தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends

அலிகார் முஸ்லிம் யுனிவர்சிடி விவகாரம்

அது பட்டா நிலம் - புறம்போக்கு அல்ல!


அலிகார் முஸ்லிம் யுனிவர்சிடிக்கு மைனாரிடி அங்கீகாரத்தை ரத்துச் செய்து அலஹாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சுதந்திர இந்தியாவின் மதசார்பற்ற சக்திகளுக்குக் கொடுக்கப் பட்ட மிக மோசமான அடியாகும். ஒரு பெற்றோருக்குப் பிறந்த குழந்தை அவன் வளர்ந்து எவ்வளவு பெரியவன் ஆனாலும் - என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளானாலும் ந்தக் காலத்திலும் அப்பெற்றோரின் குழந்தையாகவே இருப்பான் - கருதப் படுவான். அலிகார் யுனிவர்சிடியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டால்தான் நாம் கூற வரும் கருத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

19 - ஆம் நூற்றாண்டில் இந்தியா கண்ட மகத்தான தலைவர்களுள் சர் சையித் அஹ்மத் கான் (1817-98 ) அவர்கள் முக்கியமானவர். இந்திய முஸ்லிம்கள் நவீனக் கல்வியில் - அறிவியலில் முன்னேறாதவரை அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான வாய்ப்பே இல்லை என்று கருதிய அப்பெரியார் படாத பாடு பட்டு, நாடெல்லாம் அலைந்து திரிந்து, பழிச்சொல்லையும் - அவமானங்களையும் தாங்கிக் கொண்டு 1877-இல் நிறுவிய கல்விக்கூடம்தான் "முஹம்மடன் ஆங்க்லோ ஓரியண்டல் காலேஜ் " . அது தொடங்கப்பட்ட நோக்கம் முஸ்லிம்களுக்கு நவீனக் கல்வி தருவது. அதற்கு முழுமையான மூலதனமிட்டது முஸ்லிம் சமுதாயம். அதுதான் ஆங்கிலேயர் காலத்தில் 1920 -இல் "அலிகார் முஸ்லிம் சர்வ கலாசாலை"யாக மாற்றம் கண்டது.

பிறகு, நியூ டெல்ஹி, ஜவஹர்லால் நேரு , பனாரசு பல்கலைக் கழகங்கள் போல தேசிய பல்கலைக் கழக நிலைக்கு உயர்ந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30 (1) பிரிவின்படி 1981- ல் முறையான சட்டத் திருத்தின் மூலம் (அமென்ட்மென்ட்) முழுமையான சிறுபான்மை அங்கீகாரத்தைப் பெற்றது. இது ஆங்கிலேயர்கள் அளித்த பலகலைத் தரத்தினை மீண்டும் அடிக்கோடிட்ட விசயம் தானே தவிர வேறல்ல.

ஒரு மாம்பூ முதலில் மாம்பிஞ்சாகிறது ; பிறகு மாங்காய் ஆகிறது ; அதன் பிறகு மாம்பழம் ஆகிறது - இது ஒரு வளர்ச்சியின் வெவ்வேறு படிகள்; அவ்வளவுதான்! வேறு வித்தியாசமான வகைப் பழமாக அது ஒருபோதும் ஆவதில்லை. அப்படித்தான் முஸ்லிம்கள் மூலதனத்தில் - முஸ்லிம்களால் தொடங்கப் பட்ட முஹம்மடன் ஆங்க்லோ ஓரியண்டல் காலேஜ் - பல்கலைக் கழகமாக மாற்றம் கண்டது . அப்போதும் அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்களே! அரசு உதவி பெறுவதால் அது அரசுக்குச் சொந்தமானது என்று ஒருபோதும் கூற முடியாது. அதுபோக, அலிகார் பல்கலை முஸ்லிம்களின் தனித்தன்மை வாய்ந்த கலாசாரப் பிரதிபலிப்பின் தாயகமாகவும், பண்பாட்டு கேந்திரமாகவும், பெருமைக்குரிய சின்னமாகவும் விளங்குகிறது.

பா.ஜ.க. மத்திய ஆட்சிக்கு வந்தது தொடக்கம் (முதலில் 13 -நாட்கள் ; பிறகு 13 மாதங்கள் ; பிறகு முழுமையாக நாலரை ஆண்டுகள்) அலிகார் அதன் கண்களை உறுத்தத் தொடங்கியது. நிர்வாகக் கட்டமைப்புக்குள் முஸ்லிம் பெயர்தாங்கிகளின் ஊடுருவல்கள் தொடங்கின. பா.ஜ.க. வின் உதவித் தலைவர் முக்தார் அப்பாசு நக்வி , அலிகாரின் முஸ்லிம் தன்மையைச் சீர்குலைப்பதற்காகவே அங்கு நிறுவப் பட்டிருக்கிறார் என்பதை அவரது நடவடிக்கைகள் - அறிக்கைகள் அனைத்தும் தெளிவாகவே உணர்த்துகின்றன.

2003 - டிசம்பரில் யு.ஜி.சி. என்ற பல்கலை நிதி உதவிக் கமிஷன் அலிகார் பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வு சம்பந்தமாக ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்தது. யு.ஜி.சி. போல அலிகார் பல்கலையும் ஒரு தன்னதிகாரமிக்க அமைப்புதான் - நாடாளுமன்ற சட்ட வடிமைப்பின் வழியில் உருவாகிச் செயல்படுவதுதான். அதை அந்நிறுவனம் சூப்பர்வைசர் போலக் கட்டுப் படுத்தவெல்லாம் முடியாது என்ற பிரச்சினை உருவாகியது. பெரிய எதிர்ப்புகள் எழுந்து அடங்கின.

இப்போதைய மதச் சார்பற்ற அரசு மத்தியில் பொறுப்பேற்ற பின் இந்த மே மாதம் மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு அர்ஜுன் சிங் அலிகாரில் முஸ்லிம் மாணவர்களுக்கு 36 துறைகளில் மட்டும் 50% ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தவுடன் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டவர் இதே முக்தார் அப்பாசு நக்விதான்! மத்திய அரசு, அலிகார் பல்கலைக் கழகத்தை 'மதரசா ஆக்கப் பார்க்கிறது என்று இவர் கொச்சைப் படுத்தினார். இப்போதும் இவர் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது. இவரை முடுக்கிவிட்டுவிட்டு மற்றவர்கள் வினயமான மௌனம் சாதிக்கிறர்கள்.

இந்த ஒதுக்கீடு நாட்டின் சட்டப்படி , அதிகாரபூர்வமாக 1987 -ல் அமைக்கப் பட்ட "பத்ருத்தீன் தியாப்ஜி கமிட்டி" மற்றும் 2001- ல் அமைக்கப் பட்ட " மும்தாஜ் அஹ்மத்கான் கமிட்டி" இவற்றின் பரிந்து¨ரையின் பேரில் , அப்போதைய மனித வள மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி துவேஷம் காரணமாக ஒதுக்கீடு வழங்க மறுத்துவிட்டததைச் சரி செய்வதற்காக வழங்கப் பட்டதாகும். அவர் செய்ய மறுத்ததைத்தான் இந்த அரசு செய்தது.

நாம் இங்கே நீதி மன்றத் தீர்ப்பு பற்றி எதிர்க் கருத்தைச் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்ப்பு சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைப் பாரதூரமான அளவுக்குப் பாதிக்கக் கூடியது என்பதைச் சுட்டிக் காட்டவேண்டிய கடமை நமக்கிருக்கிறது! நீதி மன்றங்களுக்குள்ளும் துவேஷ ஊடுருவல்கள் நிகழ்ந்துவிட்டனவோ என்ற சன்தேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

இத்தீர்ப்பால் இப்போது அரசின் ஒதுக்கீட்டின் படி வெவ்வேறு வகுப்புக்களில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பலநூறு மாணவர்கள் - இனி சேரவிருப்போர் எல்லாம் பாதிக்கப் படுவார்கள். அலிகாரின் தனித்தன்மை முற்றிலுமாக பாதிக்கப் படும். இதை இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது!

இவ்விசயத்தில் பா.ஜ.க. கூக்குரலிடுவதை நாம் கண்டுகொள்ளவில்லை. அது அதற்காகவே முக்தார் அப்பாசுகளை தன் பார்வைக் குருவிகளாக வைத்திருக்கிறது. ஆனால் இவ்விசயத்தில் கம்யூனிசக் கட்சிகள் மதவாதக் கட்சியின் கர்ண கடூர இசையை இசைப்பது நமக்கு வியப்பைத் தருகிறது. மூத்த கம்யூனிச வாதியான திரு சுர்ஜீத் பதவி விலகி அவரிடத்தில் பதவி ஏற்றிருக்கும் திரு காரத் பல தருணங்களில் அபசுவரமாக ஒலித்து வருகிறார்.

பொதுவாக கம்யூனிசவாதிகள் தாழ்த்தப் பட்டோர் - அடக்கப் பட்டோர் - சிறுபான்மைமக்கள் நலம் இவற்றுக்காக மற்ற எவரையும் விட அதீத அக்கறையுடன் குரல் எழுப்புவார்கள். ஆனால், காரத் தொழிலாளர் நலம் - பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தை சிறுபான்மைமக்கள் நலம் உள்ளிட்ட இந்த விசயங்களுக்காக முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க. வின் உண்மை நோகத்தைப் புரிந்து கொண்டு கம்யூனிச்டுகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது நமது வேண்டுகோள்!

அலிகாரின் முன்னாள் துணை வேந்தர் - பழுத்த வயதினர் (80 வயது) சையித் அஹ்மத் அவர்கள் இந்தத் தீர்ப்பை வெகுவாகச் சாடியிருப்பதுடன் அதிர்ச்சியையும் தெரிவித்திருக்கி¢றார். அலிகாரின் அடிப்படை நோக்கமே இதனால் தோற்கடிக்கப் பட்டுவிடும் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார். இன்னாள் துணைவேந்தர் - ஆசிரியர் மாணவர் பேரவைகளும் கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர். அலிகாரில் பெரும் பதற்றம் நிலவுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசு உடனே இத்தீர்ப்புக் கெதிராக உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் - அல்லது புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதே நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைத்துப் பொறுமையுடன் வாழ்ந்துவரும் அனைத்து நியாயமான மக்களின் எதிர்பார்ப்புமாகும்.

இது ஒன்றும் கேட்பாரற்றுக் கிடக்கும் புறம்போக்கு நிலம் அல்ல ; மாறாக, சட்டப் படிக்கான பட்டா நிலமாகும். அலிகார் பல்க¨லைக் கழகம், முஸ்லிம் சமுதாயத்தின் சொந்தப் பிள்ளையாக்கும் ; ஊர் பேர் தெரியாத அநாதைக் குழந்தை அல்ல. அதன் உரிமையாளர்களான முஸ்லிம்கள் இதைச் சும்மா விட்டு விடுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்தால், அவர்கள் ஏமாந்துதான் போவார்கள்.

சிறுபான்மை மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை மதித்து அரசு துரிதமாக இயங்கவேண்டும் என நாமும் சமுதாயத்தின் சார்பில் உரத்துக் குரல் எழுப்புகிறோம்!



NANDRI-NARGIS


dதுணைக்கண்டத்தில் துயரம்

மெகா சீரியல்கள் - மெகா பாதிப்புகள்!

Refer this Page to your friends
 

Chittarkottai.com