|
Refer
this Page to your friends
கற்றபடி நின்ற கலாம்!.....
ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தமது பதவியில்
ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறுகிறார். அவரது
பதவிக்காலம் பாஜக கூட்டணி ஆட்சியிலிருந்த போது தொடங்கியது.
காங்கிரஸ் கூட்டணி பதவியிலிருக்கும் போது நிறைவடைகிறது.
பாஜக கூட்டணி அவர் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்தபோதும்
அதனை ஆய்வாளர்கள் வியப்புடன் பார்த்தனர்; இப்போது
அவருக்குப் பதவி நீட்சி இல்லை என்று அழுத்தமாகச் சொல்லி
அவருக்குப் பதில் இன்னொருவரை காங்கிரஸ் கூட்டணி
முன்மொழிந்தபோதும் ஆய்வாளர்கள் வியப்புத்
தெரிவிக்கின்றனர்.
இதனிடையில் ஜனாதிபதி அப்துல் கலாமின் 5 ஆண்டுப்
பதவிக்காலம் நமக்கிடையே மதிப்புரைக்காக நிற்கிறது!
முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களைத்தவிர மற்றெந்த
இந்திய ஜனாதிபதியும் இரண்டாம் முறையாகப் பதவி நீட்சி
பெறவில்லை.
முதல் தலித் ஜனாதிபதியான திரு நாரயணனின் பதவி
நீடிப்புக்காக காங்கிரஸ் குரல் கொடுத்தும் அதனை பாஜக
மறுத்துவிட்டு , கலாமைக் கொண்டு வந்தது. இப்போது பாஜக அவர்
பதவியில் தொடரலாம் என்றது; ஆனால், காங்கிரஸ் முடியாது
என்று சொல்லிவிட்டு அவருக்கு விடை கொடுக்கிறது.
ஆக, இங்கே அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டிய ஒரு
பதவியில் அரசியல் விளையாட்டுக்கள் களைகட்டிவிட்ட
யதார்த்தம் குழப்பமின்றித் தெளிவாகியிருக்கிறது!
முதல் நிகழ்வில் இந்திய வெகுஜனம் கடுமையான மௌனம்
சாதித்தது! ஆனால் இப்போது நடைபெறுகிற இந்த நிகழ்வின்போது
இந்திய பொதுஜனம் 'கலாம் மீண்டும் வேண்டும்' என்று உரக்கவே
குரல் கொடுக்கிறது!இயன்ற அளவுக்கு ஊடகங்கள் வழி தனது
கருத்தை எழுச்சியுடன் பதிவு செய்து வருகிறது!
குறிப்பாக
இளைஞர்கள் இதில் முனைப்புக் காட்டுகிறார்கள்!
இந்தக் குரல்தான் - வலிமையான மக்கள் குரல்தான், கலாம் இந்த
ஐந்தாண்டுகால பதவியில் தேடிக்கொண்ட சொத்து என்பதையும்
அவரது பதவிக்காலம் பற்றிய மதிப்பீட்டில் முக்கிய
இடம்வகிக்கப் போகிற குறியீடு என்பதையும் நடுநிலை
ஆய்வாளர்கள் புரிந்து கொள்கிறார்கள்!
கலாம் வேண்டும் என்று சொல்கிற அரசியல் அணிகள் இருவகை!
ஒன்று, அவரை இப்பதவிக்கு முதன்முதல் முன்மொழிந்த தகுதியின்
பலத்திலும் தங்களுக்கு விரோதமாகப் போய்விடமாட்டார் என்ற
நம்பிக்கையிலும்!
இரண்டாவது வகை, தங்களது அரசியல் தோல்விகளால் பெற்ற
காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்ளவும் , தங்களது அரசியல்
எதிரிகளுக்கு எதிராக ஏதாவது செய்து தர்ம சங்கடத்தில்
ஆழ்த்த வேண்டும் என்ற உள்நோக்குடனும்!
எனவே இந்த இரண்டு நோக்கங்களும் நமது மதிப்பீட்டுக்கு
முக்கியக் கரணிகளாக அமையமாட்டா!
ஆனால் , 'கலாம் வேண்டாம்' என்று சொல்பவர்களின்
வாக்குமூலங்களை அப்படி நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது!
மத்திய ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு பிரதானமாயிருக்கும்
இடதுசாரிகள், கலாமுக்கு,
- அரசியல் அறிவு போதாது
- அவர் முன்வைக்கிற இந்தியா 2020 முதலாளித்துவ நெடியுடனான
நவீனகால பூஷ்வாக்களின் சித்தாந்தத்தைப் பிரதி பலிக்கிறது
- ஆயுத பலத்தின் மூலம் இந்திய வலிமையை நிலைநிறுத்த முயலும்
உபாயம் அவருடையது
- சுற்றியிருந்த மேல்ஜாதி ஆலோசகர்கள் நண்பர்கள் வட்டம்
அப்துல்கலாமை "கலாம் ஐயர்" என்றே பாசத்துடன் அழைத்ததுடன்
அவரை பல குற்றங்கள் சாற்றப்பட்டுள்ள ஒரு மடாதிபதியின் முன்கொண்டுபோய் நிற்க வைத்துவிட்டனர்!
- அவர்களது பிடி இரண்டாவது பதவி நீட்சியில் இன்னும்
வலுக்கொண்டுவிட்டால், அதிலிருந்து மீள்வது சிரமம்
.... என்று நீண்ட பட்டியலிடுகின்றனர்.
இடதுகள் கொடுக்கும் அழுத்தத்திலிருந்து விடுபட்டு
காங்கிரஸ் தாங்கள் ஏன் கலாம் வேண்டாம் என்கிறோம் என்பதை
வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் 'அவர் தாம் பதவியிலிருந்து
ஓய்வு பெற்றவுடன் ஆசிரியப் பணிக்குச் செல்கிறேன்' என்று
அறிவித்துவிட்ட பிறகு பதவி நீட்சியைப் பற்றிய பரிசீலனையே
தேவையற்றது என்பது போலப் பேசுகிறது.
வெளிப்படையாகச் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சி
இவ்விசயத்தில் டிரைவர் சீட்டில் இல்லை என்பதுதான் நிஜம்!
இவ்விரு தரப்பு வாதங்களுமே ஒரு வகையில் அரசியல் நெடியும்
இன்னொரு வகையில் வர்க்கசித்தாந்த வாசமும் சார்ந்தவை ;
ஊகங்கள் அவர்களது அச்சத்திற்கான கரணிகளாக
அமைந்திருப்பதுடன் எதிர்காலத்தில் கண்ணை மூடிக்கொண்டு
தங்கள் நிலையை ஆதரிக்கும் ஒரு ஜனாதிபதியின் அவசியத்தை வேறு
வார்த்தைகளால் ஒப்பனை செய்து தருகின்றன என்பதையும் அறிய
முடிகிறது!
அதுபோகவும் துணை ஜனாதிபதிப் பதவியின் மீது
கண்வைத்திருக்கும் இடதுகள் அப்துகலாம் போன்ற ஒருவர்
தங்களது வேட்பாளருக்கு சீனியராய் இருப்பதில் விருப்பம்
கொண்டிருக்கவில்லை என்பதும் தெரிகிறது!
ஆனால், ஒருமித்த மக்கள் குரலில் எந்தப் பிசிறும் இல்லை.
அது உள்ளங்கை நெல்லிக்கனி போல் - தெளிந்த நீரூற்றின்
துளியாய் பளிச்சென்றிருக்கிறது.
அது அவரது வாழ்க்கை முழுவதையும் எந்த இடைத்திரையுமின்றிப்
பார்த்துப் பரவசித்த அனுபவத்தில் , அவரது பணிக்காலத்தில்
மக்களிடையே உசுப்பிவிட்ட உன்னதமான மனிதவள ஊக்குவிப்பை -
எதிர்காலம் பற்றிய ஆக்கப் பூர்வமான நம்பிக்கையை அப்படியே
பதிவு செய்கின்றது!
அடடா, இப்படிப்பட்ட ஒரு பெருமகனுக்கு ஏன் இன்னொரு
பதவிக்காலம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்
-நெகிழ்ச்சியில் - குமுறுகிறது!
எதிர்வாதம் பேசுகிறவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை அக்குரல்
முன்வைக்கிறது! அது, "நீங்கள் அடுத்த ஜனதிபதியாய்த்
தேர்ந்தெடுக்கப் போகிற வேட்பாளர் பெயரைச் சொன்னதும் அவர்
மீது வீசப்படும் பலவித மோசடிக் குற்றச் சாட்டுகளில்
ஒன்றையேனும் கலாம் மீது வீச முடியுமா?" என்பதுதான்!
- பார்வைக்கு எளியராய்
- பண்பாட்டின் நிலைக்கலனாய்
- அசைக்கமுடியாத தேசப்பற்றின் சின்னமாய்
- மதஒற்றுமை -மனிதநேய விழுமியங்களைப்
பிரதிபலிக்கும் ஒரு மகா இந்தியனாய்
- இந்தியப் பொதுவாழ்வில் தீர்க்கமுடியாத
கொடியநோய்போல் வேர்பாய்ச்சி நிற்கிற ஊழல்
என்ற கொடியவிஷப் பாம்பின் நிழல்கூடப்
படியமுடியாத தூய்மையாளராய்
- நவீன அறிவியல் பார்வையுடன் நாட்டுக்கான
அடுத்த தலைமுறையை உருவாக்கும் நம்பிக்கையாளராய்
இறைவனின் பேரருளால் தனது நாட்டு மக்கள் தனக்களித்த முதல்
குடிமகன் பதவியை தனது மனச்சாட்சிக்கும், பெரும்பான்மை
நாட்டு மக்களின் மனச்சாட்சிக்கும் எந்தக் காயமும்
ஏற்பட்டுவிடாமல் பேணிக் காத்த பெருமையுடன் - நிறைவுடன்
கலாம் விடை பெறுகிறார்!
ஜனாதிபதி பதவிக்கு யாரும் வரலாம் ; என்றாலும் அப்பதவிக்கு
அப்துல் கலாம் ஏற்படுத்திகொடுத்த மதிப்பை - மரியாதையை ஒரு
கண்ணியமான தோற்றப்பொலிவை இந்திய மக்களின் மனதிலிருந்து
யாரும் அவ்வளவு எளிதில் மறக்கச் செய்துவிட முடியாது!
அவர் கசடறக்கற்றவர் மட்டுமல்ல; கற்றபடி நின்ற வெகு சில
இந்தியர்களில் தகைமைக்குரிய ஓர் தனியிடத்தைப் பெற்ற
நல்லவருமாவார்!
இறைவன் அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைவுமளித்து
அருள் பாலிப்பானாக!
நன்றி : நர்கிஸ்
ஆகஸ்ட் -
2007
இதழ்
Refer this Page to your friends
|