தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


 ஆதம் மலையும் ஆதம் பாலமும்...



ஆதம் மலையும் ஆதம் பாலமும்

ஆதம் மலை எங்கே இருக்கிறது?

ஆதம் பாலம் என்றால் எது?

இப்போது இந்தக் கேள்விகளைச் சிலரிடம் கேட்டால், விழி பிதுங்கி நிற்கக் கூடும்!

தெரிந்தவர்கள் கூட தெரியாதது மாதிரி பாசாங்கு பண்ணவும் கூடும்!

ஆனால் இவை ஒன்றும் புதிரான பெயர்கள் அல்ல!

பலகாலமாக வரலாற்றுக் குறிப்புக்கள் பேசும் பெயர்கள்தான்!

அன்றாடம் செய்தியில் அடிபடும்- இன்னும் சொல்லப் போனால், அனல்பறக்கப் பேசப்பட்டுவரும் சூடான பெயர்கள்தான்!

'ஆதம் மலை' தென்மேற்கு இலங்கையில், மலையகத்தில், ரத்னபுராவின் வடகிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது 7360 அடி உயரமுடையது. இதன் உச்சியை கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே காண முடியும்.

கூம்பு போன்ற அதன் உச்சியில் அமைந்துள்ள தளம்போன்ற 74 க்கு 24 அடி அளவிலான அமைப்பில் 5 அடி 4 அங்குல நீளமும் 2 அடி 6 அங்குல அகலமும் கொண்ட மனித கால்தடம் போன்ற ஒரு பள்ளம் உள்ளது. இதனை ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து தரையிறக்கப்பட்ட போது அவர்கள் அல்லாஹ்விடம் பிழை பொறுத்தல் தேடி 1000 ஆண்டுகள் தியானத்தில் நின்ற இடம் என்று காலாகாலமாக முஸ்லிம்கள் கூறிவருகின்றனர்.

இங்குதான் ஜிப்ரீல் (அலை) தோன்றி அவர்களை அரஃபாத் மலைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆதம் (அலை) அவர்களின் மகன்களான ஆபில்-காபில் தர்காவும் ராமேஸ்வரத்தில் இன்றும் இருக்கின்றது. அவர்கள் ஆதம் மலைக்கும் ராமேஸ்வரத்துக்கும் பயணிக்க உதவிய இயற்கையாக அமைந்த பாலம்தான் 'ஆதம் பாலம்' என்றும் பழங்காலந்தொட்டு வழங்கப்படுகிறது! இச்செய்தி உலகப் புகழ்பெற்ற 'என்ஸைகுலோப்பீடியா பிரிட்டானிக்கா' (Encyclopedia Britanica) போன்ற நூல்களிலும் பதிவாகியுள்ளது.

கீழக்கரை தமிழறிஞர் மர்ஹும் எம்.கே.ஈ. மௌலானா அவர்கள் இந்தச் செய்திகளை ஆய்ந்து 'சேதுமுதல் சிந்துவரை' என்ற ஆய்வு நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்கள். தமிழக முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதிர் முகைதீன் அவர்களும் இது பற்றி பல ஆய்வரங்கங்களில் பேசியிருக்கிறார்கள்.

ஆனால், 'பாபரி மஸ்ஜித்' என்ற பெயரில் 450 வருடங்கள் நிலை பெற்றிருந்த முஸ்லிம்களின் ஓர் இறை இல்லத்தை படிப்படியாகத் திட்டமிட்டு 'ராமஜன்மபூமி ' என்று மாற்றிக்கொண்டு , அதனை திட்டமிட்ட வன்முறை மூலம் தகர்த்துவிட்டு அங்கொரு தற்காலிகக் கோவிலை எழுப்பிக்கொண்டு, அப்பெயரையே இப்போது நடைமுறைக்குக் கொண்டுவிட்ட மாதிரி, முதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் பெயரில் வழங்கப் பட்டுவந்த 'ஆதம்பாலத்தையும்' இப்போது 'ராமர் சேது' வாக்கிவிட்டார்கள் தந்திரமாக!

அதன் பலத்தில்தான் இப்போது இந்தியாவுக்கும், குறிப்பாகத் தமிழகத்துக்கும் பெரும் வளத்தைக் கொண்டுவரும் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியும் , அதனைத் தொடர்ந்து நாட்டில் குழப்பமான அரசியல் சூழல் உருவாகும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது!

ஆனால், இன்றைக்கும் வலைத்தளத்தில் ' ராமர் சேது' என்று தலைப்பிட்டு 'கூகுள்' போன்ற 'தேடு யந்திரம்' வழி தேடினால் அது "ஆதம் பாலம் " என்றுதான் திறக்கிறது! காரணம் ரொம்பவும் தெளிவு! காலாகாலமாக அவை அப்படித்தான் அழைக்கப் பட்டு வந்தன; வருகின்றன!


 

நன்றி : நர்கிஸ் நவம்பர் - 2007 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com