தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends

மெகா சீரியல்கள் - மெகா பாதிப்புகள்!

தொலைக்காட்சிப் பெட்டிகள் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு இழைக்குள்ளும் ஐக்கியமாகிவிட்டன. தொலைதூர விசயங்கள் நொடிப்பொழுதில் நமக்கு வந்து சேர்ந்துவிடும் வசதியால், வாழ்க்கையில் நிறைய நன்மைகள் விழைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. புதிய தொழில் உபாயங்கள் - அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஆக்கப் பணிகளுக்குப் பயன் படுத்தப் படும் ஆற்றல், அதீத - அகன்ற கல்வி முன்னேற்றம், பெருகும் வேலை வாய்ப்புகள், இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.

அதே போல, அவை நமக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்களைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதும் அவசியம் என்பதை - அதிலும் தமிழகத்தில் இன்று தனது இரும்புக்கைகளால் இருக்கமாகக் கட்டிப் போட்டிருக்கும்
மெகா சீரியல்கள் நம்மவர்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ள - ஏற்படுத்த வாய்ப்புள்ள சில தாக்கங்கள் பற்றிய ஒரு எச்சரிக்கை சார்ந்த அறிமுகமே இந்தத் தலையங்கம்!

பொதுவாகவே நமது பெண்களில் பணிக்குச் செல்வோர் மிகக் குறைவுதான்! 90% -க்கும் அதிக மானவர்கள் குடும்பத்தலைவிகளே! பொருளாரத் தேடல்களில் வீட்டுத் தலைவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பலவிதமான நெருக்கடிகளுக்குள் உட்காரக்கூட நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போது, பணக்கார - நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த நம் பெண்கள் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் படுத்து தூங்குவதும் - அடுத்த வீட்டுப் புறம் பேசுவதும் - அல்லது பொழுது போக வேண்டுமே என்பதற்காக 'குடும்பப் பத்திரிக்கைகள்' என்ற பெயரில் வரும் கண்ட கண்ட பத்திரிக்கைகளைப் படிப்பதுமாகவும் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த நிலை இப்போது மாறி, தொலைக் காட்சிப் பெட்டிகளே கதியாகிக் கிடக்கின்றனர் என்பது ஒன்றும் ரகசியம் இல்லை.

ஏழைப் பெண்களில் கூட ஒரு சில இடங்களில் தான் நெசவு - பீடி சுற்றல் - பாய் முடைதல் - கூடை பின்னுதல் என்ற கைத்தொழில்களில் ஈடுபாடு உள்ளதே ஒழிய அவர்கள் கூட அடுத்த வீட்டு தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் தான் ஆத்மார்த்தமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொன்டுள்ளனர் என்பதும் உண்மையே!

பல்வேறு சானல்களில் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பாகும் இலவச சினிமா அல்லது அது சார்ந்த சுவையான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதால் , வணக்க வழிபாடுகள் - அன்றாட அமல்கள் கடைப்பிடிப்பில் பெரிய ஓட்டைகள் விழுந்து விட்டைதை சமுதாய ஆய்வாளர்கள் - ஆலிம்களுடன் சமுதாயப் பத்திரிக்கைகளும் சுட்டிக் காட்டி எச்சரித்து வந்தன.

அதன் அடுத்த படியாக இப்போது சினிமாவை விடவும் பல மடங்கு மூர்க்கத்துடன் நம் பெண்களைக் கட்டிப் போட்டிருப்பது மெகா சீரியல்கள் தான் என்ற உண்மையை மறைப்பதற்கில்லை. சினிமா ஒரு சிறுகதை போல. ஒரு சிறு கருவை மையமாக வைத்துப் பேசப்படும் நிகழ்வு. அதன் தாக்கம் மிகக் குறைவானதே. ஆனால் இந்த சீரியல்கள் தொடர்கதைகள் போல. ஆழ அகலமாக ஒரு விசயத்தை அலச அவற்றில் வாய்ப்புக்கிடைக்கிறது.

ஆரம்பத்தில் 50 - 60 - என்று தொடங்கி , 200 - 300 என்று அதிகரித்து வரத்தொடங்கிய இந்த சீரியல்கள் இப்போதெல்லாம் ஆயிரம் எபிஸோடுகளை - அல்லது அதற்கு மேலும் கொண்டதாக அமைகின்றன. தொடர் கதைகளின் சஸ்பென்ஸ¤கள் கற்பனையால் மட்டுமே பார்க்க முடிந்தவை. ஆனால், சீரியல்களின் சஸ்பென்ஸ¤களோ நேரடித் தாக்கத்தை (விஸ¤வல் இம்பேக்ட்) ஏற்படுத்த வல்லவை. அதிலும் அடுக்கடுக்காக இன்னல்களைச் சந்திக்கும் குடும்பப் பெண்களை மையமாக வைத்துப் பின்னப்படும் சீரியல்களின் வரவுகள் அதிகமாகிவிட்டன.
மெட்டி ஒலி பார்க்க முடியாததால் ஒரு முஸ்லிம் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்பதும் உண்மை.

தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்களோ இல்லையோ, இப்போது பிரபலமாகவுள்ள கோலங்களின் 'அபி', அகல்யாவின் 'அகல்யா' இவர்களுக்காக லட்சக் கணக்கான பெண்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் காண முடிகிற யதார்த்தம்!

இந்த சீரியல்களை குடிப்பழக்கத்துக்கு - போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் போல அதிகமாகப் பார்ப்பவர்கள் நடுத்தர வயதுப் பெண்களே! இவர்கள் இல்லங்களின் எத்தனையோ சோகங்கள் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் போது - அதன் சுமையே அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொன்டிருக்கும் போது சீரியல்களின் கதாநாயகிகளின் துயரங்களையும் - துக்கங்களையும் மனதில் உள்வாங்கிக் கொண்டு மருகுவோர் லட்சக் கணக்கில் உள்ளனர்.

பொதுவாகப் பெண்களுக்கு நாற்பது - ஐம்பது வயது என்பது மோசமான காலக் கட்டம். அவர்கள் பிரிமெனொபாஸல் ஸின்ட்ரோம் (மாதவிடாய் நிற்பதற்கு முன் ஏற்படும் மனநிலை பாதிப்புகள்) - போஸ்ட் மெனொபாஸல் ஸின்ட்ரோம் (மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மனநிலை பாதிப்புகள்) இவற்றால் எரிச்சல், ரத்தச் சோகை, உடல் பலகீனம், கோபம், எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க முடியாமை, தூக்கமின்மை, தன்னம்பிக்கைக் குறைவு, இப்படிப் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களில் பலருக்கு திருமண வயதில் பெண்கள் - சொன்ன பேச்சுக் கேட்காத மகன்கள் - ரத்த அழுத்தம் - இதய நோய் என்று நோய்களில் அல்லாடும் கணவர்கள், கடன் சுமை, தொழிலில் நஷ்டம், இப்படி அவரவர் குடும்பப் பிரச்சினைகளே மூச்சு முட்டச் செய்து கொண்டிருக்கும் யதார்த்தம்!

அதிலும் இந்த வயதைச் சேர்ந்த நம் பெண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், அல்லது இரண்டும், இதன் பாதிப்பில் இதயத்திலும் பிரச்சினை! கணவர் - பிள்ளைகள் பிழைப்புக்காக பல கஷ்டங்களுடன் வெளி நாடுகளில்! கட்டிக் கொடுத்த பெண்பிள்ளைகள் அடிக்கடி கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து தரும் நிம்மதிக் குறைச்சல்கள்! விசா மோசடியில் பெரும் பணத்தை இழந்துவிட்டு நிற்கும் மகன்கள்! ஒத்தடம் கொடுக்கக் கூட துணையில்லாத தர்ம சங்கடங்கள்! என்று சொல்லொனாத் துயரங்கள்!

இத்தனைக்கும் மத்தியில் அகல்யாவின் காணாமற்போன கணவன் - குழந்தைக்காகவும், கைவிடப் பட்ட அபி பலமுனைத்தாக்குதலில் அல்லாடுவதற்காகவும் கண்ணீர் விட்டுக் கதறி டென்ஷனை அதிகப் படுத்திக் கொள்வதும், அல்லது, சொர்க்கத்தின் வில்லி கவிதா, நிம்மதியின் நந்தினி, கோலங்களின் ஆதி, ஆனந்தத்தின் அபிராமி போன்ற வில்லன்களும் - வில்லிகளும் தரும் தொந்தரவுகளுக்காகக் கோபம் கொண்டு, சிகிச்சைக்காக பெரும் பணம் செலவழித்துக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் ரத்த அழுத்தத்தை 'ஜிவ்'வென்று ஏற்றிக்கொள்வதும் அவசியம் தானா? அடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பில் - அச்சத்தில் - கழிவிரக்கத்தில் தூக்கத்தைத் தொலைப்பதில் பொருளிருக்கிறதா?

மனதை இலேசாக்கும் - டென்ஷனைக் குறைக்கும் பொழுது போக்குகளை நாடுவதில் தவறில்லை. அதற்காக பொழுது போக்கு என்ற பெயரில் தொலைக் காட்சிப் பெட்டிகளைச் சரணடைந்து, அதனாலேயே டென்ஷனை அதிகரித்துக் கொண்டு துவண்டு போவது அறிவுடைமையா?

சொல்லுங்கள்...!

அதைப் பற்றி எச்சரிக்கை செய்வதற்காகவே இத்தலையங்கம்!

NANDRI-NARGIS DECEMBER 2005


dஅலிகார் முஸ்லிம் யுனிவர்சிடி விவகாரம்

தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com