ஊற்றுக்கண்

 டாக்டர் ஹிமானா செய்யத்

 

Refer this Page to your friends


பகுதி - 17

சிரமப்பட்டுப் போனாலும் நல்ல மனுஷங்க சார் இவங்க ..


தொள்ளாயிரத்து எண்பதுகளின் கடைசிப்பகுதி. என் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து கடிதங்கள் வழி தொடர்பு கொண்டுவந்த ஒரு சகோதரர் தமது கிராமத்தில் நடக்கவுள்ள விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். ஒரு முறை நேரில் வந்தும் அழைத்தார். கிராமப் புறங்களில் தொலைதொடர்பு வசதிகள் அதிகமில்லாத காலம் அது. செல்போன் பெரிய நகர்ப்புறங்களைக்கூட எட்டியிருக்கவில்லை. அவரை கண்ணியப் படுத்த வேண்டும் என்பதற்காகவே விழாவுக்கு ஒப்புக்கொண்டு அவரது ஊருக்குப் பயணமானேன்.

அது ஒரு குக்கிராமம். ஒரு தென் மாவட்டத் தலைநகரிலிருந்து 15 -18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நகரத்தில் அந்த ஊருக்கான பாதை பற்றி விசாரித்த போது எல்லோரும் "அந்த ஊருக்கா..? " என்று கேட்டு ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, வழி சொன்னார்கள். எனது டிரைவரும் "அந்தப் பகுதிக்கு நான் சென்றதில்லை; ஆனால் ரோடு ரொம்ப மோசம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னார். ஆனால் நான் எப்பாடு பட்டேனும் அங்கு காட்டாயம் போய்விட வேண்டும்; கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். .

இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பிரதான சாலையிலிருந்து அவ்வூருக்கான கிளைச்சாலை பிரிந்தது. அந்த நேரத்தில் மேகம் இருட்டிகொண்டு வந்து மழையும் தூரத்தொடங்கியது. ரோடு என்பது பெயருக்குத்தான்... வழி கேட்ட போது ஏன் மக்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள் என்பது புரிய ஆரம்பித்தது. ஒரு அடி சாலை கூட சமமாக இல்லை. சாலையின் நடுவில் பெரும் பெரும் குண்டு குழிகள். இடையிடையே முரட்டுக் கற்கள். ஒரு கிலோமீட்டர் பயணிப்பதற்குள் போது போதும் என்றாகிவிட்டது. டிரைவர் அடிக்கடி "சார் திரும்பிவிடுவோமா? " என்று கேட்டுக்கொண்டே வந்தார். "ஏம்ப்பா நம்ம ரோடும் மோசந்தானே... பரவாயில்ல... போ" என்று கூறிக்கொண்டே வந்தேன். மேலும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவை அடர்ந்து வளர்ந்து கார் ஒரு பொந்துக்குள் பயணிக்கும் உணர்வை - திகிலை ஏற்படுத்தியது. காரைத் திருப்புவதும் சாத்தியமாகப் படவில்லை. ஒரு மூன்று நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றதும் அச்சாலையிலிருந்து இன்னொரு கிளைச் சாலை பிரிந்தது.

அது இன்னொரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தியது. கண்மாய்க்கரையை ஒட்டிச் சென்ற சாலை அது. சாலையில் கற்கள் இல்லை ஆனால் கரையின் களிமண் மழைநீரில் கரைந்து வழிந்து வந்து கிரேவல் சாலையின் மேல் படர்ந்திருந்து. காரின் இடது பக்கம் கரையோர மேட்டில் தூக்கிக் கொண்டும்; வலது புறம் களிமண் கலந்த கிரேவலில் வழுக்கிக்கொண்டும் ஓடவேண்டியிருந்தது. கொஞ்சம் அசந்தாலும் முட்புதர்களுக்குள் மாட்டிகொள்ளும் அபாயம். மெல்ல மெல்ல அச்சம் துளிர்விட்டது. எங்களின் பின்னாலோ அல்லது எதிர்த்திசையிலோ ஒரு வாகனம் கூட - ஒரு சைக்கில் -ஒரு மாடு மேய்ப்பவர்கூட வரவில்லை என்ற உண்மை நாம் பாதை மாறி வந்துவிட்டோமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது.

இதற்கிடையில் கார் கியரிலேயே உறுமிக்கொண்டு ஊர்ந்தது. அதைத்தவிற அந்தச் சிக்கலிலிருந்து விடுபட வேறு வழியும் இல்லை அல்லவா? வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம் அது. வேர்த்து விறுவிறுத்து ஊரை அடைந்த போது ரொம்ப அமைதியாக அந்த சகோதரர் கேட்டார்.... "என்ன டாக்டர் ... ரொம்ப சிரமப்பட்டீர்களா? ... ஊருக்கு இன்னொரு ரூட்டும் இருக்கு .. அது பஸ் வர்ர ரோடு ..... ஒரு நாளைக்கு இரண்டுமுறை மட்டும் பஸ் வரும்... ஆனா அந்த ரூட்டு இதைவிட மோசம்... இன்னக்யி மழைத் தூறல் விழுந்ததால ரோடு கொஞ்சம் வழுக்கியிருக்கும்.... இல்லாட்டா சர்ருன்னு கண்மாக்கரையில வந்துடலாம்னுதான் இந்தப் பக்கம் வரச்சொன்னேன்.. " என்று எந்தக் கலவரமோ வருத்தமோ இல்லாமல் சொன்னார்.

ரொம்பக் கஷ்டத்துடன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு "பரவாயில்லீங்க.." என்று புன்முறுவல் பூத்தேன்.

அது சுமார் முப்பது நாற்பது முஸ்லிம் வீடுகளையும் இருபது இருபத்தைந்து பிற மக்களையும் மட்டுமே கொண்ட மிகச் சிறிய கிராமம். நாலைந்து உறுதியான மச்சு வீடுகள்; சில ஓட்டு வீடுகள்; மற்றவை குடிசைகள். சிறிய பள்ளிவாசல். ஹௌலில் தண்ணீர் மாற்றி பல காலம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சில அங்குல தடிமனுக்கு கரும்பச்சையாக பாசி படர்ந்திருந்தது. தண்ணீர்த்தட்டுப்பாடுள்ள ஊர். கிணறுகளில் கிடைக்கும் சிறு அளவு தண்ணீரும் உப்புக்கரிக்கும். ஹௌல் நீரைக் காலி செய்துவிட்டால் மறுபடியும் நிரப்புவது கோடை காலத்தில் கடினம்.

அது ஒரு முழுமையான விவசாயக் கிராமம். வெளிநாட்டுத் தொடர்புடைய வசதியான சிலர் பக்கத்தில் உள்ள நகரத்துக்குக் குடியேறிவிட்டதாகச் சொன்னார்கள்.

விழா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. இமாம் இ¨ளைஞர். பிள்ளைகளுக்கு அருமையாகச் சொல்லிக்கொடுத்து கிரா அத், பாடல், பேச்சு ஓரங்க நாடகம் என்று மனதைக் கவரும் வகையில் அமைத்திருந்தார். ஊரின் அத்தனை ஆண்பெண்களும் ஆஜர். எந்தக் குறுக்கீடும் இல்லை. இரண்டு மணி நேர என் உரையை மிக உண்னிப்பாகக் கேட்டார்கள். பல பேச்சாளர்களை அழைத்தும் அவர்கள் வர மறுத்துவிட்டதால் .. ரொம்பக் காலம் கழித்து இந்த விழா என்றார்கள். ஒரு முறை மாட்டுவண்டியில் அழைத்து வந்து மறுமலர்ச்சி யூசூ•ப் அண்ணன் அவர்களைப் பேச வைத்ததாகப் பெருமையுடன் சொல்லிக்காட்டினார்கள்.

விழா முடிந்து ஒரு பிரமுகர் வீட்டில் இரவு உணவு. அன்பு உபசரிப்பு. தமிழ் முஸ்லிம்களின் முந்தைய வாழ்க்கையில் மிகவும் பரிச்சியமான - பனை ஓலையில் முடைந்த 'சுப்பரா'வில் அமர்ந்து நானும், டிரைவரும், வீட்டுக்காரரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் அந்த சிறிய வீட்டின் உள்ஹாலில். 10 -க்கு 8 அளவிருக்கும். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றி பண்ட பாத்திரங்கள்; தட்டுமுட்டுச் சாமான்கள்; விவசாய உபகரணங்கள். ஒரு 3 வயதுப் பெண்குழந்தை குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது. பிரமுகரின் ஒரே பேத்தி. அக்குழந்தை யாரும் எதிர்பார்ர்க்காத வண்ணம் திடீரென மூடிக்கிடந்த பெரிய கூடையைத் தூக்கிவிட்டது....

அவ்வளவுதான்... காச் மூச் என்று கத்திக்கொண்டு கூடையில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளும் குஞ்சுகளும் பயந்து எங்கள் உணவுத்தட்டைக்குள் பாய... நாங்கள் செய்வதறியாது தடுமாற... குழந்தையின் தாய் அறையிலிருந்து ஓடிவந்து குழந்தையை அடிக்க... அது அலறி ஆர்ப்பரிக்க.... ஒரு தர்மசங்கடமான சூழல் அங்கே!

வீட்டுக்காரர் கிட்டத்தட்ட அழும் நிலையில்.....

நான் அவரை சமாதானம் செய்தேன்...

கிட்டத்தட்ட நடுநிசியைத்தாண்டிவிட்ட பிறகு பயணம் சொல்லிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டேன்.

திரும்பும்போதும் அதே பாதைதான் . அதே சிரமம்தான்.. என்றாலும் அது பழகிப் போயிருந்ததால் அலுப்பில்லை... சலிப்பில்லை!

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலேயே இப்படியென்றால் அதற்கு முந்திய காலத்தில் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

என் மனத்திரையில் மூத்த சமுதாய களப்பணி ஊழியர்களான தூத்துக்குடி முஸ்தபா ஹ¤ஸைன் சாஹிப், தளபதி திருப்பூர் மைதீன், மறுமலர்ச்சி யூசூப் அண்ணன், ரவணசமுத்திரம் பீர்முஹம்மது, பெரியகுளம் அப்துல்ரஹ்மான் போன்றவர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று நீண்ட காலம் சமுதாயக் களப்பணி செய்தது விரிந்து கொண்டிருந்தது. அவர்களெல்லாம் இதைவிடவும் எத்தனை சிரமங்களை - இன்னல்களை வித்தியாசமான அனுபவங்களைச் சந்தித்திருப்பார்கள்..?

இந்த சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்த போது என் டிரைவர் சொன்னார்..

"சார் .. சிரமப்பட்டுப் போனாலும் நல்ல மனுஷங்க சார் இவங்க.."

பெரிய படிப்பெல்லாம் படிக்காத அந்த முஸ்லிமல்லாத டிரைவர்தான் எவ்வளவு நேர்த்தியாக அந்த அனுபவத்தை அளந்து பார்த்துவிட்டார்!


ஊற்றுக்கண் தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com