|
பார்வையற்றவர்கள் என்றாலே அவர்களது உலகமே இருட்டு தான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்களும் தங்களது ஊனத்தை மீறி எண்ணற்ற பல சாதனைகளை படைத்து வருகின்றனர். இப்பொழுது பல்வேறு வகையான பணிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் பார்வை இழந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். பார்வையற்றவர்களுக்கு என்று கிரிக்கெட் போட்டி, தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்படி பலவகைகளில். அவர்களும் இடம், சூழ்நிலைகள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப ஏதாவது ஒன்றின் துணையோடு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். யாராவது துணையோடு அல்லது இதற்காகவே செல்லப்பிராணியான நாயின் உதவியோடு வெளியில் சென்று வர முடிகிறது. கண் பார்வையற்றவர்கள் ஒரு பேருந்தில் ஏறினால் கூட அந்தப்பேருந்தின் ஹாரன் சப்தத்தை வைத்தே "தம்பி! வருவது 12 ம் நம்பர் பஸ்தானே'' என்றெல்லாம் கேட்பார்கள். இப்படித்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலபேர் பேருந்தில் ஏறினால் தான் இறங்க வேண்டிய இடத்தை ஒவ்வொரு நிறுத்தமாக எண்ணிக்கொண்டு வருவார்கள். இதெல்லாம் நமக்கெல்லாம் சிரமமாகத் தெரிந்தாலும் இது அவர்களுடைய வாடிக்கையாகிவிட்டது. அதற்கு பிறகு அவர்களுக்காகவே உதவுவதற்கு நிறைய கருவிகள் நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் வந்துவிட்டன. `ப்ரைலி' உதவியுடன் அவர்கள் இப்பொழுது படிக்க முடிகிறது. பார்வை இழந்தவர்கள் பயன்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. சாதரண மக்களைப் போலவே அவர்களும் எதையும் செய்யக்கூடிய அளவிற்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவியல் வல்லுனர்கள் விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டு வருகின்றனர். யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களை தன்னிச்சையாக இயங்குவதற்கு ஏற்ப நிறைய கருவிகள் வந்துவிட்டன. வந்துக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது GPS (Global Positioning System) செயற்கை கோள்கள் மற்றும் ராடார் உதவியுடன் அவர்கள் பயன்படுத்தும் ஒரு நூதனக் கருவி வந்திருக்கிறது. அதைப் பற்றி அறிந்து கொள்வோம். தற்போது விஞ்ஞானிகள் பார்வையற்றவர்களுக்கு ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். செயற்கை கோள்கள் மற்றும் ராடார்கள் மூலம் பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி விரும்பிய இடங்களுக்கு தானாகவே செல்லலாம். பார்வையற்றவர்கள் தங்களுடைய கையில் ஒரு சிறிய லேப்டாப் கம்ப்யூட்டர் அளவிலுள்ள ஒரு கருவியை எடுத்துச்சென்றாலே போதும். அமெரிக்காவைச் சேர்ந்த 50 வயதுடைய பிரையன் சார்ல்சன். இவர் தன்னுடைய 11 வயதிலேயே அவரது வீட்டில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் பார்வையை பறிகொடுத்தவர். பார்வையற்ற இவர் புவியிலிருந்து 11 ஆயிரம் மைல்கள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் மற்றும் ராடார்களின் GPS உதவியுடன் இயங்கக் கூடிய நவீன தொழில் நுட்பக் கருவியின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளாக உலா வருகிறார். இந்த நவீனகருவி இவர் செல்லவேண்டிய இடத்தின் பெயரை ப்ரைலி எழுத்துக்களைக் கொண்ட தட்டச்சில் டைப் செய்தாலோ அல்லது அந்த இடத்தை சொன்னாலோ போதும் இவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு வழிக்காட்டிச் செல்லும். இதில் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கிய வரைபடத்திற்கான மென்பொருள் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் டைப் செய்யப்பட்டவுடன் இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு ராடார் மற்றும் செயற்கை கோள்களின் உதவியுடன் அக்குறிப்பிட்ட இடத்தை பார்வையற்றவர்கள் செல்வதற்கு வழிக்காட்டிச் செல்லும். இது பார்வையற்றவர்கள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு எப்படி செல்ல வேண்டும் என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் சிரமம் தவிர்க்கப்படுவதோடு துல்லியமாக அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. ப்ரைன் கம்ப்யூட்டர் கல்வி நிலையங்கள், கடைகள், உணவு விடுதி, பணம் எடுக்கும் (ATM) மெஷின் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தன்னுடைய தோளில் இச்சிறிய லேப்டாப் அளவிலுள்ள நவீன கருவியை மாட்டிக்கொண்டு ஹாயாக கிளம்பி விடுகிறார். "முன்பெல்லாம் இதுபோன்ற இடங்களுக்கு நான் சென்றதில்லை. ஆனால் இப்பொழுது முடிகிறது'' என்கிறார் அமெரிக்காவிலுள்ள மசாச்சூஸட்டில். பார்வையற்றவர்களுக்காக இயங்கும் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் துணைத்தலைவரான இவர். "நான் வெளியில் சென்றால் எங்கு செல்ல வேண்டுமோ அதற்காக தெருக்களையும், இடங்களையும் மனதில் நிறுத்தி நினைவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஒரு இடத்தை தவற விட்டாலோ யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை'' என்கிறார். 1970ல் ராணுவ துறையால் ஏற்படுத்தப்பட்ட இந்த GPS (Global Positioning System) முறை விமானி, கப்பல் துறை, படகு சவாரி, சைக்கிள் மற்றும் வாகன ஓட்டிகள் வரை இதுவரை உபயோக்கிக்கப்பட்டு இறுதியாக தற்பொழுது கண் பார்வையற்றவர்களுக்கு இம்முறை பெரிதும் பயன்படுகிறது. இயங்கும் விதம் இந்தக் கருவி கிட்டத்தட்ட 24 செயற்கை கோள்களில் வலையமைப்பு (Networking) ஏற்படுத்தப்பட்டுள்ளது. உபயோகிக்கும் நபர் எந்த இடத்தில், எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்ற அளவீடுகளைக் கண்டறிந்து குறைந்த கதிர்வீச்சுக்களுடன் கொண்ட அலைவரிசை மூலம் இக்கருவியை தொடர்பு கொள்கிறது. ஒவ்வொரு கருவியும் அந்தந்த இடத்திற்கு ஏற்ற பாதுக்காப்பான வழித்தடங்கள் மற்றும் வரைபட சாப்ட்வேர் ஏற்றப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த சாப்ட்வேரை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதில் உபயோகிப்பவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப இடங்களை மற்றும் வழித்தடங்களை சேர்த்துக் கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரையன் பயன்படுத்தும் இந்தக் கருவியை ப்ளோரிடாவிலுள்ள ((Freedom Scientific of St. Petersburg என்ற) நிறுவனம் உருவாக்கியது. ஒவ்வொரு 10 வினாடிகளுக்கு ஒருமுறை இக்கருவி இவருடைய நிலையை அதாவது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பதிவு செய்கிறது. இவர் இக்கருவியை பல நாடுகளுக்கு வியாபார சம்பந்தமாக செல்லும்போது பயன்படுத்தியுள்ளார். பார்வையற்றவர்களுக்கு உதவும் தொழில்நுட்ப கருவிகளுக்கான துறையைச் சேர்ந்த இயக்குனர் ஜோ லஜ்ஜாரோ கூறுகையில், "இது பார்வையற்றவர்கள் எதையும் திறம்பட செய்ய வழிவகுக்கிறது'' என்கிறார். மேலும் இது வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கும் உதவுகிறது. இதன் மூலம் வாகன நெரிசல் அதிகமுள்ள இடங்களை கண்டுகொண்டு அந்த இடத்திற்கு செல்லாமல் மாற்று வழியை உபயோகித்து வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவதை தவிர்க்க முடிகிறது. "பார்வையற்றவர்கள் ஒரு இடத்தை கடப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது. ஆனால் இக்கருவியின் உதவியுடன் இதை தவிர்க்க முடிகிறது'' என்கிறார் ஜோ. மேலும் அவர் கூறுகையில், "இது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள உதவுகிறது. இது பார்வையற்றவர்கள் யாருடைய உதவியையும் நாடாமல் சுதந்திரமாக பவனி வர பேருதவி புரிகிறது'' என்கிறார். இதனுடைய விலை இப்பொழுது அதிகம் என்பதால் அமெரிக்காவில் இது 5000க்கும் குறைவான பார்வையற்றவர்களே வாங்கியுள்ளனர் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதன் ஒன்றின் விலை கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் வரை ஆகிறது. இது சாதாரண வர்க்கத்தினரும் வாங்குவதற்கு முட்டுக்கட்டையாக இதன் விலை இப்பொழுது இருந்தாலும், செல்போனிலேயே இந்த நிறிஷி வசதியை கொண்டுவந்து குறைந்த விலைக்கு இன்னும் சில ஆண்டுகளில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பார்வையற்றவர்களுக்காக ப்ரையன் நடத்தும் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியில் இக்கருவியை எப்படி உபயோகிக்கலாம் என்பது பற்றி பயிற்சி அளித்து வருகின்றனர். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நாளடைவில் இம்மாதிரியான கருவிகள் சாதாரண வர்க்கத்தினரும் வாங்கும் அளவிற்கு வரும் நாள் அதிகம் இருக்காது என்றே சொல்லலாம். செல்போன் மற்றும் `சிம்' கார்டுகள் எப்படி சாதாரண கடைகளில் எந்நேரமும் எல்லோராலும் வாங்க முடிகிறதோ அந்த அளவிற்கு வரும் என்பது நிச்சயம். செல்போன் வாங்குவது போன்று இந்தக் கருவியும் `சிம்' கார்டு போன்று இந்தக்கருவிக்குண்டான வரைபட சாப்ட்வேரும் மலிந்து விடும் அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி எளிதாகிவிடும் என்பது உறுதி. (தொடரும்) எம்.ஜே.எம். இக்பால் |