அறிவியல் அதிசயம் - MJM Iqbal

 

ஒளி உமிழும் படங்களை அச்சு செய்யும் நவீன பிரிண்டர்

விஞ்ஞான உலகில் கணிப்பொறித் துறையின் பங்கு மிகவும் இன்றியமையாதது என்பதை யாரும் மறுக்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சியின் ஆணி வேர் கணிப்பொறித் துறை என்றே சொல்லலாம்.

உலகையே கைக்குள் அடக்கமாகக் கொண்டுவந்த எத்தனையோ தொழில்நுட்பங்களுக்கு கணிப் பொறித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஒரு அடிப்படை சக்தியாக விளங்குகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் படங்களை மற்றும் தகவல்களை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இடத்தில் இருந்துகொண்டு பார்க்குமாறு செய்வது எல்லாம் கணிப்பொறி மற்றும் தகவல் தொழில்நுட்பம்தான்.

நாளுக்கு நாள் மணிக்கு ஒன்று என்றுகூட சொல்லலாம். அந்தளவிற்கு ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.

டைப் ரைட்டரில் வளர்ந்த பிரிண்டிங், லேசர் பிரிண்டர், கலர் பிரிண்டர் என்று இப்பொழுது இயற்கையாகவே தத்ரூபமாகவே ஒளி உமிழக்கூடிய படங்களை அச்சு செய்யும் பிரிண்டரும் வந்து விட்டது. அதை பற்றி பார்ப்போம்.

அரிஜோனா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி கஸ்ஸான் இ. ஜப்பூர் என்பவர் ஒரு புதியவகை பிரிண்டரைக் கண்டுபிடித்துள்ளார். பிரிண்ட் செய்யும் படத்திலேயே ஒளி உமிழும் வகையில் கண்டுபிடித்துள்ளார்.


அதாவது இயற்கையாகவே தத்ரூபமாகவே தொலைக்காட்சித் திரையில் பார்ப்பது போலவே இருக்கும்.

பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பிரிண்டரிலிருந்து ஒரு ஸ்டாம்ப் அளவு முதல் ஒரு கட்டிடத்தின் சுவர் அளவு வரைகூட நாம் பிரிண்ட் செய்ய முடியும்.

பிரகாசமான ஒளி விளக்குகளுடன் கூடிய கட்டிடங்கள் கொண்ட ஒரு நகரின் இரவுக் காட்சியை பிரிண்ட் செய்தால் அதே மாதிரியே ஒளி உமிழும் வகையில் அந்த அச்சு பிரகாசிக்கும்.

இதற்காகவே பிரத்தியேகமாக அச்சுக்கு மின் வேதிப்பொருட்களுடன் கூடிய மை பயன்படுத்தப்படுகிறது. இந்த நவீன மையை பயன்படுத்தி மின்கடத்தி பரப்பைக் கொண்ட காகிதத்தில் பிரிண்ட் செய்யப்படுகிறது.


நாங்கள் கடத்தும் திறன் கொண்ட புதிய வகை தொழில்நுட்பத்துடன் இந்த பிரிண்டரை வடிவமைத்துள்ளோம்.

சில வேதியியல் நுட்பங்களை உட்படுத்தியிருப்பதன் மூலம் எந்த இடத்தில் மின்னணுக்கள் அதிகம் தேவைப்படுகிறது எந்த இடத்தில் மின்னணுக்கள் அதிகம் தேவையில்லை என்பதற்கேற்ப பிரிண்டரை கட்டுப்படுத்த மற்றும் செயல்படுத்த முடிகிறது, என்று ஜப்பூர் கூறுகிறார்.

அதாவது அச்சு செய்ய இருக்கும் படத்தில் எந்த இடத்தில் ஒளி உமிழச் செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் ஒளி உமிழும் வகையில் மின்னணுக்களை அதிகம் தெளிக்கும்.

அதற்கான காகிதமும் மின்னணுக்களை ஒளி உமிழும் வகையில் மின் கடத்திகள் கொண்டிருக்கும்.

"இது ஏராளமான அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டது. ஒளி உமிழும் வகையில் அச்சு செய்வதற்கு திட்ட வரைமுறைகளை தொகுத்துள்ளோம்.

இதன் மூலம் கம்ப்ïட்டரிலிருந்து பிரிண்டருக்கு அச்சு செய்யப்படும் படம் அதற்கான வண்ணங்கள் போன்றவை தீர்மானிக்கப்பட்டு வேதிவினைக்கு உட்படுத்தப்படுகிறது. சாதாரண காகிதத்தில் அச்சு செய்யப்படுவது போலவே இதுவும் அச்சு செய்யப்படுகிறது'' என்றார் விஞ்ஞானி ஜப்பூர்.

பிளாஸ்டிக் காகிதத்தில் கூட இந்த ஒளி உமிழும் படங்களை அச்சு செய்யலாம்.

(தொடரும்)

எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.




ராக்கெட் பைக்


ராக்கெட் என்றாலே நம் நினைவிற்கு வருவது விண்ணைக் கிழித்துக் கொண்டு செல்லும் கருவி தான். ஆனால் விஞ்ஞானிகள் இரு சக்கர வாகனத்தை ராக்கெட்டாக சாலையிலேயே செல்லும் விதமாக தயாரித்துள்ளனர். நம்ப முடியவில்லையா? ஆம்! பிக்கென்சன் என்ற ராக்கெட் விஞ்ஞானி நவீன ராக்கெட் பைக்கை கண்டுபிடித்துள்ளார்.

ஓரியன் ப்ரொபல்ஸன் ராக்கெட் வடிவமைக்கும் நிறுவனத்தின் தலைவரான இவர் தன்னுடைய சக ஆராய்ச்சியாளர்களுடன் இந்த 35 பவுண்டு (சுமார் 16 கிலோ) எடையுள்ள ராக்கெட் இன்ஜினை இரு சக்கர பைக்கில் பொருத்தி வடிவமைத்துள்ளார். இவர் மற்றொரு 90 கிலோ எடையுள்ள ராக்கெட் இன்ஜினுடன் பைக்கை வடிவமைத்துள்ளார். இது 5 வினாடிகளில் 60 கிலோமீட்டர் தூரத்தை எட்டிவிடும்.

சாதாரணமாக ரோட்டில் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் பைக்கையே நாம் பார்த்தால் காதை பொத்திக்கொண்டு நகர்ந்து விடுகிறோம். 5 வினாடிகளில் 60 கிலோமீட்டரை தொடும் என்றால் பிரம்மிப்பாகத்தான் இருக்கும். இந்த பைக் மற்ற ராக்கெட்டைப் போல கலப்பின ராக்கெட் தொழில்நுட்பத்தில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமுக்கு பொத்தானின் மூலம் ராக்கெட் இன்ஜினை உசுப்பிவிட முடிகிறது. இடது கைப்பிடியிலுள்ள பொத்தானை அழுத்துவதின் மூலம் பாட்டரியிலிருந்து இன்ஜினை இயக்க மின்சாரம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் எரிசக்தி தூண்டப்படுகிறது. வலது கைப்பிடி பொத்தான் நைட்ரஸ் ஆக்சைடை வெளிப்படுத்துகிறது.
 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=3/11/2006&secid=76