|
Refer this Page to your friends
வந்தார்; வென்றார்;
சென்றார்!
பஷீர் ஓர் ஏழை விவசாயி. வயல் வேலை செய்த நேரம் போக மீந்த நேரத்தில் எவர் ஏவினாலும்
எடுபிடி வேலை செய்வார். அத்தா, அம்மா , மனைவி , ஏழு பிள்ளைகளுடன் பெரிய
குடும்பஸ்தர். பக்கத்துத் தெருவில் இருந்த 'மூன்றுமாடி முத்தலிபு' வீட்டில்
அடிக்கடி வேலை கிடைக்கும். முத்தலிபுக்கும் பஷீருக்கும் ஒத்த வயதுதான் ; என்றாலும்
ஏழை பஷீரை அவர் ஒருமையில்தான் அழைப்பார். சிறிய பிழை செய்தாலும் "துப்புக்கெட்டவன்"
"சோம்பேறி" என்று வசை பாடுவார். அவரது மனைவி மக்களுக்கும் கூட அவன்
கிள்ளுக்கீரைதான்! பஷீரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்.
ஆனால் மனுஷன் படு ஒழுக்கஸ்தர்! ஒரு வக்த் தொழுகை - ஒரு நோன்பு விடமாட்டார்.
ஒரு சின்னக் குழந்தையைக் கூட ஒருமையில் அழைக்க மாட்டார்; "வாங்க ; போங்க"
தான்! அதனால் பஷீருக்குப் பொதுவாகவே ஊரில் ஒரு மரியாதை உண்டு!
முத்தலிபும் முத்தலிபின் குடும்பமும் இதற்கு நேர் எதிர்! 'கண்டதே காட்சி ;
கொண்டதே கோலம்' என்ற கதைதான்! வரைமுறையற்ற வியாபாரத் தொடர்புகள்! வட்டி பற்றியோ
வாய்மை பற்றியோ அக்கரையெதுவுமில்லை! அதனால் வருமானமும் அதிகமே! அதன் காரணமாக
அடாவடித்தனமும் அழுச்சாட்டியமும் அன்றாடம் அதிகரித்தது! 'துஷ்டனைக் கண்டால் தூர
ஒதுங்கு' என்ற நியதிப்படி சாமான்யர்கள் - கண்ணியவான்கள் சற்று ஒதுங்கியே நிற்பர்!
காலச் சக்கரம் சுழன்றது.
பஷீரின் மூத்தமகன் பள்ளியில் முதலாய் வந்தான்! மாவட்டத்தில் முதல்
என்றார்கள்; கலெக்டரிடமிருந்து பரிசெல்லாம் பெற்றான். மேலே படிக்க டவுனுக்கு
அனுப்பச் சொன்னார்கள்! அவனும் படிப்பேன் என்று அடம் பிடித்தான். மொத்தக்
குடும்பமும் அரை வயிறு கால் வயிறு சாப்பிட்டுக் கொண்டு காசை மிச்சம் பிடித்துப்
படிக்க வைத்தது. பயல் படு சூட்டிகை; மெரிட்டில் பிடெக் படித்து முடித்த கையோடு
இங்கிலாந்திலிருந்து வேலைக்கு ஆளெடுக்க வந்தவர்கள் நல்ல வேலை கொடுத்துக்
கொத்திக்கொண்டு போக , நாலைந்து வருஷங்களுக்குள் பஷீர் கூலிக்கு வேலை செய்த நிலங்கள்
இப்போது அவர் பெயரில் கிரயத்துக்கு! குடிசை வீடு மச்சுவீடாகியிருக்கிறது.
அடுத்தடுத்த பிள்ளைகளும் பள்ளிகளில்; கல்லூரிகளில்!
முத்தலிபுக்கு மூக்கு வேர்த்தது!
லண்டனில் வேலை பார்க்கும் பஷீரின் மகனுக்கு தன் மகள்தான் உலகத்திலேயே சரியான -
பொருத்தமான ஜோடி என்றது அவரது வியாபார மூளை! தனது அனுமானப்படி
"துப்புக்கெட்டவன்" பெற்ற பிள்ளையாயிற்றே ; தான் ஒரு காலத்தில் "சோம்பேறி "
என்று கேலிபேசியவனின் மகனாயிற்றே என்ற தயக்கம் எல்லாம் முத்தலிபுக்கில்லை!
புறப்பட்டுவிட்டார் பஷீரின் வீட்டுக்கு சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை கேட்டு!
'நம்மிடம் வேலை பார்த்த பயல் நம்மிடம் சம்பந்தம் செய்துகொள்ள மறுத்து விடுவானா?'
என்ற அகம்பாவம் அவருக்கு! கலியாணம் முடிந்த கையோடு லண்டன் மருகப் பிள்ளையை, புலி
மான்குட்டியைக் கவ்விக் கொண்டு போவது போலத் தன் வீட்டுக்குக் அபகரித்துக் கொண்டு
சென்றுவிடலாம் என்ற கபட நோக்கம் வேறு!
பஷீர் என்ன செய்ய வேண்டும்?
முத்தலிபு யார்? எப்படிப்பட்டவர்? தன்னை எப்படி நடத்தியவர்? என்ன நோக்கத்துடன் தன்
வீட்டுக்கு வருகிறார்? என்று யோசிக்க வேண்டுமா, இல்லையா? நான்கு பேரிடம்
விசாரித்துப் பார்க்கவாவது வேண்டுமா, வேண்டாமா? அட.... மனைவி மக்களிடமாவது அதுபற்றி
விவாதிக்க வேண்டுமா? வேண்டாமா?
அதையெல்லாம் செய்யாமல், மூன்று மாடி வீட்டுப் பணக்காரர் என்பதாலோ, அடாவடிக்காரர்
என்பதாலோ அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிடலாமோ? 'வம்பாடு' பட்டு வளர்த்துப்
படிக்கவைத்த மகனை அந்த வைரியிடம் வாரிக்கொடுத்துவிடலாமோ?
அந்தக் கதைபோலத்தானே இருக்கிறது நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது?
எத்தனையோ இடர்களுக்கிடையிலும் - நெருக்கடிகளுக்கிடையிலும் இத்தனையாண்டுகளாக
பொத்திப்பொத்தி வளர்த்த - கடமை உணர்வுடன் பேணிப் பாதுகாத்த வெளிநாட்டுக் கொள்கையை
இப்படி முத்தலிபு - ஸாரி - புஷ் வந்து கேட்கிறார் என்பற்காக விட்டுக் கொடுத்து
விடலாமோ?
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வில்லியம் புஷ் இந்தியாவுக்கு வருகை தந்தது நிச்சயமாக
சர்வதேச அளவில் ஒரு பெரிய ராஜதந்திர விசயம்தான்; சந்தேகமில்லை.
உலக நாடுகளின் ஆட்சியை -அதிகாரத்தை - பொருளாதாரத்தை - ஏன்? தன்னாட்சி ஆளுமையைக் கூட
ஆட்டிப்படைக்கும் வல்லமை வாய்ந்த ஒரு நாட்டின் ஜனாதிபதி, ஒரு காலத்தில்
ஆண்டிப்பண்டார பூமி போல மேலை நாடுகளால் பேசப்பட்ட - 'வளரும் நாடு' எனவும் 'மூன்றாம்
உலக நாடு' எனவும் பிரித்தறியப்பட்ட இந்தியாவுக்கு வருகை தருவதென்பது பாரதூரமான
விசயம்தான்!
என்றாலும் அவர்களது வல்லூறுப் பார்வையிலிருந்து இதுநாள் வரை பாதுகாத்து வைத்திருந்த
நமது அணுசக்திக் கூடங்களையெல்லாம் அவர்களின் மேற்பார்வைக்கு அனுமதிக்க விடும்
பத்தான செயலைச் செய்துவிட்டது சரியா? முறையா? இதுகாரும் கண்ணும் கருத்துமாய்
வளர்த்து ஆளாக்கிய கன்னிப் பெண்ணை கடைவீதியில் நிறுத்தி கண்டவனெல்லாம் பார்க்கச்
செய்ததற்கொப்பாகாதா , இந்த நடவடிக்கை?
அணுக்கூடங்கள் 22 - ல் 14 மட்டுமே அவர்களது மேற்பார்வைக்கு அனுமதிக்கப் படும் என்ற
வாக்குறுதிகளை நம்ப முடியுமா? அத்தகைய நம்பகத்தன்மையுடையவர்களா அவர்கள்?
அரிச்சந்திரனின் நேரடி வாரிசுகளா?
அதுவும் எந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் நடந்திருக்கிறது?
அமெரிக்காவில் ஜனாதிபதி புஷ்ஷின் நம்பகத்தன்மை - செயல்பாட்டுத் திறன் - விசுவாசம் -
ஈராக் மற்றும் கட்ரினாவை எதிர்கொண்ட விதம் - பொருளாதார மந்தம் - இவற்றால்
இதுவரையில்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள வேளையில்!
அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது; வரும் அமெரிக்க
இடைத்தேர்தல்களில் ஆளும் ஜனநாயகக் கட்சியிடம் தோற்றுவிடுவோமோ? என்ற பயம்
காட்டுத்தீயாய்ப் பற்றிப் பிடித்திருக்கிறது.
உலகமயமாக்கலின் பிதாவான அமெரிக்கா, தனது சகாவான துபாயின் மிகப் பெரிய கம்பெனியான
'துபாய் போர்ட்ஸ் வோர்ல்ட்' (DUBAI PORTS WORLD) உடன் 5 முக்கிய அமெரிக்கத்
துறைமுகப் பணிகள் சம்பந்தமாகச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்க மக்கள் மற்றும் -
ஜனாதிபதியின் குடியரசுக் கட்சி எதிர்ப்புகள் காரணமாகக் கைவிட நேர்ந்து , அதனால்
அராபிய மூலதனங்கள் இனி அமெரிக்காவை விட்டு நிரந்தரமாக விலகிச் செல்லும் என்ற அச்சம்
நிலவும் வேளையில் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் மிகத் தீவிர தரவாளர்களான ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கே இந்தக்
கதியென்றால், நாம் எம்மாத்திரம்? நம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எம்மாத்திரம்?
அதுவும் குறைந்த விலையில் எரிவாயு தர முன்வந்த நீண்ட கால நட்பு நாடான ஈரானின் நட்பை
அமெரிக்க நெருக்குதலால் சிதைத்துக் கொண்ட வேளையில் - அண்டை நாடான பாகிஸ்தானுடனான
உறவுநிலை சற்றே படிப்படியாக மேம்பட்டு வரும் வேளையில்; அவர்களின் சந்தேகப் பார்வை
நம்மீது படரும் வகையில் !
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு இந்த விசயத்தில் நடந்து கொண்ட விதம் சரிதானா?
ஏற்புடையதுதானா?
புஷ் ஓடோடி வந்தார் ; காரியத்தை வென்றார் ; வந்த வேகத்தில் சென்றார் என்று
ஆகிவிட்டதே?
நமக்கென்னவோ முத்தலிபின் வாய்ப்பேச்சில் மயங்கி மகனைப் பறிகொடுத்துவிட்ட பஷீர்
குடும்பத்தின் பதைபதைப்பு இப்போதே வந்துவிட்டது!
இறைவன் நம் தேசத்தின் இறையாண்மையை என்றைக்கும் காப்பாற்றுவானாக , ஆமீன்!
நன்றி : நர்கிஸ் ஏப்ரல் 2006 இதழ்
Refer this Page to your
friends
|