|
Refer
this Page to your friends
மலேசியாவில் சுனாமி.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மலேசியத் தேர்தல்
முடிந்துவிட்டது! தேர்தல் முடிவுகள் ஆளும் பாரிஸான்
கூட்டணியை மட்டுமல்ல, ஆசியாவையே அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளன.
இந்நிகழ்வு பெரும் அரசியல் சுனாமி என்று வர்ணிக்கப்படுகிறது!
பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெருகிவிட்ட லஞ்ச ஊழல்,
உள்நாட்டுப் பாதுகாப்பில் அக்கறையின்மை என்ற பரவலான
அதிருப்திகள், அதிக உரிமைகள் கேட்டு சிறுபான்மையோர்
போராட்டம் இப்படி பல வெளிப்படையான பிரச்சினைகள் பாரிஸானை
இத்தேர்தலில் பலகீனப்படுத்தும் என்று அனைவருமே
எதிர்பார்த்தார்கள்.
ஆனால் பொதுவான இந்த எதிர்பார்ப்பையும் மீறி சில
பேரதிர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.
• ஆளும் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு பலம் இப்போது
வெகுவாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. 30% வாக்கு வீழ்ச்சி;
சாதாரண மெஜாரிட்டிதான்;kelantan, பினாங்கு, பேராக், கெடா,
சிலாங்கூர் ஆகிய 5 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் வசம்; 4
அமைச்சர்கள் படுதோல்வி ! வெறும் 19 இடங்களைப் பெற்றிருந்த
எதிர்க்கட்சிகள் இப்போது 81 இடங்களைப் பெற்றுள்ளன.
• முன்னாள் உதவி பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஒரு தோற்றுப்போன
சக்தியல்ல என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது; அவர்
மட்டுமே 31 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார்.
அவரது மனைவியும் மகளும் வென்றிருக்கிறார்கள்!
• மலேசிய இந்தியக் காங்கிரஸின் நீண்டகாலத் தலைவரும், மூத்த
கேபினட் மந்திரியுமான டத்தோ சாமிவேலு தனது சொந்தத்
தொகுதியிலேயே தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். மலேசிய
இந்தியக் காங்கிரஸ் இந்திய வம்சாவளி வாக்காளர்களிடமிருந்து
வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது.
• உலமாக்களால் தலைமைதாங்கி நடத்தப்படும் 'பாஸ்' என்ற
இஸ்லாமியக் கட்சி பெரும்பலத்துடன் தன்னை நிலைப் படுத்திக்
கொண்டுவிட்டது.
• சீனர்களும் இந்திய வம்சாவளியினரும் மட்டுமல்ல, மலாய்
வாக்காளர்களும் பெருமளவில் ஆளும் கூட்டணிக்கு எதிராக
வாக்களித்திருக்கிறார்கள்.
.... இப்படி ஒவ்வொன்றாய் இடிகள் இறங்கியிருக்கின்றன.
பிரதமர் பதாவி தமது சொந்த மாநிலமான பினாங்கை
எதிர்க்கட்சியிடம் இழந்துவிட்டார்; அவரும் இரண்டாம் நிதி
அமைச்சர் டான்ஸ்ரீ நூர் முகம்மது யாக்கூப் அவர்களும்தான்
பினாங்கில் வெற்றி பெற்ற இரண்டே உறுப்பினர்கள்!
தேர்தல் முடிந்த கையோடு அம்னோ தலைமையிலிருந்து பதாவி
விலகவேண்டும், அடுத்த பிரதமராக உதவிப்பிரதமர் டாக்டர்
நஜீப் பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது!
இதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமை
தாங்குகிறார் என்பது முக்கிய விசயம்!
ஆனால், தேர்தலுக்குப் பின் கூடிய பாரிஸான் நேஷனல்
கூட்டணியின் உறுப்புக்கட்சிகள் அனைத்தும் பிரதமர்
அப்துல்லாஹ் பதாவி அவர்களுக்கு தங்களது முழுமையான ஆதரவை
அறிவித்ததுடன் - துணைப்பிரதமர் டாக்டர் நஜீப் உட்பட
அம்னோவும் அமோக ஆதரவைத் தெரிவித்து , பதாவி இரண்டாம்
முறையாக மலேசியாவின் பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.
இது வெளிநாட்டு மூலதனமிடுவோரை ஆற்றுப்படுத்தி , தேர்தல்
முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பங்குவர்த்தகச் சரிவை
ஓரளவுக்கு சமன் படுத்தும் என்ற நம்பிக்கை
முளைத்திருக்கிறது. இத்தலையங்கத்தை எழுதும் நிமிடம் வரை
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.
முன்பொருமுறை 1969-ல் ஆளும் கட்சி மூன்றில் இருபங்கு
மெஜாரிட்டி பெறாமல் போனது; அதைத்தொடர்ந்து வன்முறை
ஏற்பட்டு நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப் பட்டது. அப்படி
எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் அனைத்துத்
தரப்பிலும் நிலவுகிறது!
மலேசியா நமக்கு நட்பு நாடு! லட்சக் கணக்கான நமது சமுதாய
மக்கள் மலேசியாவின் வளர்ச்சிக்கு தங்கள் வாழ்க்கை
முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். மலேசியக்
குடியுரிமையுடனும், நிரந்தர வாசிகள் என்ற நிலையிலும்,
வொர்க் பெர்மிட் பெற்றும் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள்
அனுப்புகின்ற பணத்தை வைத்தே வாழ்க்கையை நகர்த்தும் லட்சக்
கணக்கான குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளன. நூற்றுக் கணக்கான
சிறு சிறு கல்விக் கூடங்கள் -பொதுசேவை மையங்கள் -சமுதாய
சிற்றிதழ்கள் அவர்கள் வழங்கும் சந்தா -விளம்பர உதவிகளின்
பலத்தில் நிற்கின்றன.
தங்களுக்கென்று அவர்கள் ஒரு தனி அரசியல் கட்சியை
உருவாக்கிக் கொள்ளவில்லை; உருவாகிய கட்சிகளையும்
தற்காத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலும் ஆளும்கட்சியையே
ஆதரித்து தங்கள் தொழில்களிலேயே கவனம் செலுத்தி வருபவர்கள்!
அவர்களது நல்வாழ்வுக்கு நாட்டின் அமைதி மிக முக்கியம்.
எனவே மலேசியாவின் அமைதிக்கும், செழுமைக்கும், அரசியல்
உறுதிப் பாட்டுக்கும் பிரார்த்தனை செய்வது நமது
கடமையாகிறது!
நன்றி : நர்கிஸ்
ஏப்ரில்-2008
இதழ்
Refer this Page to your friends
|