ஊற்றுக்கண்

 டாக்டர் ஹிமானா செய்யத்

 

Refer this Page to your friends


பகுதி - 18

"அலட்சியம் ...அது எதிர்பாராமல் தாக்கி நம்மை சேதப் படுத்திவிடும்"


அது 1964 -ம் வருடம். அப்போது நான் தேவகோட்டை 'தே பிரித்தோ' பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இலக்கிய ஈடுபாடு அப்போதே உண்டு. பெரும்பாலும் கவிதைகள் எழுதுவேன். அவை மறுமலர்ச்சி, மலேசியாவின் 'தமிழ்நேசன்' சிங்கப்பூரின் 'தமிழ்முரசு' இதழ்களின் வெளிவரும்.

வகுப்பில் முதல் மாணவன்; ஹாஸ்டலில் மாணவர் தலைவன்; அதனுடன் எழுத்து/பேச்சுத் திறமையும் இருந்ததால் ஆசிரியர்கள் என் மீது சிறப்பு கவனத்தை / அன்பைச் செலுத்துவர். அதிலும் குறிப்பாக தமிழாசிரியர் புலவர் அருள்சாமி அவர்களுக்கு என்மீது மிகவும் அக்கறை. மிகவும் கண்டிப்பான சட்ட ஒழுங்குகள் கொண்ட அப்பள்ளியில் மாணவர்கள் நூலகத்திலிருந்து வாரம் ஒரு நூலே எடுக்க முடியும் என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற்று அதிக நூல்கள் எடுக்க உதவியவர்.

அவர் வகுப்பில் பாடத்தை போதிக்கும் அழகே ஒரு கவிதைபோல இருக்கும். பயிற்றுவிப்பில் புதிய உத்திகள் - லாவகம் - சூழலுக்கேற்ப உலகச் செய்திகளை இணைப்பது என்பது - தற்கால இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் என வகுப்பு மிக உற்சாகமாக இருக்கும். முந்தையப் பாடத்தைத் திருப்பாமல் புதிய பாடத்துக்கு நகரும் பேச்சுக்கே இடமில்லை. எனவே பல மாணவர்களுக்கு - பாடங்களை வீட்டில் படித்துக் கொண்டு வராத மாணவர்களுக்கு கொஞ்சம் பயம் எப்போதுமே! பொதுவாக தே பிரித்தோ ஹாஸ்டலில் ராணுவ சட்டம் போல கால அட்டவணை. படிக்க போதிய அவகாசம் இருக்கும். நன்கு தயார் செய்து கொண்டே செல்வேன். யாராவது ஒருவர் பதில் சொல்லிவிடுவார். பலரும் எழுந்து பதில் சொல்லாமல் இருக்க நேரிட்டால் என்னைக் கேட்பார் அய்யா, இறுதியாக! நான் பதில் சொல்லி பாராட்டைப் பெறுவேன்.


ஒரு நாள் தமிழ் இலக்கண வகுப்பு. தொல்காப்பியச் சூத்திரம் மனனம்! ஒரு கவிதையை எழுதிக்கொண்டு பொழுதைக் கழித்துவிட்டு பாடத்தைத் தயார் செய்யாமல் சென்றிருந்தேன். நான் தயார்நிலையில் இல்லை. அய்யா நம்மை கடைசியில்தானே கேட்பார் என்ற அதீத நம்பிக்கை! ஆனால் அன்று எதிர்பாராதது நடந்தது. அய்யா முதலில் என்னை எழுப்பிக் கேள்வியை வீசினார். எனக்கு பகீரென்றது. எழுந்து நின்றேன் மரமாக ஆனால் தலை குனிந்து. அய்யாவுக்கும் ஆச்சரியம்; வியப்புடன் ஒரு பார்வை; அது "நீயுமா இப்படி? " என்று கேட்டது. தண்டனை கிடைத்தது. என்னால் அந்த முதல் தண்டனை அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கண்கள் கண்ணீரைக் கொட்டின. வகுப்பு முழுக்க அழுது கொண்டிருந்தேன்.


அன்று மாலை ஹாஸ்டலில் விளையாட்டு நேரம். கபடி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென ஐயா அங்கே வந்து அனைவரையும் ஆச்சரியப் படுத்தினார். பள்ளி முடிந்ததும் சைக்கிலில் பறந்துவிடும் அவர் ஏன் அங்கு, அந்த நேரத்தில்? விளையாட்டு நின்று போனது. அவர் என்னை மட்டும் அழைத்துக் கொண்டு ஒரு மரத்தடிக்குச் சென்றார். எனக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. அவர் கண்களிலும் ஈரம். அவர் சொன்னார் "நீ அழுததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; நீ திறமையான மாணவன் என்பதால் வகுப்பில் தனி மரியாதை தர என்னால் முடியாது... தண்டனை பொதுவானதுதான்... அலட்சியம் வாழ்வின் சத்துரு. அது எதிர்பாராமல் தாக்கி நம்மை சேதப் படுத்திவிடும்.... எப்போதும் எதற்கும் தயர்நிலை என்பதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும்." என்றார். சில ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு அகன்றார்.


இந்தப் பழங்கதை ஏன் இப்போது?
சிறந்த எழுத்தாளரான அய்யா அருள்சாமி அவர்கள் "அன்பு மலர் அன்னை தெரேசா" என்றொரு நூல் எழுதியிருக்கிறார்கள். 505 அருமையான வெண்பாக்களால் ஆன அந்த நூல் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கு அணிந்துரை கேட்டு எனக்கு அழைப்பு. பல நூல்களுக்கு வாழ்த்துரை - அணிந்துரை- ஆய்வுரை எழுதியிருந்தாலும் இந்த வாய்ப்பு அரியது; பெரியது! உடனே எழுதி அனுப்பினேன். அணிந்துரையாக அல்ல; "நூல்நயமா"க.


அதன் கடைசி வரிகள் உங்கள் பார்வைக்கு....
• என்னுள் தமிழை ஆழமாக எழுதிய ஆசான் அருள்சாமி ஐயா அவர்கள்.
• என்னை பொதுவுடைமைக் கருத்துக்களைப் படிக்கச் செய்தவர் அருள்சாமி ஐயா அவர்கள்.
• நாரண துரைக்கண்ணனின் "உயிரோவியம்" நாவலை ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே தந்து படிக்கச் செய்து, உயிர்ப்பூட்டி , இன்று என்னுடைய சிறுகதைகள்/புதினங்கள் பல்கலைப் பாடத்திட்டத்தில் இடம்பெறவும், எனது ஆக்கங்களில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலை மாணவர்கள் ஆய்வுப் பட்டங்கள் பெறுவதற்கும் அன்றே வித்திட்டவர் அருள்சாமி ஐயா அவர்கள்.
• எனது முதல் சிறுகதைத்தொகுதியான "விருந்து " நூலை இராமனாதபுரம் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட போது விழாவுக்கு வந்து ஆசி கூறியவர் அருள்சாமி ஐயா அவர்கள்.
• இது ஒரு வகையில் "மகன் தந்தைக் காற்றும் உதவியை " ஒத்தது. அதற்குதவிய இறைவனுக்கு நன்றி.
இவ்வரிய வாய்ப்பினை எனக்களித்தமைக்காக என் ஆசானுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.
அய்யா அருள்சாமி போல் இன்று எத்தனை ஆசிரியர்கள் ..?

நன்றி: சிந்தனை (ஈதைப்பெருநாள் மலர்)


ஊற்றுக்கண் தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com