தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


 வேண்டாம் மனத்தாங்கல்....



மனிதர்களின் பாவங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கழுவித் தூய்மைப் படுத்தும் புனித ரமலானில் நாம் இப்போது இருக்கிறோம். நம் மீது இரக்கம் வைத்து நம்மைப் படத்த 'ரப்பு' நமக்கு நமது வாழ்வில் இன்னொரு ரமலானைத் தந்து அருள் பாலித்திருக்கிறான். அவனே புகழனைத்துக்கும் உரியவன்.

சென்ற ஆண்டில் நம்மோடு வாழ்ந்தவர்களில் பலர் இப்போது நம்மிடையே இல்லை!

சென்ற ஆண்டு நல்ல உடல்நலத்துடன் இருந்த நம் உறவினர்கள் சிலர் இன்று நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளுக்கும் வீடுகளுக்குமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்!

சிலர் படுத்த படுக்கையாக பலவிதமான உடல்/ உள்ள உபாதைகளுடன் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால், அல்லாஹ் நமக்கு நல்ல உடல்நலத்தை அளித்திருக்கிறான்.

நமது தொழில்களில் அதிகமான லாபத்தைத் தந்திருக்கிறான்.

குழந்தைப் பேறுகளை, பட்டம் பதவிகளை அளித்து கண்ணியப் படுத்தியிருக்கிறான்!

சென்ற ஷஹ்பான் மாதம் பிறை பதினைந்தில் 'ஷபே பராஅத்' இரவில் தனது அடியார்களுக்கான 'பட்ஜெட்' நாளில், பள்ளிகளில் கூடி நம் பாவங்களுக்கு பிழை பொறுத்தல் தேடிக்கொண்டிருக்கிறோம்!

வீடுகளைப் பள்ளிகளாக்கி அழுது/ தொழுது மனசுகளை இலேசாக்கிக் கொண்டிருக்கிறோம்!

நீண்ட ஆயுளுக்காக, நிறைந்த செல்வத்துக்காக , நல்ல உடல்நலத்துக்காகவெல்லாம் பிராத்தனை செய்து நமது எஜமானனிடம் மன்றாடியிருக்கிறோம்!

அடுத்த பதினைந்து நாட்களில் மாதங்களில் எல்லாம் சிறந்த ரமலானைத் நமக்குத் தந்து நமது பாவங்களைப் பொசுக்கிக் கொண்டு, இம்மை -மறுமை நன்மைகளை முடிந்தவரை அள்ளி எடுத்துக் கொள்ள வழியமைத்துக் கொடுத்திருக்கிறான் இரக்கமுள்ள ரஹ்மான்! அதிலும் பாதிநாட்கள் கழிந்தநிலையில் இவ்விதழ் உங்களைச்சந்திக்கிறது!

ஆண்டுதோறும் ரமலானில் நர்கிஸ் வாசகர்களான நாம் ஒரு சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு வருகிறோம்!

பல வாசகர்கள் அதனைக் கடைப்பிடித்து வருவதும், அதனால் பயன்பெற்று வருவதும் கண்டு நமக்கு மகிழ்ச்சி !

இம்முறை நாம் பரிந்துரைப்பது நமக்கிடையே ஏற்பட்டுள்ள அல்லது ஏற்படுத்திக் கொண்டுள்ள 'மனத்தாங்கல்' களை நீக்கிக் கொள்வதாகும்!

ஒரு சிறிய கருத்து வேறுபாடு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே பிளவுகளை எற்படுத்தியிருக்கிறது!

கணவருக்கும் மனைவிக்குமிடையே மோதல் போக்குகள்!

தோழர்கள்/ தோழிகள் பரஸ்பரம் பேசிக்கொள்வதில்லை!

பங்காளிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள்!

இப்பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிக்கண்டுபிடித்தால், பைசா பிரயோஜனமில்லாத 'ஈகோ' அல்லது 'வரட்டு கௌரவம்' தான் காரணமாயிருக்கும்!

மனத்தாங்கல் காரணமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை என்பதால், யூகங்கள்/ சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி- இறுகி- மனத்தாங்கலைக் கடினப்படுத்தியிருக்கிறது!

இதனைப் பயன்படுத்திக்கொண்டு அங்குமிங்கும் பற்றவைத்துக் களிப்புறும் பச்சோந்திகளை ஷைத்தான் சுறுப்புடன் இயங்க வைக்க அவர்கள் மித்திர பேதங்களை/ பலவருட பாசநெருக்கங்களை வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

இதன் காரணமாக பணச்செலவு/ மனஉளைச்சல்/தவிக்க வைக்கும்தாழ்வு மனப்பான்மை/ தடுமாறவைக்கும் கோபக்கனல்/ கொண்டுவந்து சேர்க்கும் உடல்/மன நோய்கள் ... என்று ஒரு தொடர் அவலம்!

தேவையா இவையெல்லாம்?

என்னதான் பூமிக்கும் வானத்துக்கும் தாவிக்குதித்தாலும் நிரந்தர மற்ற இந்த உலகின் நொடிப்பொழுது வாழ்க்கையில் எதற்காக இத்தனை மனத்தாங்கல்கல்கள்; பொறாமைப் பூசல்கள்!

இதோ, பிழைகளைக் களையும் பெருமை மிக்க ரமலான் மாதத்தின் சில நாட்கள் மிஞ்சியிருக்கின்றன!

ஆயிரம் மாதங்களுக்கும் மேலான சிறப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு நமை நோக்கி விரைந்து கொண்டு!

நமது கசடுகள்/ கழிவுகள் அத்தனையையும் கழுவிச் சுத்தம் செய்து நம்மைத் தூய்மைப் படுத்திட!

கழுவிச் சுத்தப் படுத்தி இம்மையில் ஏற்றத்துடன் நம்மைக் கரையேற்றவும் மறுமைப் பேற்றுக்காகக் கடைத்தேற்றவும்!

மனத்தாங்கல் காரணமாக பேச்சு வார்த்தைகளின்றி இருப்போரின் பாவமன்னிப்புக் கூட ஏற்றுக் கொள்ளப் படாது என்பது இஸ்லாம் வார்த்துள்ள தத்துவார்த்தம்!

இதோ லைலத்துல் கத்ர் புனித இரவு "உங்களது மனத்தாங்கல்களைக் கலைந்து கொள்ள என்னை பயன் படுத்திக் கொள்ளுங்கள்" என்ற முழக்கத்துடன் நம்மை நோக்கி வெகு வேகமாக நகர்ந்து முன்வந்து கொண்டிருக்கிறது!

அந்த இரவின் புனித ஆன்மீக நுரையில் மனதைக் கழுவி விட்டு அடுத்து வரும் பெருநாளன்று உடன்பிறப்புகள்/ நண்பர்களை/ உற்றம் சுற்றத்தை முந்திக் கொண்டு ஓடிச் சென்று கட்டிணைத்து முகமன் சொல்லி/ வாழ்த்துக்கள் பரிமாறி மனத்தாங்கல்களை மண்ணறைகளை நோக்கி விரட்டியடிக்கும் சங்கல்பத்தை நாம் அனைவரும் கைக்கொள்வோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் விரும்பியபடியே 'ஒரு கயிற்'றால் பிணைப்பானாக, ஆமீன்!

 

நன்றி : நர்கிஸ் அக்டோபர் - 2007 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com