனவே நானும் ஒரு பொறியாளரே' என்றும்; 'நான் ஒரு டாக்டர் அறிந்த அளவுக்கு மருத்துவ அறிவைப் பெற்றிருக்கிறேன்; எனவே நானும் ஒரு டாக்டர் என அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்' என்றும் யாரும் சொன்னால் அந்தச் சரக்கு விலைபோகாது மக்களிடத்தில்!

ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் வேண்டும் அதை நிரூபிக்க!

'சான்றிதழ் என்ன ஒரு காகிதம்தானே?' என்று யாரும் அலட்சியமாகச் சொன்னால் உலகம் பரிகசிக்கும்; சொல்பவனை உலகம் பைத்தியம் என்றழைக்கும்!

அதுபோலத்தான் இந்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அகழ்ந்து - ஆய்ந்து பரிந்துரைத்துள்ள இந்த அறிவார்த்த அறிக்கை!

நீதிமன்றம் இதை ஏற்கும்! ஏற்றாக வேண்டும்!

சட்டம் மதிக்கும்! மதித்தாக வேண்டும்!

ஏன்...?

இனி வரப்போகும் சட்டத்திருத்தங்களுக்கு எல்லாம் இதுவே வழியமைக்கும்!

அதற்கு முன்மொழிதல் போல 11 - வது ஐந்தாண்டுத்திட்டம் பற்றிய ஆலோசனைகளுக்காக டெல்லியில் 8 -12 -2006 அன்று நடந்த '52 -வது தேசிய வளர்ச்சி கௌன்ஸில்' கூட்டத்தில் பேசிய பிரதமர் "சிறுபான்மையோர் குறிப்பாக முஸ்லிம்கள் வளர்ச்சித்திட்டங்களின் பயன்களை / நன்மைகளை முன்னுரிமைத் தகுதியுடன் பெறுவதற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான/ புதிய உத்திகளை உருவாக்க வேண்டும்" என்று முழங்கியுள்ளார்.

பிரதமரின் இந்த முழக்கத்திற்கு ஊக்கம் கொடுத்தது / தைரியம் தந்தது சட்டப்பூர்வமான சச்சார் அறிக்கையே! அதில் சந்தேகம் இல்லை!

இந்த சட்டப்படியான சச்சார் அறிக்கையின் அடியில்/ அதிர்வில் பொய்ச்சரடுகள்/ பொச்சரிப்புகள் சரிந்து வீழும்; "மோடிய - ராஜீந்தரீய - பரிஷத்தீய- ராஷ்ட்ரீய" எதிர்ப்புகள் உடைந்து சிதறும்; தகர்ந்து மாயும் என எதிர்பார்ப்போம்!
 

நன்றி : நர்கிஸ் ஜனவரி -2006 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com