விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் விஞ்ஞானிகளின் தற்போதைய இலக்கு செவ்வாய் கிரகம். பூமியின் பக்கத்தில் உள்ள நிலவில் காலடி எடுத்து வைத்து ஆராய்ந்த பின்னர் அடுத்த இலக்காக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து பல கோடி மைல்கள் தூரத்தில் உள்ளது. இங்கு உயிரினங்கள் எதுவும் உள்ளதா? அல்லது உயிரினங்கள் எதாவது வாழ்ந்திருக்குமா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதி மற்றும் அங்குள்ள மண் சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம் என்ன? அங்கு நுண்ணுயிர்கள் மற்றும் மனிதன் போன்ற உயிரினங்கள் வசிக்க முடியுமா? என்றும் ஆய்வுகள் நடக்கிறது. எதிர்காலத்தில் நிலவில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் மற்றும் பிற உயிரினங்களை வசிக்க வைக்க வேண்டும் என்பதும் இன்றைய விஞ்ஞானிகளின் கனவாகும். எல்லாவற்றுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அபூர்வ இயற்கை வளங்கள் அந்த கிரகத்தின் மீது விஞ்ஞானிகளுக்கு 'புதிய காதல்'' வரக் காரணமாகும். செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் முக்கியமானது அந்த கிரகத்தின் வரைபடம் தயாரிப்பது. இது வரை அங்கு அனுப்பிய செயற்கை கோள்கள் மற்றும் ஆய்வுக் கலங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஆராய்ந்து தகவல்கள் அனுப்பியது. இப்போது முதல் முறையாக செவ்வாய் கிரகம் முழுவதும் பறந்து சென்று அதன் தரைப்பகுதியை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி செவ்வாய் வரைபடம் தயாரிக்கும் பணி நடக்க இருக்கிறது. இந்தப்பணிக்காக சர்வே விமானம் ஒன்றை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர். அது பற்றிய தகவல்களை இந்த வாரம் காண்போம். செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கும் அந்த கிரகத்தின் வரை படம் தயாரிக்கவும் ஒரு விமானத்தை அனுப்பலாம் என்று அமெரிக் காவின் நாசா' விஞ்ஞானி ஜோயல் லிவைன் கூறினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இதைக் கூறியதும் பலர் ஆகா இது நல்ல ஜோக்', என்று சிரித்தனர். ஆனால் இதை அவர் தனது தீவிரமான ஆராய்ச்சி மூலம் செயல்படுத்தி காட்டி இருக்கிறார். அவரது இந்த திட்டத்துக்கு 'ஏரிஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.
 ஐரோப்பிய மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த குழுவில் ஜோயல் தலைமையில் 6 பேர் முக்கிய பங்கு வகிக்கின்றர். இந்த திட்டத்துக்காக சுமார் 176 கோடி ரூபாய்கள் வரை செலவு ஆகும் என்றுதிட்டமிட்டுள்ளனர்.
ஏரிஸ் திட்டத்தின் படி குட்டி விமானம் ஒன்று மடித்து வைக்கப்பட்டு ஒரு உருண்டையான கலத்தில் வைக்கப்படும். பின்னர் இதை ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ராக்கெட்டுடன் செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஆய்வுக் கலமும் இணைக் கப்பட்டு இருக்கும். செவ்வாய் கிரகத்தை நெருங்கியதும் இந்த ராக்கெட்டில் இருந்து உருண்டையான கலம் மட்டும் வெளியே தள்ளப்படும். இது செவ்வாய் கிரகத்தின் மீது வேகமாக தரை இறங்கும். அப்போது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் விரியத்தொடங்கும். அதே நேரத்தில் உருண்டையான கலம் திறந்து கொள்ளும். அதில் பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டுள்ள குட்டி விமானம் படிப்படியாக விரிவடைந்து பறக்கத்தொடங்கும். ஏரிஸ் திட்டத்தின் முக்கிய நோக்கமே செவ்வாய் கிரகத்துக்கு விமானத்தை அனுப்பி சர்வே பணிகள் நடத்த வேண்டும் என்பது தான். இதன்படி இந்த விமானம் செவ்வாய் கிரகத்தின மேற்பரப்பில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் உயரம் வரை பறந்த படி செவ்வாய் கிரகத்தின் பரப்பை படம்பிடித்து அருகில் பறந்து கொண்டிருக்கும் ஆய்வுக்கலத்துக்கு அனுப்பும். ஆய்வுக்கலம் இந்த தகவல்களை பூமியில் உள்ள நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். இந்த விமானம் மொத்தம் 3 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு தரைப்பகுதியை படம் பிடிக்கும். செவ்வாய் கிரகத்தில் பறந்தாலும் இதனை பூமியில் இருந்தே விஞ்ஞானிகள் குழுவால் கண்காணித்து கட்டுப்படுத்தவும் முடியும். அதற்கு ஏற்ப நவீன கம்ப்யுட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் இது இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராயும் விமானம் படிப்படியாக அங்கு இறங்கும் காட்சி. இதற்கு முன்பு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஆய்வுக் கலங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இறங்கி ஆய்வுகளை நடத்தியது. ஆனால் ஏரிஸ் திட்டத்தின் படி அனுப்பப்படும விமானம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பெருமளவில் கண்காணித்து வரைபடம் தயாரிக்க உதவும். இந்த ஆய்வுப்பணிகள் குறித்து விஞ்ஞானிகள் கூறும் போது, 'இது போன்ற ஆய்வுகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சி புதிய பரிணாமத்தை எட்டும்', என்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்ட 250 மூத்த விஞ்ஞானிகளில் 75 சதவீதம் பேர் கருத்துப்படி செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும், 25 சதவிகிதத்தினர் கருத்துப்படி அங்கு இன்னும் உயிரினங்கள் இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் விஞ்ஞானி லிவைன் இது பற்றி கருத்து கூறும் போது, 'செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத்தெரியாது. ஆனால் அங்கு நுண்ணுயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கும் என்று நம்புகிறேன்', என்கிறார்.
ஏரிஸ் திட்டத்தின் படி அனுப்பும் விமானம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன், அமோனியா மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் இருக்கிறதா? என்பதையும் ஆராயும். இந்த ஆய்வு 2011-ம் ஆண்டுக்குள் முழுமை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் பூமியில் இருந்து விமானத்துடன் புறப்படும் ராக்கெட் செவ்வாய் கிரகத்தை அடைய 11 மாதங்கள் ஆகும். செவ்வாய்க்கு விமானத்தை பறக்க விடுபவர்கள் இனி வருங்காலத்தில் அங்கு வாகனங்களை ஓட விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. பூமியைப் போல தட்ப வெப்ப நிலைகள் காற்று, நீர் எதுவும் இல்லாத ஒரு கிரகத்தை அடைவதே சிரமமாக இருந்தது போய் இப்பொழுது அங்கு பூமியில் பறப்பது போலவே விமானம் பறப்பது என்பது அதுவும் அங்குள்ள விவரங்களை சேகரித்து பூமிக்கு அனுப்புவது என்பது அறிவியலின் கிடுகிடு வளர்ச்சியே காரணம்.
உங்களுக்கு தெரியுமா? - செவ்வாய் கிரகம் பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
'மார்ஸ்' என்று ஆங்கிலத்திலும் செவ்வாய் என்று தமிழிலும் அழைக்கப்படும் இந்த கிரகம் சூரிய குடும்பத்தில் 4 வது கிரகமாகும். - கிரேக்க மொழியில் மார்ஸ் என்றால் யுத்த கடவுள் என்று பெயர். மார்ஸ் என்ற ஆங்கிலப்பெயரில் இருந்து தான் ஆங்கில மாதமான மார்ச் தோன்றியது என்றும் கூறுவார்கள்.
- சுமார் 6 ஆயிரத்து 794 கி.மீ. விட்டம் கொண்ட இந்த சிவப்பு கிரகம் சூரியனில் இருந்து 22 கோடியே79 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
- பூமியில் இருந்து புறப்படும் விண்கலம் சராசரி வேகத்தில் பயணம் செய்தால் செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 6 மாதம் ஆகும்.
- செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24.7 மணி நேரம் ஆகும். ஒரு ஆண்டு என்பது 687 நாட்கள் ஆகும்.
- செவ்வாய் கிரகத்தை ஆராய முதன் முதலில் மரைன் 4 என்ற விண்கலம் 1965-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 1976 ம் ஆண்டு வைக்கிங் என்று பெயரிடப்பட்ட கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. அதன் பிறகு சுமார் 20 ஆண்டுக்குப்பிறகு பாத்பைண்டர் என்ற வாகனம் 1997 ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இறங்கி சோதனை நடத்தியது. 2004 ம் ஆண்டு ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி ஆகிய கலங்கள் அங்கு ஆய்வுப்பணிக்கு சென்றன.
4 கட்ட ஆராய்ச்சி 'ஏரிஸ்' ஆய்வுத்திட்டத்தை அடுத்து செவ்வாய் கிரகத்தை ஆராய மார்வெல் (அயசஎநட) என்ற பெயரில் ஆய்வுக்கலம் அனுப்ப உள்ளனர். இது செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர்கள் எதுவும் இருக்கிறதா? என்ற ஆய்வை நடத்தும். அடுத்ததாக போனிக்ஸ் என்ற பெயரில் செல்லும் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் இறங்கி அங்கு தண்ணீர் இருக்கிறதா? என்பதை ஆராயும். இதையடுத்து ஸ்சிம் என்ற பெயரில் செல்லும் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள தூசுப்படலம் மற்றும் சுற்றுப்புறத்தை ஆராயும்.செவ்வாய் கிரகத்தில் ஆறு மற்றும் கடல் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை எப்படி வற்றிப்போய் இருக்கும். அல்லது தண்ணீர் உறை நிலையில் உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வுகள் நடக்க உள்ளது. |