தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


மருந்துக்கட மருத்துவமனை அல்ல!


கதீஜா பீவிக்கு முப்பத்தைந்து வயது. நடுத்தரக் குடும்பம்.வெளிநாட்டில் இருந்த கணவர் விசாவை வெட்டிக் கொண்டு தாயகம் திரும்பினார். ஏற்கனவே இரண்டு வளர்ந்த குழந்தைகள். இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை கதீஜா பீவிக்கு. அவர் கணவருக்கோ அவரது குடும்பத்தின் மூத்தவர்களுக்கோ தெரியாமல் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள நினைத்தார் ; காரணம் அதற்கு அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். எனவே அவர் ரகசியமாக குடும்பக்கட்டுப் பாட்டு மாத்திரையை தன் வீட்டுக்கருகில் உள்ள மருந்துக் கடையில் வாங்கி யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு இயல்பில் மெல்லிசான அவரது உடம்பு பருமனாகத் தொடங்கியது. அவர் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். பத்து மாதங்கள் ஆன பிறகு உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டது. சோர்வு, தலைவலி, கொஞ்சதூரம் நடந்தாலும் மூச்சிரைப்பு, நெஞ்சுவலி, காலில் வீக்கம் என்று பல சிரமங்கள் அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றன. நன்கு சோதித்துப் பார்த்த டாக்டர் கேட்ட முதற் கேள்வி :

" நீங்க ஏதாவது மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீர்களா?"
" இல்லை" என்று அடித்துச் சொன்னார் அருகில் நின்ற கணவர்.

" நீங்க சொல்லுங்கம்மா.... குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரை எதுவும் சாப்பிட்டீங்களா? "

இப்படி குறிசொல்பவர் போல டாக்டர் கேட்டதும் படபடப்பு கதீஜா பீவிக்கு.மறுக்க முடியவில்லை." ஆமா டாக்டர்" என்றார்.

" எத்தனை மாதமாக ? "

" பத்து மாதங்களாக"

"எந்த டாக்டர் எழுதிக் கொடுத்தது? "

" டாக்டர் எழுதிக் கொடுத்ததில்லே டாக்டர்! நானா மருந்துக் கடையிலே வாங்கிச் சாப்பிட்டேன்"

" ஏம்மா... இங்க பக்கத்துலதானே நான் இருக்கேன்.... வந்து உடம்பைச் சோதிச்சு ஆலோசனை கேட்டு மருந்தெடுத்திருக்கலாம்ல..? இந்த வகை ஹார்மோன் மருந்துகள் சில உடம்புகளுக்கு ஒத்து வராதும்மா .. இப்ப உங்களுக்கு பல பெரிய பிரச்சினைகள் வந்தாச்சு... உடல் பருமன் , ஹை ப்ரெஸ்ஸர் , ஹார்ட் ப்ராப்ளம், கிட்னி ப்ராப்ளம் ... இப்படி ஏராளமான பிரச்சினைகள்.... இன்னும் நிறைய டெஸ்ட் பண்ணி ஸ்பெஸலிஸ்டுகிட்டப் போயாகனும் ... நீங்களே தேவை இல்லாம இவ்வளவு சிரமங்கள இழுத்துகிட்டிங்களேம்மா.." - டாக்டர் வருத்தத்துடன் சொன்னார்.

கதீஜா பீவிக்கு இடி விழுந்த மாதிரி இருந்தது.

கணவருக்கு அதிர்ச்சி !

" நாம இருக்கிற நெலமையில இது தேவையா புள்ளே? எங்கிட்டே சொல்லி இருக்கலாம்ல? "

அதை வைத்து குடும்பத்தில் மனக்கசப்பு... சண்டை சச்சரவு... அமைதிக் குறைவு... வியாதிகளின் கிடுக்கிப்பிடி ... ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக நம் சகோதரி வீட்டுத்தலைவி கதீஜா பீவி !

இதைப் போல கால் வலி என்று மருந்துக்கடையில் வருடக் கணக்கில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு வயிற்றில் புண் ஏற்பட்டு ரத்த வாந்தியெடுத்து , ஆயிரம் ஆயிரமாய்ச் செலவு செய்து ஆறு மாதங்கள் அவதிப் பட்டு இன்றும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் இல்யாஸு!

அடிபட்ட கால் புண்ணுக்கு மருந்துக்கடைக் காரரிடமே மருந்து வாங்கிப் போட்டும் புண் ஒரு மாதமாக ஆறவில்லை என்பதால்,  அவர் கூறிய படியே அவரையே டாக்டராக ஏற்றுக் கொண்டு ஊசிகளும் போட்டு,  கடைசியில் அடிபட்ட விரல் கருப்பாகி வீச்சமெடுத்தபிறகு அலறிப் பதைபதைத்து டாக்டரிடம் ஓடி,  சர்க்கரை நோய் இருந்தது தெரியாமல் உடனடியாக சரியான சிகிச்சை செய்யாமல் இழுத்தடித்தடித்ததன் காரணமாக இப்போது கணுக்கால் வரை இழந்துவிட்டுத் தவிக்கும் தாவூது சுலைமான்!

அடுத்த வீட்டுத் தோழி ஆயிஷா சொன்னாள் என்பதற்காக முகப் பருவுக்கு மருந்துக் கடையில் ஆயிண்மென்ட் வாங்கி உபயோகித்து முகத்தின் இயற்கை அழகையே போக்கிகொண்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கும் ஆரிஃபா!

இப்படி அவலக் கதைகள் ஏராளம்!

இப்போது மருந்துக்கடையன்று விலைக்கு வந்தால் விலைப் பேரத்தில் கேட்கப்படும் முதல் கேள்வி, " கவுண்டர் சேல்ஸ்" எவ்வளவு நடக்கும்? " என்பதுதான்.

அதாவது,  டாக்டரிடம் ஆலோசனை பெறாமல், அவர் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சீட்டில்லாமல் தாங்களே டாக்டர்களாகி மருந்துக் கடைக்காரர்களே விற்கும் மருந்துகள் விற்பனை பற்றிய கேள்வி அது.

ஏதாவது ஒரு மருந்துக் கடை வாசலில் ஒரு அரை மணி நேரம் நின்று பாருங்கள்!

" காய்ச்சல்... தலைவலி... வயிற்று வலி... வயிற்றுப் போக்கு... வாந்தி ... கால்வலி ... அஜீரணம்...காஸ்ட்ரிக் தொந்தரவு,  ஜலதோஷம், இருமல் " என்று சொல்லிக் கொண்டு பல பேர் மருந்துக் கடைகளை மொய்ப்பதையும்,  மருந்துக் கடைக்காரர்களும் கொஞ்சம் கூடத்தயங்காமல்,  டாக்டர்களே உபயோகிக்கத் தயங்கும் ஆண்டிபியாடிக்,  கார்டிசோன் , ஹார்மோன் போன்ற மருந்துகளையெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொடுத்து மனம்போன போன போக்கில் காசை வாங்கிக் கொண்டு,  தாங்கள் செய்யும் தவறை - சட்டப் படியான குற்றத்தின் தன்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் தைரியமாகச் செய்து சம்பாதிப்பதைப் பார்க்க முடியும்.

" இவர் கைராசிக் காரராக்கும் ... இவருக்கு முன்னால டாக்டரெல்லாம் நிக்க முடியாதாக்கும் " என்று சான்றிதழ் வேறு!

டாக்டர் எழுதிக் கொடுத்த குறிப்பிட்ட மருந்து தன்னிடம் இல்லாத நிலையில், " இந்த மருந்து டாக்டர் எழுதித் தந்ததை விட நல்லது " என்று டாக்டர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அதிகப் பிரசங்கித் தனம் வேறு!

இதெல்லாம் இப்போது நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது!

யாரும் இதைக் கண்டு கொள்வதில்லை.
படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் இந்தத் தவறை தயக்கமின்றிச் செய்கின்றனர்.

சட்டம் கண்டு கொள்வதில்லை; கண்டு கொண்டால் சட்டதுக்கோ - சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களுக்கோ லாபம் எதுவும் இல்லையே?

அதனால் மிக தைரியமாக இந்தத் தவறு தொடர்ந்து நடக்கிறது! பகிரங்கமாக நடக்கிறது!

நம்மால் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.

ஆனால், இந்தத்தவறைச் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கும் கடமை இருக்கிறது.

பெட்டிக்கடை,  மலிகைக்கடை,  ஜவுளிக்கடை,  மிட்டாய்க்கடை என்று பல கடைகள் உள்ளன. அதேபோல மருந்துகளை வாங்குவதற்காக அமைக்கப்பட்டதே மருந்துக்கடை.

பிற கடைகள் வைப்பவர் எப்படி அந்தத் தொழிலில் ஏற்கனவே அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையோ அதே போல மருந்துக்கடை வைப்பவருக்கும் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

அந்தத்தொழிலில் சிறிது அனுபவம் இருந்தால் அது வியாபார உக்திக்குப் பயன்படும்; அவ்வளவே. மற்றப்படி மருந்துக்ககடை வைப்பவருக்கென எந்தத் தனித் திறமையையும் - தகுதியையும் சட்டம் பரிந்துரைக்கவில்லை.

ஆனால் மருந்துக்கடை வைப்பதற்கான் உரிமம் பெறுவதற்கு சில அடிப்படைகளைச் செய்து கொள்ள வேண்டும். ஒரு முறையான ஃபார்மஸிஸ்ட் - மருந்தாளுநர் அக்கடையில் பணிபுரிய வேண்டும்; அவர் முழுநேர ஊழியராகக் கூட இருக்க வேண்டும் என்பதில்லை;  பகுதி நேர ஊழியராகக் கூடப் பணியாற்றலாம்.

மருந்துக்கடைக்காரர்கள் கட்டாயமாக டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சீட்டுகளுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்யவேண்டும் என்பது அவர்கள் பெற்றுள்ள உரிமத்தின் மிக முக்கிய அம்சம். அதை மேற்பார்வை செய்ய "டிரக் இன்ஸ்பெக்டர்" என்ற ஒரு அரசு அலுவலர் ஒவ்வொரு பகுதியிலும் இருப்பார்.

ஆனால் மேலாண்மையில் தொய்வு இருப்பதால் இந்தத் தவறுகள் தொடர்கின்றன. அவற்றைச் சரி செய்ய நமக்கு வலிமை இல்லை.

ஆனால் நமது வாசகர்களை எச்சரிக்கும் கடமை இருக்கிறது!

ஒரு சிறிய தொகையை •பீஸாகக் கொடுத்து டாக்டரின் ஆலோசனையில் மருந்தெழுதி வாங்கி அதை உபயோகியுங்கள்; அதை எடுக்கும்போது ஏதாவது பக்க விளைவுகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் அதே டாக்டரை அணுகுங்கள்.

இந்த சிறிய முன்னெச்சரிக்கை மிகப் பெரிய ஆபத்துக்கள் - அவலங்கள் நேர்வதிலிருந்து பாதுகாக்கும்!


நன்றி : நர்கிஸ் மார்ச் 2006 இதழ்


d சிந்திக்க... திட்டமிட... செயல்பட!

தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com