ஊற்றுக்கண்

 டாக்டர் ஹிமானா செய்யத்

 

Refer this Page to your friends


பகுதி - 16

"டாக்டர் சாஹிபை நாங்க எங்க மண்ணிலேயே வச்சுக்க விரும்புறோம்"


ஊற்றுக்கண் - ஹிமானா சைய்யித் -

"டாக்டர் சாஹிபை நாங்க எங்க மண்ணிலேயே வச்சுக்க விரும்புறோம்"

திண்டுக்கல் டி.எஸ்.கே. இஸ்மாயில் ஹாஜியார் உறுதிபடச் சொன்னார்!

"உங்க சொந்தக் காரங்கதான் ... உங்க ஊருக்குக் கொண்டுபோக நெனைக்கிறதும் நியாயமானதுதான்.... இருந்தாலும் டாக்டர் சாஹிபை நாங்க எங்க மண்ணிலேயே வச்சுக்க விரும்புறோம், டாக்டர்....! இந்த விசயத்துல நாங்க ரொம்ப உறுதியா இருக்கோம்... தயவு செஞ்சு மறுக்காதீங்க.. "

அவரது வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்துகொண்டு மௌனமாய் திண்டுக்கள் ஜமாத்தின் அத்தனை பிரமுகர்களும் .. ரூபி நூர்முஹம்மது ஹாஜியார்... தௌபீக் புக்டிப்போ முஸ்தஃபா ஹாஜியார்.... அது ஒரு நீண்ட பட்டியல்!

இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து மரணச் செய்தி கேட்டுத் துடிதுடித்து ஓடி வந்திருந்த எங்களால் மறுத்துறைக்க முடியாத அளவுக்கு அவரது குரலில் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட உறுதி தெறித்தது.

நேற்று நடந்தது போல் இருக்கிறது; இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேல் ஓடிப்போய்விட்டது!

அவர்கள் விருப்பப்படியே திண்டுக்கள் மக்கள் 'அவரை' அந்த டாக்டரை - மாவட்ட மருத்துவமனையின் டி.எம்.ஓ.வாக இருந்து மறைந்த அவரை பேகம்பூர் பெரிய கபுருஸ்தானின் நுழைவாயிற்கருகிலேயே நல்லடக்கம் செய்து திண்டுக்கல்லிலேயே வைத்துக் கொண்டார்கள் அந்த மாமனிதர்கள்!

இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்துப் போகிறது!

அல்லாஹ் ஒரு மனிதனுக்கு பிறந்தது முதல் இறக்கும் வரை பல எல்லைகளில் தன் அருளால் வர்ஷிக்கிறான்; ரஹ்மத்துக்களை - நிஹ்மத்துக்களை வாரி வழங்குகிறான். அவற்றில் பிறப்பின் போதும் - இறப்பின் போதும் மனிதனுக்கு வழங்கும் அருட்கொடைகள் தனியிடத்தைப் பெறுகின்றன.

அந்த அளவில் எங்கள் மச்சான் (அவர்களது தாயாரும் என் தந்தையாரும் உடன் பிறப்புகள்) டாக்டர் - மேஜர் - அஃப்ஸல்கான் எம்.டி; டி.ஸி.எச். இந்த இரு எல்லைகளிலும் அல்லாஹ்வின் அருட்பொருத்தத்தைப் பெற்றுக் கொண்டவர் என்று சொல்லலாம்.

சேதுபதி சீமையின் புகழ்மிக்க ஜமீன்தாராயும் பர்மாவின் நெற்களஞ்சியமான வாக்கேமா வட்டத்தில் சில ஆயிரம் ஏக்கரா நிலங்களுக்குச் சொந்தக்காரராயும், உலக மார்க்கக் கல்வி கேள்விகளில் சிறந்தவராயும் விளங்கிய மர்ஹும ஹாஜி எம்.எஸ்.எம். முஹம்மது களஞ்சியம் மரைக்காயர் - ஹஜ்ஜா இபுறாஹீம்மாள் இருவரது புதல்வராகப் பிறந்த அவர் மார்க்கக்கல்வி கற்றுக் கொண்டது, தமிழ்முஸ்லிம்களுக்கு அரபி- உர்து-பார்ஸி மொழிகளிலிருந்து மார்க்கக் கருவூலங்களை தமிழுக்குத் தந்த உத்தமபாளையம் மௌலானா மௌலவி மர்ஹும அல்ஹாஜ் எஸ்.எஸ். அப்துல்காதிர் ஹஜரத் அவர்களிடம்; பள்ளிப்படிப்பு நம் ஜனாதிபதி அப்துல்கலாம் பயின்ற இராமனாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அதே ஆசிரியர்களிடம்! எம்,.பி; பி.எஸ். பட்டம் பெற்றது சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 1954-ம் ஆண்டு! (மாவட்டத்தின் முதலிரண்டு முஸ்லிம் டாக்டர்கள் டாக்டர் அஃப்ஸல்கானும் கல்வித்தந்தை டாக்டர் அப்துல்லாஹ்வும்).

அரசுப்பணியில் வாழ்வு முழுதையும் கழித்த அவர் 1962-ல் திடீரென சீனா படையெடுத்தபோது தாமாக முன்வந்து போர்முனைக்குப் பதிவுசெய்து கொண்ட முதல் டாக்டர்! பாக்கிஸ்தான் போர் வரை ராணுவத்தில் பொறுப்பு; மேஜர் பட்டம்; பிறகு மதுரை எர்ஸ்கின் (இப்போது ராஜாஜி ) ஹாஸ்பிடலில் குழந்தை மருத்துவ மேற்படிப்பு 50 வயதில்! அங்கேயே மருத்துவப் பணியும்! அதன் பிறகுதான் திண்டுக்கல் டி.எம்.ஓ.வாக அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

மிகக் குறுகிய காலமே அங்கிருந்தார். ஆனால் அதற்குள் அவர் திண்டுக்கல் மண்ணின் சொந்த மைந்தர் போல அனைத்துத் தரப்பு மக்களுடையவும் அன்பைப் பெற்றார். அவர்களுள் ஒருவராகவும் மாறினார். மாவட்ட மருத்துவ மனையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். கண்டிப்பான மேலதிகாரிகள் தமக்குக் கீழுள்ள அதிகாரிகளில் சிலரது எதிர்ப்பைச் சந்திப்பது இயற்கையே! அப்படித்தான் ஒரு சகோதர மருத்துவ அதிகாரியின் எதிர்ப்பை அவர் சந்தித்தார். கோபம் கொண்ட அவர் தன் போலீஸ் நண்பரின் ஒத்தாசையுடன் ஒரு வெளி நோயாளியின் சீட்டில் பினாப்தலின் தடவி அவர் நூறுரூபாய் லஞ்சம் பெற்றதாக போலீஸ் வலையில் சிக்க வைத்தார்!

அப்போதுதான் அந்த அதீத மக்கள் புரட்சி வெடித்தது!

திண்டுக்கல் மாவட்டமே ஒரு நேர்மையான அதிகாரி பலிவாங்கப்பட்டதை எதிர்த்துக் கிளர்ந்தது! மாவட்டம் ஸ்தம்பித்தது!

தமிழக வரலாறு கண்டிராத அளவுக்கு மாநில அளவில் டாக்டர்கள், சக மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்; மாநில மருத்துவப் பணிகள் முடங்கின!

அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நீதிபதி திரவியம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தார். அந்தக் கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது; டாக்டரை நிரபராதி எனக் கண்டது; ஆனால் மறுபடியும் பணியில் சேர்வதற்குமுன் அல்லாஹ் மாரடைப்பை அனுப்பி அவரைத் தன்னளவில் அழைத்துக் கொண்டான். அவர் சஸ்பெண்டான காலம் முழுதையும் பணிக்காலமாகவே கருதி கணக்கை நேர்செய்தார் முதல்வர்!

அந்த மரணம் ஏற்படுத்திய அசாதாரண சூழலை அன்று கண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்; காணாதவர்கள் மிகைப்படுத்தப் பட்டதாகவே பேசுவார்கள்!

மரணத்தின் போது எங்கள் மச்சானுக்குக் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த மரியாதையும் கண்ணியமும் கரைகாணமுடியாத அளவிலானது என்றால் மிகையாகாது! அதற்கு ரொம்பவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஒரு இறந்து போன மனிதருக்காக மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் வருந்திக் கண்ணீர்விட்ட - முகத்திலும் மார்பிலும் அறைந்துகொண்டு கதறி அழுத காட்சி ரொம்ப ரொம்ப அசாதாரணமானது; நெஞ்சை விட்டு அகற்றவே முடியாதது!

இவர்களுள் நோயாளிபோல வேஷமிட்டு வந்தவரும் உள்ளடக்கம்!

எங்கள் குடும்பம் திண்டுக்கல் நகர - மாவட்ட மக்களுக்கும், நீதிக்காகப் போராடிய டாக்டர்களுக்கும், சக மருத்துவப் பணியாளர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

எங்கள் மச்சானின் இரண்டு குழந்தைகளும் அவர் இறந்தபோது, மதுரை மருத்துவக்கல்லூரியில் மாணவர்களாக இருந்தார்கள்! இப்போது மகன் டாக்டர் இப்ராஹிம் ஹாரூன் அமெரிக்காவில் பெரிய மனோதத்துவ நிபுணர்; மகள் டாக்டர் ஷகீலா பானு சென்னையில் பிஸியாலஜி ப்ரொஃபஸ்ஸர்.
 


ஊற்றுக்கண் தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com