|
Refer
this Page to your friends
தூக்கிலிடப்பட்டார்
சத்தாம்! துடிதுடித்துச் செத்தது நீதி !
சத்தாமை உயிருடன் விட்டுவிடுவார்கள் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவர் பிடிபட்டவுடனேயே அது உறுதியாகிவிட்ட விசயம்தான். அவரை
உயிருடன் வைத்து முடிந்தவரை அலைக்கழித்து - இழிவு படுத்தி
- மன உளைச்சலுக்கு உட்படுத்தி உச்சக்கட்டத் தண்டனை வழங்க வேண்டும்
என்பதே அமெரிக்காவின் திட்டம் என்பது ஒரு குழந்தைக்குக்கூடத்
தெரியும். சத்தாமுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே அவரை
தூக்கில் போட்டதில் யாருக்கும் வியப்பில்லை.
ஆனால் அவரைத் தூக்கில் போட்ட விதம் - அப்போது புஷ்ஷிடமும்
அவரது கைத்தடிகளாகச் செயல்பட்ட ஈராக்கியப் பொம்மை அரசிடமும்
வெளிப்பட்ட மிருகத்தன்மை - காட்டுமிராண்டித்தனம் - நாகரீக
உலகத்தின் முகத்தில் வீசப்பட்ட நெருப்பு அமிலம் என்று வரலாறு
ஒரு மனதாகப் பதிவு செய்து கொண்டுவிட்டதுதான் சற்றும் எதிர்பார்க்காத
விசயம்!
எந்த பிளாஸ்டிக் சர்ஜரியாலும் சரிசெய்ய முடியாத அளவுக்கு மனித
நாகரீகத்தின் - மனித நேயத்தின் - மனித உரிமையின் - நீதிநியாயங்களின்
முகத்தைச் சிதைத்துவிட்டது ; சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது
அந்த அமில வீச்சு - அவர் தூக்கிலிடப்பட்டபோது நிகழ்ந்த கொடூரமான
- அருவருப்பான சம்பவங்கள்!
• உறவினருக்கு லஞ்சம் கொடுத்து மயக்க மருந்து செலுத்திப் பிடித்தது
• சிறிய திறந்த வெளிக் கழிப்பறையில் மலஜலம் கழிக்கச் செய்து
அவரையே அதை அப்புறப்படுத்த வைத்தது
• உள்ளாடை அணியும் போது படமெடுத்து பத்திரிக்கையின் அட்டையில்
போட்டு அசிங்கப்படுத்தியது
• நீதி விசாரணை என்ற பெயரில் ஒரு நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியது
• நீதிபதிகள் தங்கள் உத்தரவுப்படி நடக்கவில்லை என்று கூறி
அவர்களை இருமுறை மாற்றி, தங்கள் உத்தரவுப்படி வரிபிசகாமல்
செய்த ஒருவரை நியமித்தது.
• சத்தாமுக்கு வாதாடிய வழக்கறிஞர்களை மிரட்டியது; அவர்கள்
சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய அணுமதிக்காதது ; அவர்களில்
மூவரைக் கொலை செய்தது
• தூக்குத் தண்டனை நிச்சயம் என்று விசாரணை முடியும் முன்பே
வெளிப்படையாக அவ்வப்போது அறிவுப்புச் செய்து அத்து மீறியது
• தூக்குத்தண்டனை அறிவித்த பிறகு ஆண்டு இறுதிக்குள் தூக்கு
என்று சட்ட விரோதமாக அடாவடி பேசியது
............ இப்படி எத்தனையோ அலுச்சாட்டியங்களை அரங்கேற்றிய
அவர்கள்,
உலக முஸ்லிம்கள் தியாகப் பெருநாளுக்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த
அந்தப் புனித நாளில் அநாகரிகத்தை ஒட்டுமொத்தமாக அரங்கேற்றி
மனித மனச்சாட்சிகளைக் கொச்சைப்படுத்தினார்கள்! அதிர வைத்தார்கள்!
மரணிக்கப் போகும் ஒரு மனிதனின் முடிவில் அந்தப் "பலிவாங்கிகள்"
ரத்தம் குடித்துக் களித்த அக்கோரக்காட்சிகளை மனித குலம் ஒருபோதும்
மறந்துவிட முடியாது!
அதனை ரகசியப் படமாக்கிப் போட்டுப் போட்டு ரசிக்க ஏற்பாடு செய்துகொண்ட
வக்ரத்தை கண்ணியமான வார்த்தைகளால் எல்லாம் விவரிக்க முடியாது!
இந்தக் கொடியவர்களிடம்தான் - 'பலிக்குப் பலி - பல்லுக்குப்
பல்' என்று வெறிபிடித்தலையும் 'மாலிக்கீ'' களிடம்தான் மூன்று
பிரிவினராக வாழும் முஸ்லிம்களையும் கிறித்தவர்கள் உள்ளிட்ட
பிற மத -சமய சிறுபான்மை மக்களையும் கொண்ட ஈராக் வெளிப்படையான
ஜனநாயக மிடுக்குடன் - பலத்துடன் பாதுகாப்பாக இருக்கப் போகிறதாம்!
புஷ் சொல்கிறார் ; பிளேயரும் ஹோவர்த்தும் ஜால்ரா போடுகிறார்கள்!
சாத்தியமா அது? நம்ப முடியுமா அந்த வாக்குறுதியை?
நடந்த அனைத்துக்கும் சூத்திரதாரியான புஷ்ஷ¤க்கு நம்பகத்தன்மை
உண்டா?
நயவஞ்சகத்தின் மொத்த உருவம் - பொய்யின் பொருள் அல்லவா புஷ்!
சத்தாமுக்கும் அல்காயிதாவுக்கும் அழுத்தமான தொடர்பென்று சத்தியம்
செய்தாரே?
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உண்டென்று ஓங்கி முழங்கினாரே?
அமெரிக்கர்களுக்கு அவர் எப்போதும் ஆபத்தென்றும் 9/11 பேரழிவில்
சத்தாமுக்குத் தொடர்பென்றும் ஆயிரம் முறை அடித்துச் சொன்னாரே?
ஒன்றிலேனும் உண்மை இருந்ததா?
ஒரு மனிதன் மரணிக்கப் போகிறான் ; அவன் கடைசி நேரத்தில் ஆசைப்பட்டதைக்
கேட்கலாம் என்பது மிக மோசமான சர்வாதிகார நாட்டிலும் கூட ஒப்புக்கொள்ளப்பட்ட
சட்டம் . சத்தாம் அந்த சராசரி ஆசைகளுக்கெல்லாம் ஆசைப்படவில்லை.
அவர் தன் மத நம்பிக்கையின் அடிப்படை ஆதாரமான கலிமா ஷஹாதாவை
மொழிந்தபடி மரணிக்க ஆசைப் பட்டார். தன் மனதை இறை நினைப்பில்
ஓர்மைப் படுத்த முயன்றிருக்கிறார்.
விட்டார்களா? புஷ் - மாலீக்கீயின் அடிவருடிகள்? பிரதிநிதிகள்?
அவரை கேலிப்பேச்சுக்களால் -கிண்டல்களால் நோகடித்தார்கள்!
கவனத்தைச் சிதற அடித்தார்கள் , வீண் தர்க்கங்களால்!
அரசியல் ஆத்திரமூட்டல்களால்!
அத்தனைக் கிடையிலும் அவர் உருக்கமாக கலிமா மொழியத்தொடங்கினார்
....
அதைப் பொறுத்துக் கொள்ளச் முடியவில்லை அந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளால்.
கலிமா முற்றுப் பெறும் முன்பே தூக்குக் கயிற்றை நெருக்கி அவரது
உயிரைப் பறித்துவிட்டு அந்தக் கோரத்தில் மகிழ்ச்சிக் கூத்தாடி
மகிழ்ந்தார்கள் என்கிறன செய்திகளும் படங்களும்!
அந்த நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
என்கிறது அமெரிக்கா.
தாங்கள் இரண்டு வாரம் தள்ளிப்போட ஆலோசனை சொன்னதாகவும் அதை
அல் நூர்மாலிக்கி அரசு மறுத்துவிட்டதாகவும் நம்பமுடியாத ஒரு
கதையைக் கசியவிட்டிருக்கிறார்கள்!
அம்னெஸ்டி இன்டர்னேஷனல் - உலக மனித உரிமை இயக்கம் , பிரிட்டன்,
இத்தாலிபோன்ற அமெரிக்க நேச நாடுகளும் , இந்தியா , ரஷ்யா, வாட்டிகன்,
கியூபா, இப்படி அனைத்து நடுநிலை நாடுகளும் , சர்வதேச மீடியாக்களும்
தூக்கின்போது நிகழ்ந்த அசிங்கங்களை எந்த நாகரிக மனிதனும் ஏற்றுக்
கொள்ள முடியாது என்று ஒரு குரலில் சொல்லியிருக்கின்றன. இந்த
அடாவடித்தன்னத்துக்காக அல்மாலிக்கியின் மீது நடவடிக்கை வேண்டாமா?
நடவடிக்கை எடுக்க முடியாது ; காரணம் 'அப்படிச் செய்யச் சொன்னதே
எனது அமெரிக்க எஜமானர்கள்தான்' என்று அவர் அம்பலப்படுத்திவிடமாட்டாரா,
என்ன?
இந்த துஜாலி வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர்
அவர் 'சத்தாமை மென்மையாகக் கையாள்கிறார்' என்ற காரணத்தால்
பதவியிறக்கப்பட்ட நீதிபதி முஹம்மது ரிழ்கார் அமீன் ' அரசு
விடுமுறை நாட்களிலும் மதக் கொண்டாட்டங்களின் போதும் நீதி மன்ற
உத்தரவுகளை நிறைவேற்றக்கூடாது என்று இன்று அமுலில் இருக்கும்
ஈராக்கியச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது ; எனவே ஹஜ்ஜுப்பெருநாள்
அன்று நிறைவேற்றப்பட்ட இந்தத் தண்டனை சட்டவிரோதமானது " என்கிறார்.
ஆக, சத்தாம் தூக்கிலிடப்பட்ட தேதி -நேரம் - அப்போது நிகழ்த்தப்பட்ட
அசிங்கங்கள் அனைத்தும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சதியென்பதும்,
அந்தப் புனிதநாளில் ஆடு மாடு ஒட்டகம் என்று அறுத்துக் குர்பானி
கொடுப்பது போல உம்மை ஒரு மிருகமாகக் கருதி தூக்கிலிட்டுச்
சாகடிக்கிறோம் என்று கூறாமல் கூறியிருக்கிறார்கள் அல்நூர்
மாலிக்கியும் அவரது அமெரிக்க எஜமானர்களும் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது!
சத்தாம் இப்போது உயிருடன் இல்லை . அவர் நல்லவரா? கெட்டவரா?
என்பது அவருக்கும் அவரைப் படைத்து அதிகாரத்தைக் கொடுத்து 69
ஆண்டுகள் பரிபாலித்து வந்த அல்லாஹ்வுக்கும் இடையிலான விசயம்!
இதில் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கில்லை.
காரணம் ஒரு முஸ்லிம் , இணை வைத்தல் தவிர அவன் வாழ்நாளில் செய்யும்
எந்தத் தவறுக்காகவும் பிழைபொறுத்தல் தேடிக்கொள்ள வழி வகைகள்
இருக்கின்றன. அல்லாஹ் சத்தாமுக்கு 3 ஆண்டுகால அவகாசம் கொடுத்தான்
அவர் தன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்க ; பிழை பொறுத்தல்
தேடிக்கொள்ள. அவர் அந்த அவகாசத்தை இறுக்கப் பற்றிக்கொண்டார்
என்பதை எப்போது அவர் வெளி உலகத்துக்காட்டப் பட்டாரோ அந்த வேளைகளிலெல்லாம்
திருக்குர்ஆனைத் தன் நெஞ்சோடு அணைத்தவராகவே இருந்ததைப் பார்த்தோம்.
இறுதி நேரத்தில் அதனை கண்ணியத்துடன் தன் உறவினரிடம் ஒப்படைக்கச்
சொன்ன விபரமும் வெளியாகியிருக்கிறது.
"எனது வாழ்நாளின் கடைசி நொடிகளில் கலிமா ஷஹாதத் மொழியும் வாய்ப்பைத்தா
நாயனே " என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நேரத் தொழுகையின்
போதும் உருகி இறைஞ்சுதல் தலையாய பிரார்த்தனையாக இருக்கிறது.
அந்த அரிய -பெரிய - புனித வாய்ப்பினை அல்லாஹ் சத்தாமுக்கு
வழங்கி அருள்பாலித்திருக்கிறான். அவர் அந்த ஷஹாதா கலிமா மொழிந்தவராகவே
மரணித்திருக்கிறார் என்பதை செல்போன் வீடியோவில் கண்ணால் பார்த்தோம்;
காதால் கேட்டோம்!
இறை அச்சத்தால் - இறைவன் சத்தாமுக்குக் காட்டிய கருணையின்
மகோன்னதத்தின் கனத்தில் கலங்கிக் கண்ணீரில் கரைந்தோம்!
"சத்தாம் மறைந்து விட்டார்; இனி எல்லாம் நாம் நினைத்தபடியே
நடக்கும்" என்று யாரும் கூற முடியவில்லை ; புஷ்ஷ¤ம் அதை ஒப்புக்கொள்கிறார்.
டோனி பிளேயர் ஓய்வென்ற பெயரில் ஒதுங்கிக் கொண்டுவிட்டார் உதவிப்
பிரதமரை அறிக்கை விடச் சொல்லிவிட்டு!
சத்தாம் இதுவரை இருந்து எதிர்த்தார் - வதைத்தார் ஏகாதிபத்திய
சக்திகளை!
"சத்தாம் அந்த சக்திகளை இறந்தும் வதைக்கும் காலம் இதோ தொடங்கிவிட்டது"
என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணத்துவ ஆய்வாளர்கள்!
அல்லாஹ் பெரியவன் ! அவன் மட்டுமே அனைவரையும் - அனைத்து வஸ்துகளையும்
விடப் பெரியவன்; மிகைத்தவன் ; பேரருளாளன்!
நன்றி : நர்கிஸ்
பிப்ரவரி -2007
இதழ்
Refer
this Page to your friends
|