|
Refer this Page to your friends
வேண்டாம் விபரீதம், ப்ளீஸ்!
(ஜமாஅத் ஒற்றுமை)
அண்மைக் காலங்களாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வரும் தகவல்கள் கவலை
அளிப்பதாக உள்ளன. ஜமாத் அமைப்புக்களின் பிரச்சினைகள் முன் எப்போதையும் விட அதிக
எண்ணிக்கையில் காவல் துறையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும் போக்கு
அதிகரித்துள்ள செய்தியே அது. கடமை உணர்வுடன் செயல்படும் பாரம்பரியமிக்க ஊர்களின்
சில ஜமாத் அமைப்புக்கள் நடத்தும் திருமணங்கள் கூட போலீஸ் மேற்பார்வையில் நடக்க
வேண்டியுள்ளது என்பது அலட்சியப் படுத்தக்கூடிய அளவுக்கு சிறிய விசயம் அல்ல.
சிறிதும் பெரிதுமாய் 12000 ஜமாத் அமைப்புக்கள் தமிழகமெங்கும் செயல்பட்டு வருகின்றன
என்பது ஒரு மதிப்பீடு. சரியான கணக்கீடு யார் கையிலும் இல்லை; அதற்காக இதுவரை பலர்
முயன்றும் அது இன்னும் முழுமை பெறாத நிலை தான். அது போகட்டும். இப்போது நமது
ஜீவமூச்சாக அமைந்துள்ள இந்த ஜமாத் அமைப்புக்களின் நிர்வாக அமைப்புக்களின் சாதரண
அன்றாட நடைமுறைகளில் கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவை உள்ளுக்குள் தீர்க்கப்
படாமல் காவல் துறையின் தலையீட்டில் தான் தற்காலிக அமைதிக்கு வழியமைக்கப் படுகிறது
என்பது மிகவும் கவலையளிக்கும் சீரியஸான விசயம்.
மற்றெந்த சமுதாயத்துக்கும் நம்மைப் போன்ற சன்னப்பின்னலான சல்லிவேர் சமுதாய
அமைப்புக்கள் இல்லை. இது ஓர் அருட்கொடை! ஒரு பத்து முஸ்லிம் குடும்பங்கள் ஒரு ஊரில்
அல்லது மஹல்லாவில் இருந்தாலும்கூட அவை ஒன்றுகூடி, உடனே ஒரு அமைப்பு ரீதியான
செயல்பாட்டுக்கு வழியமைத்து - ஜமாத் அமைக்கப் பட்டு, தொழுகை - மக்தப் மத்ரஸா -
திருமணம் நடத்துதல் - கப்ருஸ்தான் அமைத்தல் - சிறு சிறு குடும்பப் பிரச்சினைகளில்
மத்தியஸ்தம் செய்தல் என்று ஒரு மார்க்க ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு செயல் பட
ஆரம்பித்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். இந்த அமைப்பின் உறுதிப்
பாட்டில்தான் அந்த ஊர் - மஹல்லா மக்களின் தார்மீக ஒழுக்கமும் மார்க்கமும்
பதுகாப்பாக இருந்தாக வேண்டிய கட்டாயம்.
ஒரு காலத்தில் - ஏன்? இபோதும்கூட சில ஜமாத் அமைபுகளிடம்தான் சகோதர
சமுதாயத்தவர்களின் பிரச்சினைகள் மத்தியஸ்தத்துக்கு வந்தன; வருகின்றன. சில நீதி
மன்றங்களில் குழப்பமான சூழ்நிலைகளில் ஜமாத் அமைப்புக்கள் அளித்த தீர்ப்புக்களே
நீதிமன்றத் தீர்ப்புக்களான உதாரணங்களும் உண்டு.
இந்த நிலைமை இப்போது ஆங்காங்கே மாறி வருகிறது என்ற செய்தி நல்லதற்கல்ல. எப்போதோ
ஒன்று என்ற நிலை மாறி, அடிக்கடி நடப்பதாக நாளிதழ்களில் வரும் செய்திகள் மிகவும்
கவலை அளிப்பதாக உள்ளன.
நாம் அதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டு அதை ஒரு விவாதப் பொருளாக்கி மேலும்
சிக்கலாக்க விரும்ப வில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.
ஆனால் எந்தக் காராணமானாலும் அதை நமக்குள் தீர்த்துக் கொள்ளுவது மிகவும்
அவசியமானதாகும். 'வீடு இரண்டானால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பார்கள். ஏற்கனவே
நம்மைச் சுற்றி பொறாமைப் பார்வைகளுடன் 'கழுகுகள் கூட்டம்'. இந்த நிலையில் மிகவும்
எச்சரிக்கையுடன் இருந்து நமது ஜமாத்து அமைப்புக்களின் வலிமையைக் குலைக்கும் எந்தக்
காரியங்களிலும் ஈடுபடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அல்லாஹ் நம்மை ஒன்று படுத்துவானாக!
ஒற்றுமை எனும் கயிற்றில் கட்டிப்போட்டு நமது கண்ணியத்தைக் காப்பானாக!, ஆமீன்!
NANDRI-NARGIS January 2006
Refer this Page to your
friends
|