|
Refer
this Page to your friends
கூட்டணியா? வேட்டணியா?....
சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் மத்தியிலும்
மாநிலங்களிலும் (கேரளா தவிர) ஒரு கட்சி ஆட்சியே -
காங்கிரஸ் ஆட்சியே நீண்டகாலம் இருந்தது. நாட்டில்
அவசரகாலப் பிரகடனம் , ஜனதா கட்சி உதயம் - வீழ்ச்சி ,பல
கட்சிகளிலும் பிளவு இப்படி கட்சிகள் பெருகின. பல மாநிலக்
கட்சிகள் வலுப்பெற்றன. ஆட்சிகளையும் காங்கிரஸிடமிருந்து
பிடுங்கியதுடன் காங்கிரஸ், அவர்களது தயவில் சில சட்டசபை/
நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலைகளும்
ஏற்பட்டன.
இன்று அது பிறகட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆளும்
கட்சியாக இருக்கிறது. குறிப்பாக இடது சாரிகளின் தயவில் அது
நாட்டை ஆள்கின்றது. திமுக , லல்லுபிரசாத் யாதவின்
ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாமக, போன்றவை பிற முக்கியக்
கூட்டணிக்கட்சிகள்.
இந்திய மக்கள் மதவாத பாஜகவுக்கு விடை கொடுத்துவிட்டு,
மதச்சார்பற்ற சக்திகளை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள்.
தனிக்கட்சி ஆட்சி இல்லை என்றானது. இடதுகளுக்கும்
காங்கிரஸ¤க்கும் கொள்கை இடைவெளி அதிகம் என்றாலும்,
மதச்சார்பின்மை அடிப்படையிலும், மதவாதிகள் மீண்டும்
தலையெடுத்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் கூட்டணி
ஆட்சி அமைந்தது. அப்போதே கூட்டணிக் கட்சிகள் சில குறைந்த
பட்ச செயல்திட்டங்களைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்டன.
ஆனால் "காங்கிரஸ் இச் செயல் திட்டங்களை முறையாகக் கடைப்
பிடிப்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு
ஆதரவு தரும் எங்களைத் தங்களது இரண்டாம்தர கட்சிசகாக்கள்
போல நடத்துவது மிக நன்றாகவே தெரிகிறது. இது பொறுப்பற்ற
செயல்" என்பது இடதுகளின் குற்றச் சாட்டு.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் பற்றி
இடதுகள் தொடக்கமுதலே பல எச்சரிக்கைகளை விடுத்து
வருகின்றனர். அவற்றில் பொருளில்லாமல் இல்லை. காரணம்
அமெரிக்காவின் சர்வதேச நம்பகத்தன்மை அத்தகையது!
இடதுசாரிகள் ஆட்சியின் பங்காளிகள் என்ற வகையில் உரிய
மரியாதை கொடுத்து அவர்களது இணக்கத்துடன் செயல்படுத்த
வேண்டிய ஒரு திட்டத்தை காங்கிரஸ் தன்னிச்சையாகச்
செயல்படுத்திவிடத் துடிக்கிறது. 'ஆதரவை வேண்டுமானால்
விலக்கிக்கொள்ளுங்கள்' என்று பிரதமர் கூறியது அராஜகமானது.
பணிந்து பொறுமையுடன் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டிய
பிரச்சினைக்குச் சூடேற்றியது பிரதமர்தான் என்பதில்
சந்தேகம் இல்லை.
'அப்படி என்ன அமெரிக்காவுக்கு நாம் கடன் பட்டுப்
போயிருக்கிறோம்? மக்கள் தந்த மதச்சார்பற்ற ஆட்சியை
இழக்கும் அளவுக்கு நாம் அமெரிக்காவுக்கு நிச்சயமாகக் கடன்
பட்டில்லை. இன்று நாம் பொருளாதார ரீதியாக அடைந்திருக்கும்
முன்னேற்றத்துக்கு அமெரிக்கா துணை நின்றது என்பதை விட
தடையாக நின்றது என்பதுதான் உண்மை' என்பது இடதுகளின் வாதம்.
நாட்டின் அணுசக்தித்தேவை அதிகரித்து வருவது உண்மையே.
என்றாலும் அதற்காக நம்மை நாம் ஒரு ஏகாதிபத்திய நாட்டிடம்
அடமானம் வைத்துவிடக்கூடாது என்று இடதுகள் விவாதிப்பதில்
பொருள் இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் பல விதத் தடைகளைக்
கடந்துதான் நாம் இன்று உலக அளவில் முன்னிலை வகிக்கும்
நாடுகளில் ஒன்றாகத் தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
உறுதியான மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாடுடைய இடதுகளை
அணைத்துச் சென்று குறைந்தபட்ச செயல்திடங்களில் கவனம்
செலுத்தி முடிந்தவரை இந்த ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு
முழுமைப்படுத்தும் முயற்சியினைக் காங்கிரஸ் செய்யவேண்டும்
என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இருந்தும்
காங்கிரஸ் இவ்விசயத்தில் மிகப் பிடிவாதமாக இருக்கிறது.
கையில் கிடைத்திருக்கிற ஆட்சியை இழப்பது அரசியல்
பேதைமையாகிவிடுமே என்ற பயம் இப்போது மக்களிடையே
தலைதூக்கியிருக்கிறது. தாமாகத் தோற்று வெளியாகியிருக்கும்
மதவாத சக்திகளை மீண்டும் உசுப்பிவிடும்
பைத்தியக்காரத்தனத்தை அரசு செய்துவிடக் கூடாது; அந்த
அளவுக்கு நாம் எவ்வகையிலும் அமெரிக்காவுக்குக் கடமைப்
பட்டில்லை என்று பெரும்பான்மை மக்கள் நினைக்கிறார்கள்!
சேது சமுத்திரத்திட்டம் பல வருடங்களாகக் கிடப்பில் கிடந்து
ஒரு வகையாக இப்போது துரித கதியில் இயங்கி வருகிறது. இதனை
இப்போது கீழறுப்பு சக்திகள் தங்களது சுய லாபங்களுக்காகப்
பயன் படுத்திக் கொண்டு வழக்குகள் என்ற பெயரில் தடைகள்
போடுகின்றன.
மதம் சார்ந்த விசயங்களை அணுகும்போது அதீத கவனம் தேவை. உச்ச
நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில்
"ராமர் வாழ்ந்ததற்கான சரித்திரச் சான்று இல்லை" என்ற
வரிகள் அறவே தேவையற்றவை. 'ராமர்பாலம் மனிதனால் உருவாக்கப்
பட்டதில்லை' என்ற சொற்றொடர் போதுமானது. இந்தச் சிறு
விசயத்தில் கூட, துறை மந்திரிகளையும் அதிகாரிகளையும் மைய
அரசால் மேலாண்மை செய்ய முடியவில்லை, என்பது மிகவும்
துரதிருஷ்டவசமானது.
இப்போது அது பெரும்பிரச்சினையாய் உருவெடுத்து, இதோ
அவ்வறிக்கை வாபஸ் பெறப்பட்டு பணிகள் மூன்று மாதங்களுக்குத்
தடை செய்யப் பட்டுள்ளன. இதனால் திமுகவுக்கு கடும்
அதிருப்தி. முதல்வர் கலைஞர் கோபத்தில் ராமர் பற்றி சொன்னவை
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு உத்வேகம் அளிப்பதாகவும்,
காங்கிரஸ¤க்கு தர்மசங்கடங்கள் அளிப்பதாகவும்
அமைந்துவிட்டன.
இதற்கிடையில் நாடெங்கும் தொடரும் தீவிரவாத நிகழ்வுகள்,
விலைவாசி ஏற்றம், அமெரிக்க டாலர் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள
தொழிற்சரிவுகள், போன்றவை மக்களை அதிருப்திக்குள்ளாக்கி
இருக்கின்றன. நாடாளுமன்றம் சந்தைக்கடையாகிவிட்டது.
இடதுகளின் பலத்தில் உறுதியுடன் இருந்த கூட்டணி
பலகீனமடைந்துவிட்ட ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது!
எந்த நேரத்திலும் இடதுசாரிகள் அரசுக்கான ஆதரவை வாபஸ்
பெறலாம், மத்திய அரசு கவிழலாம் என்ற நிலையில் நாட்களின்
நகர்ச்சி இத்தலையங்கத்தை எழுதும் நிலையில்!
தமிழகத்திலும் நிலைமை சரியில்லை. எதிர்க்கட்சியான அதிமுக
தான் 'திமுக மைனாரிட்டி அரசு ' என்று வாய்க்குவாய்
சொல்லிவருகிறது என்றால், கூட்டணி அரசின் உறுப்புக்
கட்சியான பாமகவோ அரசின் மீது குறைகள் சொல்லி தினம் தினம்
ஒரு தனிஅறிக்கை விட்டு தனி ஆவர்த்தனம் செய்து ஆளும்
கட்சியைக் குழப்புவதுடன் மக்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி
வருகிறது. அக்கட்சி தனியாக பட்ஜெட்டே போட்டு தன் திறமையைக்
காட்ட விழைகிறது.
இதில் எரிச்சல் கண்டுள்ள முதல்வர் மத்திய அரசு
கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் தமிழக
அரசையும் கலைத்துவிட்டு சட்ட மன்றத்தேர்தலுக்கும்
உத்தரவிடலாமா என்று யோசிப்பதாக ஹேஷ்யங்கள் வருகின்றன.
ஆக , மத்தியில் ஆளுகிற கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள
கட்சிகளும் சரி ; மாநிலத்தை ஆளுகிற கூட்டணியில்
பங்குபெற்றுள்ள கட்சிகளும் சரி, வாக்களித்த பொதுமக்களின்
எண்ணப்போக்கையோ அல்லது இவ்வரசுகள் பலகீனப் பட்டால்
ஏற்படும் மதவாத சக்திகளின் புனர்ஜன்மம் நாட்டுக்கு
இழைக்கப் போகிற தீங்குகள் பற்றியோ கவலைப்படாமல்
தங்களுக்குத் தாங்களே வேட்டுவைத்துக் கொள்ளும் காரியத்தைச்
செய்கின்றனவே என்று நொந்துபோன நிலையில் இவ்வரிகளைப் பதிவு
செய்கிறோம்!
நன்றி : நர்கிஸ்
நவம்பர் -
2007
இதழ்
Refer this Page to your friends
|