தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


தஸ்லீமாவுக்கு இங்கென்ன வேலை?



தஸ்லீமா நஸ்ரீன் பங்களாதேஷைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். சொந்த வாழ்க்கையில் தனது பிடிவாதம் அகம்பாவம் காரணமாக , சமூக வாழ்வில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களை ஒப்புக் கொள்ள மறுத்து தன் குடும்ப வாழ்வை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சிதைத்துக் கொண்டவர்." ஒரு பெண்ணுக்கு தான் விரும்பியவனின் குழந்தையைச் சுமந்து பெற்றுக் கொள்ளும் உரிமை வேண்டும் " என்று முழங்கியதன் காரணமாக பங்களாதேஷ் போன்ற ஒரு கீழ்த்திசை நாட்டின் ஒழுக்கமான மக்களின் அருவருப்புக்கு ஆளாகி அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்.

தொழிலில் ஒரு மருத்துவரான அவர் 'குர் ஆன் திருத்தப் பட வேண்டும்' என்று கூறியதன் மூலம் இஸ்லாமிய உலகத்தின் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தார். 'லஜ்ஜா' என்ற அவரது நூல் பங்களாதேஷில் சமூக -மதமாச்சரியப் பூசல்களுக்கு வழியமைத்தது. அங்கு பெரும் கலவரங்கள் வெடித்தன. மக்களின் எதிர்ப்பில் அவரது உயிருக்கே ஆபத்து நேரலாம் என்ற சூழ்நிலையில் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டார்.

இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்துக்களை விரும்பி வாசிக்கும் மேலை நாட்டுச் சமுதாயங்களும், இந்தியாவில் முஸ்லிம்களையும் , அவர்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் இஸ்லாமிய விழுமியங்களையும் விமரிசிக்கும் பெரும்பான்மை மதவாத சக்திகளும் அவரது எழுத்துக்களை பெண்ணிய எழுத்தாகவும் அடக்கப்பட்ட பெண்களின் உணர்ச்சிகளை விவரிக்கும் புரட்சிப் படைப்பாகவும் உருவகித்துப் போற்றிப் புகழ்ந்தன. இஸ்லாத்தை அடிக்க உதவும் இன்னொரு 'ஆயுதமாக' அவர் 'சாத்தானிய வசனங்கள்' சல்மான் ருஷ்தி போல பயன்படுவார் என்று நம்பி ஆதரவுக் கரம் நீட்டின.

சில வருடங்கள் ஸ்வீடன், ஜெர்மனி, அமெரிக்கா என்று நாடு நாடாகச் சுற்றித்திரிந்ததில் கழிந்தபிறகு யதார்த்தம் உரைக்கத்தொடங்கியது. மேலைநாடுகள் அவரை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதோடு மறக்கவும் தொடங்கின. எப்போதும் மீடியாவின் வெளிச்சத்தில்/ புகழ்ச்சியில் இருக்க விரும்பும் அந்தப் பெண்மணியை இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இந்தியாவுக்கு அழைத்து வந்து அரசியல் தஞ்சம் புக வைத்தன. இது சத்தமின்றி மிகத் தந்திரமாக நடந்து முடிந்தது.

2005 -ல் இருந்து கொல்கத்தாவில் வசித்துவரும் அவர் தான் இங்கிருப்பதை வெளியுலகுக்கு அறிவிக்கும் முகமாக அவ்வப்போது இஸ்லாத்தை விமரிசித்து வருகிறார். இடதுசாரிகள் ஆளும் மாநிலமான மேற்கு வங்காளம் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

இப்போது அவர் தனது முதல் நூலான 'லஜ்ஜா'வின் இரண்டாம் பாகமான 'ஷரம்' என்ற நூலை 'துர்கா பூஜா'வுக்கு முன் வெளியிடப் போவதாகவும் , அது பிரச்சினையை ஏற்படுத்தப் போவது உறுதியென்றும் , அதற்காகத் தான் பயப்படப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார். அவர் துர்காவை துணைக்கு அழைத்திருப்பது, ஏற்படப் போகிற சச்சரவுகளிலிருந்து தம்மைக் காப்பாற்ற வேண்டிய கடமை துர்கா பக்தர்களுக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டதான் என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும்.

சமூக சகோஜன்யத்தைக் கெடுத்துக் கொண்டிருந்த ஒரு பிரஜையை ஒரு நாடு, நாடு கடத்துகிறதென்றால், அவர் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை விளக்கத் தேவையில்லை. இருந்தும் மேற்கு வங்க அரசு இப்பெண்மணியை தொடர்ந்து இஸ்லாத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் , வன்முறைக்கு வித்திடவும் அனுமதிக்கிறதென்றால் அது இந்தியாவில் வன்முறைக்கு வித்திடும் ஒரு நச்சு சக்த்திக்கு 'எழுத்துரிமை' என்ற போலிப் பெயரிட்டு ஊக்குவிக்கிறது என்றே பொருள். அவர் இங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கும் மத்திய அரசும் இதற்குத்துணை போகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்திய மக்களின் ஒற்றுமைக்குறைவுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணை - தொடர்ந்து மக்களின் பொறுமையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு தீய சக்தியை இப்படி மத்திய அரசும் மாநில அரசும் ஆதரிப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதல்லவா?

தாங்கள் நாடு கடத்திய ஒரு பெண்ணை தங்கள் நாட்டுக்கு அருகிலேயே குடியேற்றி வைத்துக் கொண்டு அந்நாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்க வைத்திருப்பாதால் அண்டை நாட்டு நல்லுறவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது என்பது கண்கூடு. சமீப காலமாக இந்தியாவில் நடக்கும் வன்முறைகளில் சில பங்களாதேஷிலிருந்து வருகின்றன என்பதும் தெளிவாகியிருக்கிறது.

தஸ்லீமாவின் நச்சு எழுத்துக்கள் அவரது பாணியில் சமூக ஒற்றுமைக்கெதிராக எழுதக்கூடிய இன்னும் சிலரை உருவாக்கும் ஆபத்தும் இருக்கிறது என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்

எனவே, பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் தஸ்லீமா நஸ்ரீனை உடனடியாக நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். அவருக்குத் தொடர்ந்து விசா நீட்சி வழங்குவதோ அல்லது நிரந்தர வாசியாக்குவதோ விஷப் பாம்புடன் விளையாடுவதற்கொப்பாகும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம்.





 

நன்றி : நர்கிஸ் ஆகஸ்ட் -2007 இதழ்


 dதலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com