தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


மத்திய அரசின் பலவீனம்.



நான்காண்டுகளுக்கு முன் நாட்டை ஆண்டுகொண்டிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுத்தேர்தலை ஆறுமாதங்கள் இருக்கும்போதே நடத்துவதற்கு முன்வந்த போது நாடு ஒளிர்வதாக தம்பட்டமடித்துக் கொண்டது. எதிர்கால பிரதமர்கள் என்று பெரும்பான்மை ஆளும்கட்சி ஆதரவாளர்களால் கருதப்பட்ட பிரமோத் மஹாஜனும் அருண் ஜெயிட்லேயும் நவயுக அரசியல் விற்பன்னர்களாக நாட்டையே ஹைடெக் தேர்தல் பிரச்சாரத்தால் மூழ்கடித்தார்கள்!

அதிகபட்சம் காங்கிரஸ் கூட்டணி 70-80 இடங்களை மட்டுமே பெறமுடியும் என்ற ஊடகக் கணிப்புக்களால் தங்களுக்கு வெற்றி உறுதி என்ற மிதப்பில் பாஜக கூட்டணி வலம் வந்தது.

ஆனால் பாஜகவின் அப்பட்டமான மதவாத அரசியலும் , மோடி குஜராத்தில் நடத்திக்காட்டிய கொலைபாதக ஆட்சியும், அதனை உலக மீடியாக்களும் இந்தியமக்களும் ஒரு சேர எதிர்த்தும் ஒன்றும் செய்ய இயலாமல் கைபிசைந்துநின்ற வாஜ்பாயியின் தடுமாற்றமும் இந்திய மக்களை பாஜகவிடமிருந்து விலகிநிற்க வைத்தன. பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தெலுங்கு தேசம், திரினாமுல் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகளும் மக்களின் கணிப்பில் தலைகுப்புற வீழ்ந்தன.

காங்கிரஸ், தனிப்பெரும்பான்மையினைப் பெற முடியாவிட்டாலும், யாரும் எதிர்பார்க்காத அளவில் தனது ஆதரவுக்கட்சிகளுடனும், இடதுசாரிக் கட்சிகளின் நல்லாதரவுடனும் மதச்சார்பற்ற மத்திய அரசினை அமைக்க முடிந்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி பிரதமராவது சர்வநிச்சயம் என்று உலகமே நினைத்திருந்த நிலையில் அவர் பின்வாங்கி மன்மோஹனைப் பிரதமராக முன்மொழிந்து அவருக்கும் காங்கிரஸ¤க்கும் ஒரு தனியான மரியாதையை ஏபடுத்தினார்.

நாடு முதன் முதலாக ஒரு அறிவியல் நிபுணரை ஜனாதிபதியாகவும், பொருளாதார வல்லுநரைப் பிரதமராகவும் பெற்றதுடன் இவ்விருவருமே சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களாக அமைந்ததில் இந்திய ஜனநாயகத்தின் பெருமை உலகெங்கும் உயர்வாகப் பேசப்பட்டது. மக்களும் ஒரு வித்தியாசமான நல்லாட்சியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்!

நாட்டின் நடுநிலை நல்லவர்கள் மதவாத சக்திகளிடமிருந்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்ட சந்தோஷத்தில் நிம்மதியடைந்தார்கள்.

தோல்வியில் துவண்டுபோய்விட்டது பாஜக. ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு கட்சியே கலகலத்துப் போனது. வெவ்வேறு கொள்கைத் தளங்களில் நின்ற கூட்டணிக்கட்சிகள் இழுபறி செய்து ஆட்சியைக் கவிழ்க்கும் என்று எதிர்பார்த்த பாஜக அதிலும் தோற்றது.

பிரமோத் மஹாஜன் படுகொலை- அத்வானி பாகிஸ்தானிய மண்ணில் நின்று உபதேசித்த உளறல்கள்- பதவி பறிபோய்விட்ட பரிதவிப்பில் திசையிழந்து போன தொண்டர்கள்- விலகிச் சென்றுவிட்ட பரிவார் தோழமை அமைப்புக்கள்- பெருந்தலைகளின் ஆற்றல் மீது நம்பிக்கை இழந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். -இப்படி அனைத்து முனைகளிலும் அக்கட்சி முனைமழுங்கி சோர்ந்து கிடந்தது!

கோடிக்கணக்கான தியாகிகளின் தியாகத்தில் மலர்ந்த மதச்சார்பற்ற சுதந்திரத்தின் பலனை தொடர்ந்து இந்திய மக்களுக்கு வழங்கமுடியாமல் மதவாத பாஜகவிடம் இடையில் பறிகொடுத்து நின்ற காங்கிரஸ் , மீண்டும் இந்திய மக்கள் கொடுத்த இந்த அரிய வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டு, உட்கட்சி ஜனநாயகத்தை வளர்த்து- ஆதரவுக்கட்சிகளின் மனதை நோகடிக்காமல் அணுசரித்து நடந்து ஒரு நல்லாட்சிக்கு வழியமைத்து நளினமான செயல்பாடுகளால் கிடைத்த வாய்ப்பை நிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா?


நடந்தது -நடப்பது என்ன?

அடுத்தடுத்து எத்தனை சறுக்கல்கள்?

அணுசக்தி அவசியம்தான்; ஆனால் அமெரிக்காவிடம் இப்படி சாஷ்டாங்கமாகக் காலில் விழ வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்து சேர்ந்தது?

ஆபத்தில் உதவிய /ஆட்சியை அசைத்துப் பார்க்க முடிந்த இடதுசாரிகளின் நட்பை அலட்சியப்படுத்துவது போல நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம்?

கலைஞர் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதியின் ஆதரவை மேலிடம் ஒப்புக் கொள்வது உண்மையானால் இங்கே தமிழகத்தில் அக்கட்சியின் 'அடிதடிச் சிறிசுகள்' - ஆளுக்கொரு மூலையில் நின்று சில்மிஷம் பேச அனுமதிப்பது ஏன்?

17000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள நேரும் ஒரு நாட்டில் உலக அளவில் பேசப்படும் பணக்காரர்களின் பட்டியலை நீளமாக உருவாக்குவதில் என்ன பெருமை?

அவசியப் பொருட்களின் விலைவாசி உச்சியில் நின்று பேயாட்டம் போடுவதால் சாமான்ய இந்தியன் தள்ளாடிக் கொண்டிருக்கும் போது, பங்குச் சந்தையின் சிறிதளவுத் தடுமாற்றம் கூட சிறப்புக் கவனம் பெறுவது ஏன்?

தாழ்த்தப் பட்டவர்களுக்கு/சிறுபான்மை மக்களுக்குச் செய்ய முன்வந்த சட்டப்பூர்வமான சலுகைகளைச் செய்துமுடிக்க முடியாதபடி சிக்கல்களை ஏற்படுத்தும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறுவது ஏன்?

நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களே தீவிரவாதத்தைப் பிரதிநித்து வருவதான தோற்றத்தை உயர்மட்டக் காவல்துறை தொடர்ந்து ஏற்படுத்துவது இன்னமும் ஒழிந்து போகவில்லையே?

கொலைவெறிப் பாதகர்கள் பட்டம் பதவிகளுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருக்க, செய்யாத குற்றங்களுக்காக வெஞ்சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு எப்போது நீதி கிடைக்கப் போகிறது?

கோடிக்கணக்கில் மூலதனமிடப் பட்ட ஒரு தேசியத் திட்டம் ( சேது சமுத்திரத் திட்டம்) மதத்தின் பெயரால் முடக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஏன் நலிந்து போயிற்று?

அடுக்கடுக்காக குஜராத்தில் நடந்த அக்கிரமங்களுக்கு மூல பிதாவான மோடி பொது மேடையில் நின்று பகிரங்கமாக சவால்விட முடிந்ததும்- டெஹெல்கா வெளிப்படுத்திய அதிர்ச்சியளிக்கும் உண்மை வாக்கு மூலங்களை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று நியாயம் கேட்க முடியாமல், மக்கள் மன்றத்தீர்ப்புக்கு விடுவதாகக் குழந்தைத்தனம் காட்டியதும் அப்பட்டமான பலகீனத்தின் வெளிப்பாடு அல்லவா?

கடந்த 4 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாதது மட்டுமல்ல; பாஜக மறுபடியும் புத்துயிர் பெற்றுக் கொக்கரிக்க விட்டதுதான் ஆட்சி மாற்றத்துக்கு வழியமைத்துத்தந்த மக்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசு தரும் பிரதி உபகாரமா?

இதுவரை சாதிக்க முடியாத எதனை இன்னும் ஒரு வருடத்தில் இந்த அரசு சாதிக்கப் போகிறது?

ஏன்? ஏன்? இந்த பலகீனம்?

இதுதான் நாட்டில் நல்லாட்சியை -அரசியல் சட்டப் படிக்கான ஜனநாயகக் கூட்டாட்சியை -மதச்சார்பற்ற ஆட்சியை எதிர்பார்த்து வாக்களித்த ஒவ்வொரு இந்தியனின் கேள்வியாகவும்/ ஆதங்கமாகவும்/ ஏக்கமாகவும்/ ஏமாற்றமாகவும்/ பீதியாகவும் இருக்கிறது!


நன்றி : நர்கிஸ் மார்ச்-2008 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com