தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends

துணைக்கண்டத்தில் துயரம்
 


பாகிஸ்தானை மையமாக வைத்துத் தாக்கிய பூகம்பம் இந்தியா, ஆ·ப்கானையும் சேர்த்து துணைக்கண்டத்தையே துயரத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறது. ரமலான் நோன்பிலிருந்த பல்லாயிரம் மக்கள் ஒரு விநாடிப் பொழுதில் தங்களது சொந்த பந்தங்களை - சொத்து சுகங்களை விட்டுவிட்டு, படைத்தவனிடம் மீண்டிருக்கிறார்கள். அதிக சேதம் பாகிஸ்தானுக்கே என்பது தெளிவாகியிருக்கிறது. நம் பிரதமர் உடனே நிவாரணப் பணிக்காக பாகிஸ்தானுக்கு உதவ முன் வந்திருக்கிறார்.

காஷ்மீர் முஸ்லிம்கள் பல்லாண்டுகளாக சொல்லொனாத் துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்த அவதிகள் - அவலங்கள் பெரும்பாலும் மனிதன் உண்டாக்கியவை. அரசியல் காரணங்காளால் ஏற்பட்டவை. இருபுறமும் வாழும் இரண்டு மூன்று சந்ததியைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கை என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டிருக்கிறது. இப்போதுதான் இருநாடுகளின் தலைமைகளும் இப்பிரச்சினைகளைக் களைய பேச்சு வார்த்தைகளைத் துரிதப் படுத்தி வருகின்றன.

ஆ·ப்கானிஸ்தான் பல வருடங்களாக உள்நாட்டுப் போரால் - வெளிநாட்டுப் படையெடுப்புகளால் சுக்கு நூறாகி நொறுங்கிக் கிடக்கிறது. இயற்கை அழகும் - எளிமை மலர்ச்சியும் மிக்க அந்த நாடு, தான் செய்யாத தவறுகளுக்காக தண்டணைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு இயற்கைப் பேரழிவு நேர்ந்திருக்கிறது.

இறைவனின் நாட்டங்களை நாம் அறியோம். பலகீனமான நமக்கு நாம் சந்திக்கும் சிரமங்கள் மட்டும்தான் தெரியும். ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே எல்லாமும் தெரியும் என்ற அளவில் இந்த நஷ்டங்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் இந்த நஷ்டங்களை - துயரங்களை இந்நாடுகள் இணைந்து ஒரே நேரத்தில் சந்திக்க நேர்ந்திருப்பதை அலசிப் பார்க்கும்போது , நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் - ஒரு கொடியில் பூத்த மலர்கள் என்ற உண்மை உணர்த்தப் பட்டிருப்பதாகவே தெரிகிறது. அதே போல இந்த இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நிவாரணப் பணிகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மன இறுக்கங்கள் குறைந்து நம் சகோதர பாசம் மேலும் நெருக்கமாவதற்கும் வாய்ப்பேற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே துன்பத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இயற்கைச் சோதனையின் இன்னல்களிலிருந்து விரைவில் மீட்சி கிடைக்கவும் - அவர்கள் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் மலரவும் ரமலானின் கருணை ரேகைகள் இன்னமும் படர்ந்து கொண்டிருகிற இந்த நேரத்தில் நாம் அனைவரும் அந்த இறைவனிடமே அதன் பொருட்டு மன்றாடி நிற்கிறோம்.


NANDRI-NARGIS- NOVEMBER-2005


dஇர்ரம் காட்டிய புதிய உத்தி

அலிகார் முஸ்லிம் யுனிவர்சிடி விவகாரம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com