ஊற்றுக்கண்

 டாக்டர் ஹிமானா செய்யத்

 

Refer this Page to your friends


பகுதி - 19

நீ டாக்டரா? நான் டாக்டரா?


1995 -ம் ஆண்டு.

ஹஜ்ஜுக்கு இன்னும் பத்தே நாட்கள்.

மதீனா மாநகரம் ஜன்னத்துல் பக்கீ கபுருஸ்தானத்துக்கு எதிரில் அமைந்திருந்த பெரிய அரசு மருத்துவமனையில் ஏகப்பட்ட கூட்டம். மருத்துவமனையின் வெளி நோயாளிப் பிரிவில் நீண்ட வரிசையில் நிற்கிறேன் நான்!

நா வறண்டிருக்கிறது; சோர்வில் நிற்கக்கூட முடியவில்லை. உடனடி சிகிச்சை கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவ்வளவு கூட்டம். துணைக்கு அழைத்து வந்த லால்பேட்டை தளபதி மௌலானா ஷபீக்குர்ரஹ்மான் ஹழரத் அவர்கள் அரபி மொழி தெரிந்திருந்ததாலும் பலமுறை உம்ரா - ஹஜ் செய்திருந்த அனுபவத்திலும் லாவகமாக என்னை இழுத்துக் கொண்டு சென்று எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே டாக்டர் அறைக்குள் தள்ளி விடுகிறார்கள். அவர்கள் உள்ளே வர முடியாது.

உள்ளேயும் பெருங்கூட்டம். ஒரு வகையாக டாக்டரை நெருங்கிவிட்டேன். ஒரு டாக்டராக பல வருட அனுபவம் தான்; ஒரு நாளைக்கு பல கேஸ்கள் பார்த்து சிகிச்சை அளிக்கும் அனுபவம்! ஆனால் ஒரு நோயாளியாக, அதுவும் தூர தொலைவு வெளிநாட்டில், ஹஜ் பரபரப்பில் இது புதிய அனுபவம் அல்லவா?

பொறுமையுடன் வரிசையில் நின்று, என் வாய்ப்பு வந்தவுடன் டாக்டர் கேட்குமுன்பே என் பிரச்சினையைச் சுருக்கமாகச் சொல்லி நான் ஓர் இந்திய டாக்டர் என்றும் அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் சொல்வதை அந்த இளம் டாக்டர் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கேட்டுக் கொண்டார். ரத்த அழுத்தம் பார்த்தார். ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பார்த்து வருமாறு சீட்டில் எழுதத் தொடங்கினார்.

அங்கே வேறு ஒரு பெரிய கியூ நிற்குமே!

நேரம் சுணங்கும்; சிகிச்சை தாமதமாகும்! எனவே நான் சர்க்கரை நோயாளி அல்ல என்றேன் அவரிடம் அவசரமாக. மக்காவிலிருந்து மதினா வரும்போது கடுமையான வெளி வெப்பத்தில் மாட்டிக் கொண்டு விட்டதால் ஏற்பட்ட "ஹீட் ஸ்ட்ரோக்" தான் நோய்வாய்ப்பட்டதற்கான காரணம் என்று பணிவுடன் மீண்டும் அவரிடம் சொன்னேன். நான் ஒரு இருபதாண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட டாக்டர் என்பதையும் மறுபடி நினைவு படுத்தினேன்.

அதை அவர் கண்டு கொள்ளவில்லை; என்னை ஒரு மாதிரியாக நிமிர்ந்து பார்த்து "ஸோ வாட்? போ ... போய் சொன்னதைச் செய்து கொண்டு வா; என்ன ரொம்பப் பேசுகிறாய்? " என்று கடிந்தார். அரேபிய வெப்பத்தைவிட அவர் வெளிப்படுத்திய வார்த்தை வெப்பம் கடுமையாக இருந்தது.

அந்த அவமானத்தில் ஏற்கனவே வறண்டிருந்த நாவு இன்னும் வறண்டது. திரும்பிப்போய்விடலாமா? என்று உள்மனதில் சுயமரியாதை உணர்வு உசுப்பியது. ஆனால் உடற்சோர்வும் தவிப்பும் அங்கேயே நிறுத்தியது. அரைமணிநேரம் காத்திருந்த பிறகு இரத்தம் சோதித்த சீட்டுடன் மறுபடியும் டாக்டர் முன்!

"சர்க்கரை நார்மல்; பி.பி. நார்மல் - சிகிச்சை தேவையில்லை; நீ போகலாம்!" என்ற டாக்டர் தாட்சண்யமில்லாமல் அடுத்த நோயாளியை அழைத்தார்.

நான் விடவில்லை; "எனக்கேற்பட்டுள்ள நீரிழப்பை - தாது உப்புக்கள் இழப்பைச் சரி செய்ய ஓரிரு பாட்டல் குளுகோஸ் ஸலைன் போட்டால் பெரும் உதவியாக இருக்கும்; வறட்சி அதிகமாயிருப்பதால் நான் கையில் எடுத்துவந்துள்ள 'எலெக்ரொலைட்' பவுடரைக்கூட வாய்வழி எடுக்க முடியவில்லை; குமட்டுகிறது ; தயவு செய்து உதவுங்கள் " என்றேன்.

ஒரு மரியாதைக்குக் கூட அவர் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை; நானும் விடுவதாக இல்லை. மறுபடியும் மன்றாடினேன்.

கோபத்துடன் திரும்பிய அந்த டாக்டர் "உன் நாட்டில் நீ எதுவாகவும் இருக்கலாம்; அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை... இங்கே நான்தான் டாக்டர்! நான் சொல்வதைத்தான் நீ கேட்கவேண்டும் ... போ " என்று உறுமினார். வேறு வழியில்லாமல் அறைக்குத் திரும்பினேன் மேலும் சோர்ந்தவனாக.

நடந்தது இதுதான். மக்காவிலிருந்து மதினா வரும்போது நாங்கள் பிரயாணித்த பஸ்ஸின் மேல் கட்டியிருந்த லக்கேஜ்கள் கட்டவிழ்ந்து கீழே சரிய , எகிப்தைச் சேர்ந்த பஸ் டிரைவரின் உதவியை நாடினோம். அவர் "அது என் வேலை இல்லை; வேண்டுமானால் பஸ்ஸை நிறுத்துகிறேன்.. நீங்கள் மேலே ஏறி லக்கேஜைக் கட்டுங்கள் "என்று கறாராகச் சொல்லிவிடவே ,பயணிகளுக்குள்ளேயே ஆண்களில் இளையவர்களான நானும், பஷீர் ட்ராவல்ஸ் உதவியாளர் ஒருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி, மேலே ஏறி எங்களால் இயன்ற அளவுக்கு இறுக்கமாகக் கட்டிவிட்டு மீண்டும் பயணித்தோம்.

சிறிது தூரம் சென்றதும் திடீரென மறுபடியும் கட்டவிழ்ந்து சாமான்கள் பறக்கத் தொடங்கின. இம்முறை சவூதி கரன்ஸி நோட்டுகளும் பறந்தன; ஒரு விவரமான பயணி பணத்தை ஒரு சூட்கேஸில் வைத்து அதையும் மேலே வைத்திருக்கிறார். மறுபடியும் பஸ்ஸிலிருந்து இறங்கி - இம்முறை மக்கா மதினா நெடுஞ்சாலையை விட்டுக் கீழே இறங்கி பாலை மணலில் அங்குமிங்கும் ஓடி ஓடி பணத்தையும் முடிந்தவரை தேடிப் பொறுக்கி பஸ்ஸில் ஏறி லக்கேஜைக் கட்டினோம். இரண்டுமணி நேரம் பாலையில் அல்லாடியதில் வேர்த்து விறுவிறுத்துப் போனது. மதினா சென்றடைந்த போது நாவறட்சி உச்சத்தில் . ஹீட்ஸ்ட்ரோக்கின் அத்தனை அறிகுறிகளும் ஒவ்வொன்றாய்ப் பற்றிக் கொண்டன.

இப்போது பிரபல அல் அமானத் ஹஜ் சர்வீஸ் பங்குதாரராக இருக்கும் சகோதரர் பிச்சை வலசை மஹ்மூது மரைக்கார் (மக்கா மரைக்கார் என்பர்) உடனடியாக "அல் தர் " என்ற ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். அங்கு பணியாற்றிய தேவிபட்டினம் சகோதரரும் (அவரை மதீனா மரைக்கார் என்பர்) உதவினார். டியூட்டியில் இருந்த எகிப்திய இளம் பெண் மருத்துவர் பொறுமையுடன் கேட்டு உடனே என் ஆலோசனையின் மருத்துவ நியாயத்தை ஏற்றுக் கொண்டு குளுக்கோஸ் ஸலைன் போட்டார். இறையருளால் அவசர நிலைமை மாறியது. தமிழகத்திலிருந்து ஹஜ் உம்ரா செல்லும் அத்தனை பேருக்கும் பேருபகாரம் செய்து வரும் புதுவலசை நஜீமுத்தீன் ஹாஜியார் என்னுடனேயே இரண்டு நாட்கள் அறையில் தங்கி உதவினார். இன்னொரு ஹஜ் சர்வீஸ் மூலம் மதீனா வந்திருந்த சென்னை நண்பர் (மர்ஹ¥ம்) டாக்டர் சலீம் அவர்களிடமும் ஆலோசனை பெற்றுக் கொண்டேன். இறையருளால் அதன் பிறகு மதீனாவில் செய்யவேண்டிய அமல்களை முழுமையாகச் செய்தோம்.

ஹஜ்ஜே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு ஆன்மீக அனுபவம்தான்!

அந்த ஒட்டுமொத்த அனுபவத்தில் இப்படியும் சிறு சிறு இழைகளாக சில மறக்க முடியாத உட்கூறுகள்!

நாம் உயிர்வாழும் காலம் முழுக்க மனதில் நிற்கும் அனுபவங்களாக!


நன்றி: சிந்தனை jan 2007


ஊற்றுக்கண் தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com