தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


 

மாயாவதி சர்க்கஸ¤க்கே மவுசு!


நாட்டில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச சட்டசபைத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புக்களையும் தோற்கடித்துவிட்டு மாயாவதியை முதல்வராக்கிவிட்டது.

உடனடியாக ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை நிர்ணயிக்கும் கட்சியாக மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி இருக்கப் போகிறது.

நாட்டின் பெரிய மாநிலம் - சட்டசபை -நாடாளுமன்றங்களில் அதிக உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட மாநிலம் என்ற சிறப்பு அந்தஸ்துகளைப் பெற்ற அம்மாநிலம் இனி அனைத்திந்திய அரசியல் முடிவுகள் எடுப்பதில் முக்கியப் பங்களிப்பை ஆற்றப் போகிறது என்பது அரசியல் யதார்த்தம்!

பிற பிரதான அரசியல் கட்சிகளின் கனமான -கலக்கமான மௌனமே அதற்கு ஆதாரம்!அடையாளம்!

'இந்துத்துவ பாஜக'வும் , 'கனவுலக காங்கிரஸ¤'ம் , 'கைகார முலாயமு'ம் மாயாவதி நிகழ்த்திக்காட்டிய 'மயிர்க்கூச்செறியும் சர்க்கஸி 'ல் மௌனிகளாகிப்போயினர்!

அரசியல் அஸ்திவாரமும் அதற்கான முதலீடுகளும் தலித்துகள்! ஆனால் தலித்துகளுக்கு சமாதிகட்டுவதையே 'குலக்கடமை'யாக -'மனுதர்மமா'கக் கொண்ட பிராமணர்கள் ஒரு சேர மாயாவதியின் பக்கம்!

முலாயமும் காங்கிரஸ¤ம் கணிசமான வாக்குறுதிகளையும் மாயாஜாலங்களையும் அள்ளி வீசியும் மடியாத முஸ்லிம்கள் இம்முறை மாயாவதியின் 'பார்விளையாட்டி'ல் மயங்கி அவர் பக்கம் சங்கமம்!

இந்திய அரசியலில் இதுவரை வெளிப்படாத ஓரு வித்தியாசமான அரசியல் கலவை பரீட்சார்த்தமாக உபியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது!

இது போதாதென்று , இனி அடுத்த குறி 'டில்லி 'தான் என்று வேறு அறைகூவுகிறார் மாயா!

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இந்திய அரசியலில் ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மைதான்!

இந்திராகாந்தியின்-காங்கிரஸின் படுதோல்வி !

பாஜகவின் கையில் யாரும் எதிர்பாராத நிலையில் திணிக்கப்பட்ட மத்திய ஆட்சி !

பாஜகவை இனி அசைக்க முடியாது என அரசியல் கணிப்புக்கள் வந்துகொண்டிருந்தபோது அதன் கரங்களிலிருந்து ஈவு இரக்கமில்லாமல் பறிக்கப் பட்ட மத்திய ஆட்சி !

தனியாட்சியே லட்சியம் என்று கொக்கரித்துவந்த காங்கிரஸ் விமானத்தைத் தரையிறக்கி மத்தியில் கூட்டணி ஆட்சி யதார்த்தைப் புரிய வைத்த அரசியல் திருப்பம்!

.... இப்படி இந்திய வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த அதிரடி வைத்தியங்களைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்!

எனவே மாயாவதி உபி சட்டசபைத் தேர்தலில் அரங்கேற்றிய விநோத சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு (வாக்காளர்களுக்கு) மத்தியில் பெரும் வெற்றி கண்டதில் அதீத வியப்பெதுவும் இல்லாவிட்டாலும் , அதன் வித்தியாசமான 'குழு' அல்லது 'கூட்டு' நிகழ்ச்சிகள் அரசியல் பார்வையாளர்களையும் ஆய்வாளர்களையும் ஓர் அசுர உலுக்கு உலுக்கி ஆட்டிப் பார்த்துவிட்டன என்பது நிஜமே!

அவர்கள் காட்டிவரும் அதீத மௌனமே அவர்களது அதிர்ச்சியின் ஆழத்தையும் அகலத்தையும் உலகுக்கு உணர்த்துகின்றன!

'மந்திரிசபை அமைத்தல்' என்ற முதல் நிகழ்ச்சியான "கம்பிமேல் நடக்கும்" சடங்கு முடிந்துவிட்டது! பெரிய முணுமுணுப்புக்கள் எதுவும் நம் காதுகளுக்குக் கேட்கவில்லை!

சர்க்கஸில் ஒருமுறை மட்டுமே கம்பிமேல் நடந்து சாதித்துவிட்டால் போதாது; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியிலும் ஓயாமல் நடந்தே தீரவேண்டும்!

அப்படி நடக்கும்போது கீழே வலைகள் கட்டியிருப்பார்கள் ஒரு பாதுகாப்புக்காக!

சில சர்க்கஸ்களில் கம்பிக்கீழே சர்க்கஸ் விலங்குகளைக் கூட நிறுத்தி வைத்திருப்பார்கள்.

இனிமேல்தான் பிற (நிகழ்ச்சிகள்) பங்கீடுகள் தொடங்கப்பட வேண்டும்!

அவற்றை எப்படி மாயாவதி கையாளப் போகிறார் என்பதை வைத்தே இந்த சர்க்கஸ் காட்சியின் நிரந்தர வெற்றி அமையப் போகிறது.

அப்படியரு வெற்றி மாயாவதிக்குக் கிடைத்துவிட்டால், அவரது இந்த அரசியல் உத்தியும் அதனைத் திறம்பட செயல்படுத்திய விதமும் இந்திய அரசியலில் ஒரு புதிய அரசியல் முறைமைக்கு அழுத்தமான காலூன்றும் என்பதைப் பதிவு செய்கிறது நர்கிஸ்!

 

நன்றி : நர்கிஸ் ஜூலை -2007 இதழ்


 dதலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com