தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

 

Refer this Page to your friends

மீலாத் சிந்தனைகள் .....


இதோ நம் முன்னே இன்னொரு பரிசோதனைக்களம்!

அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவர்கள் அவணிக்கு வந்த நாளை நினைந்து மகிழ்ந்து கொண்டாடுகிற இந்த வேளையில் நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு!

63 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த அந்த மனிதப் புனிதர் தம் இறைவன் அவனது வேதத்தின் வழி தமக்கிட்ட கட்டளைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பூரணப்படுத்திவிட்டு அல்லாஹ்விடம் மீண்டார்கள்!

திருமறையின் ஒவ்வொரு இழையையும் தமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலித்து தமது உம்மத்துக்களின் இம்மை வாழ்க்கைச் செழுமைக்கும் மறுமை வாழ்க்கைச் சிறப்புக்கும் அதனையே மூலமாக்கிவிட்டு தமது நபித்துவத்தின் இம்மை ஏட்டை நிறைவு செய்தார்கள்!

இனி அவர்கள் தமது உம்மத்துக்களுக்காக - அவர்களது பாவச்சுமை மீட்சிக்காகப் மஹ்ஷர் நாளில் பரிந்துரை செய்கின்ற பகுதி மட்டுமே பாக்கியிருக்கிறது!

இந்த இடைப்பட்ட காலத்தில் இம்மையில் இருக்கிற அவர்களின் உம்மத்துகளான நமக்கு அவர்கள் தந்து சென்ற திருமறை புர்கானே ஆதாரம்!

அவர்களது வாழ்வும் வாக்குமே அச்சாணி !

அவர்களது அடியட்டி வாழ்ந்த சஹாபாக்கள், இறைநேசர்கள், தூய அடியார்கள், காட்டிய வெளிச்சங்களின் துணையுடன் எந்தப் பிசிறும் இல்லாமல்- பிழையும் செய்யாமல் நகர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது!

அதுதான் இஸ்லாம்!
அதுதான் இஸ்லாமியம்!
அதுதான் ஒரு முஸ்லிமிடமிருந்து உலகம் எதிர்பார்க்கிற ஒரே விழுமியம்!

ஆனால்.... அந்த விழுமியம் நம்மிடம் எந்த அளவுக்கு வேர் பாய்ச்சி இருக்கிறது?

நமது அன்றாட வாழ்வின் நகர்ச்சியில் இழைந்து நிற்கிறது?

வேத வரிகளின் வெளிச்சத்தில் வெம்மைக்கு இடமில்லை; இடமிருக்க வாய்ப்பில்லை!

ஆனால்... நம் வாழ்வு வெம்மையில் வெதும்புவது ஏன்?

குடும்பத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பிரச்சினை!
குடும்ப நகர்ச்சியின் ஜீவனான தொழில்துறைகளில் நெருக்கடி!
பொதுவாழ்வில் பாதுகாப்பின்மை!
பொதுஒழுக்கத்தில் தடுமாற்றம்!

பகல் முழுதும் உழைத்துவிட்டு இரவில் படுத்தால் எத்தனை பேருக்கு ஒழுங்காகத் தூங்க முடிகிறது?

நாட்கணக்கில் உண்ண உணவின்மை!உடுத்த ஒரே உடை!படுக்க ஒரு ஈச்சம் பாய்!

ஆனால்... அன்றாட அமல்களின் கடைப்பிடிப்பில் அத்தனை துயரங்களும் மாய்ந்து போன அதிசயத்தை நமது முன்னோர்கள் நிகழ்த்திக் காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள்!

தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் - உயிர் உட்பட -அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அர்ப்பணித்து வாழ முடிந்தது அவர்களால்!

ஒரு கவலையும் இல்லாமல் தூங்க முடிந்தது அவர்களால்!

ஆனால் இப்போது அந்த தியாகங்களுக்கெல்லாம் அவசியம் இல்லை!

இருந்தும் ஏன் நாம் இப்படி..?

சிந்திப்போமா?

அந்த சிந்தனை வழி நம்மை சீர்படுத்திக் கொள்வோமா?

 

நன்றி : நர்கிஸ் மார்ச் -2009 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com