அறிவியல் அதிசயம் - MJM Iqbal

 

நிலவில் மோதும் விண்கலம்


பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் நிலவு. பூமியின் துணைக்கோள் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

நிலாச்சோறு, தேனிலவு என்று மனிதனின் வாழ்க்கையில் குழந்தை பருவத்தில் இருந்து வாலிப பருவம் வரை நிலவு முக்கிய பங்கு வகிக்கிறது. கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் செல்லமான கிரகம் நிலவு. நிலவை வர்ணித்து கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை என்று கூறலாம். நிலவை வர்ணிப்பது போல நிலவை கொஞ்சுவது போல காதலியை, மனைவியை, குழந்தையை கொஞ்சி மகிழுவதுண்டு.

மனித இனம் தோன்றியதில் இருந்தே நிலவைப்பற்றி ஆராயும் குணம் அவன் மனதில் தீவிரமாக இருந்தது. முழு நிலவு தினமான பவுர்ணமி மற்றும் நிலவு மறையும் நாளான அமாவசை தினங்களில் பூமியில், கடலில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனை சிந்திக்கத் தூண்டியது. பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு பற்றி ஆராய மனித மனம் ஆர்வம் காட்டியது.

தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே மனிதன் தனது வெறும் கண்கள் மூலம் காண முடிந்த நிலவு பற்றி தான் அதிகமாக ஆராய்ந்தான். நிலவில் தெரிந்த கருப்பு நிழலை பார்த்து நிலவில் பாட்டி ஒருத்தி வடை சுடுகிறாள் என்று குழந்தைகளுக்கு கதை சொன்னாலும் அந்த நிழலுக்கு காரணம் என்ன என்று ஆராய அவன் தீவிரம் காட்டினான்.

விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறத் தொடங்கி ராக்கெட்டுகள், விண்கலங்கள், செயற்கை கோள்கள் போன்றவற்றை அனுப்பிய போது மனிதன் முதலில் விண்வெளியையும் அதையடுத்து ஆராய்ந்தது நிலவைத் தான்.

நிலவு தொடர்பான ஆராய்ச்சியல் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலவு பற்றிய ஆய்வில் அதிக ஈடுபாடு காட்டியது. அப்பல்லோ என்ற பெயரில் வரிசையாக விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளை நடத்தியது. அதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகளாக நிலவைப்பற்றிய ஆய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. செவ்வாய் மற்றும் பிற கிரகங்களை ஆராயும் முயற்சியில் நாசா தீவிரம் செலுத்தியது.



இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் ஸ்மார்ட்-1 என்ற பெயரில் ஒரு செயற்கை கோளை நிலவுக்கு அனுப்பியது. ஸ்மார்ட் என்றால் ஸ்மால் மிஷன் பார் அட்வான்ஸ்டு ரிசர்ச் இன் டெக்னாலஜி  என்பதாகும். ஏரியான்-5 ராக்கெட் மூலம் 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி ஸ்மார்ட் செயற்கை கோள் ஏவப்பட்டது.

நீள் வட்டப்பாதையில் நிலவைச் சுற்றி வந்த இந்த செயற்கை கோள் பல்வேறு ஆய்வுப்பணிகளை செய்தது. அதில் குறிப்பாக நிலவை சர்வே செய்தது முக்கியமான பணியாகும். இது தவிர நிலவின் தரைப்பகுதியையும் அதன் துருவப் பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் தன்மை ஆகியவை குறித்தும் ஸ்மார்ட்-1 ஆய்வு நடத்துகிறது. இந்த ஆய்வுகளின் உச்சகட்டமாக ஸ்மார்ட்-1 செயற்கை கோளை நிலவின் மீது மோதியும் ஆய்வு செய்ய உள்ளனர்.

நிலவின் மீது ஸ்மார்ட்-1 இறங்கும் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் 1 அல்லது 2-ந் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக நிலவு தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் முடித்து விட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக வருகிற ஜுன் மாதம் ஸ்மார்ட்-1 செயற்கை கோள் நிலவுக்கு மிக அருகில் அதாவது 300 கிலோ மீட்டர் தூரம் வரை நெருக்கமாக சென்று நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்கிறது. அப்போது நிலவின் எந்தப்பகுதியில் மோத வேண்டும் என்றும் இடத்தை தேர்வு செய்து கொள்ளும்.

நிலவின் மீது ஸ்மார்ட்-1 செயற்கை கோள் இறங்கும் நிகழ்ச்சி மொத்தம் 15 மணி நேரம் நடைபெறும். இந்த பயணத்தின் போது ஸ்மார்ட்-1 மணிக்கு 5 ஆயிரம் மைல் வேகத்தில் நிலவை நோக்கி இறங்கும். நிலவை நெருங்கும் போது ஸ்மார்ட்-1-ல் உள்ள நவீன கேமிராக்கள் நிலவின் தரைப்பகுதியை படம் பிடித்து உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கும்.


இந்த படங்கள் அதிக தெளிவாகவும் நிலவின் தரைப்பகுதி பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளும் படியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. சுமார் 285 கிலோ எடை உள்ள ஸ்மார்ட்-1 நிலவின் மீது மோதும் போது அது முழுமையாக சேதம் அடைந்து விடும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சில ஆய்வுக்கருவிகள் மற்றும் தகவல் அனுப்பும் கருவிகள் சேதம் அடையாமல் தப்பும் வாய்ப்பும் இருக்கிறது என்றும் இதன் மூலம் கடைசி கட்ட சிக்னல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்-1 செயற்கைகோள் நிலவின் மீது மோதும் போது அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்படும்.அப்போது ஏற்படும் தூசு படலம், தரையின் கடினத் தன்மை, மண்ணில் கலந்து இருக்கும் ரசாயன பொருட்களின் விகிதங்கள் போன்றவற்றையும் ஆராய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

(தொடரும்)


தகவல் தொகுப்பு:
எம்.ஜே.எம்.இக்பால்,
துபாய்.

 

 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=3/18/2006&secid=76