உண்மை அறிந்த மனிதனிடம் தான் இந்த பிரபஞ்சமே
புதைந்திருக்கிறது என்று சித்தர்களும் ஞானியர்களும்
தெரிவிப்பது உண்டு.
மின் சக்தியே விஞ்ஞான வளர்ச்சிக்கு அதிமுக்கியமான ஒன்றாக
இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே நம்முடைய
அபார வளர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு காரணகர்த்தா. நீர்,
நிலக்கரி, அலை மற்றும் அணு சக்தி போன்றவற்றின் உதவியுடன்
இப்போது நமக்கு மின்சாரம் கிடைக்கிறது.
காற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. காற்றின் மூலம் குறைந்த
செலவில் அதிக மின்சக்திகளைப் பெற விஞ்ஞானிகள் இடைவிடாமல்
முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். தற்பொழுது உலகம்
முழுவதிலும் 50 ஆயிரம் மெகா வாட் மின்சாரம்
உபயோகப்படுத்தப்படுகிறது. இது 50
நியூகிளியர்
ஆற்றல்
நிலையத்திற்கு சமமாகும்.
நமக்கு மின்சாரம் கிடைப்பதற்கு காற்றின் பங்கு மிக மிக
அவசியமாக விளங்குகிறது. காற்றாலை மின்சாரம் மிகவும்
பிரசித்தி பெற்றது. புறநகர் பகுதிகளில் பெரிய பெரிய ராட்சத
காற்றாடிகள் சுழன்று கொண்டிருப்பதைக் காணமுடியும்.
நிலங்களில் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரத்தில் மாசற்ற
மின்னாற்றல் கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும்
அதிக இரைச்சல்கள் ஏற்படுவதோடு எல்லா நேரங்களிலும் அது
சுழல்வதற்கான காற்று கிடைப்பதில்லை.
இவைகளை கருத்திற்கொண்டு விண்ணில் மிதந்தபடி மின்சாரத்தை
உற்பத்தி செய்யும் காற்றாடிகள் மற்றும் மின் உற்பத்தி
நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
இந்த புதிய
வழிமுறை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ராட்சத காற்றாடிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுவது குறித்து அறிந்து இருக்கலாம்.
தமிழகத்தில்
நாகர்கோவில் அருகே உள்பட தமிழகத்தில் பல இடங்களில்
காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக புறநகர் பகுதிகளில் உள்ள
தொழிற்சாலைகள்
காற்றாடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகளில்
அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலை நாடுகளில் இத்தகைய முறைகளில் மின்சாரம்
தயாரிக்கும்
முயற்சிகள் அதிக அளவில் நடைபெற்று
வருகிறது. இந்த முறையில்
மின்சாரம் தயாரிக்கும் போது சில பிரச்சினைகளும்
இருக்கத்தான் செய்கிறது. காற்றாலை எந்திரத்தின் இரைச்சல்,
இந்த ஆலைகளை நிறுவ தேவைப்படும் இடப்பிரச்சினை போன்றவை
இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு காண விண்வெளியில்
காற்றாலைகள் அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும்
திட்டம் உருவாக்கப்பட்டது.
பூமியிலிருந்து 15 ஆயிரம் முதல் 45 ஆயிரம் அடி உயரத்தில்
காற்றாலைகளை நிறுவும் இப்புதிய முறையைக் கண்டறிந்தவர்
ப்ரையன் ராபர்ட்ஸ். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்
உள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பொறியியல்
வல்லுனராக இருக்கிறார்.
மூன்று பொறியியல் வல்லுனர்களின் கூட்டணியுடன்
கலிபோர்னியாவின் சான்டிகோ நகரில் ஸ்கை விண்ட் பவர் என்ற ஆராய்ச்சி மையத்தை
நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் பறக்கும் மின்னியற்றிகளை
தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த திட்டம் குறித்து என்ஜினீயர் ராபர்ட்ஸ் கூறும்
போது...
"பறக்கும் மின்சார ஜெனரேட்டர்கள் எடை குறைந்ததாக
தயாரிக்கப்படும்.பின்னர் இதை ஒரு விமானத்தின் மூலம்
விண்ணிற்கு எடுத்துச்செல்ல வேண்டும். பின்னர் இது தரையில்
இருந்து குறிப்பிட்ட உயரத்தில் விண்ணில் பறந்த படி
இருக்கும். பூமியில் இருந்து பார்க்கும் போது இது ஒரு
ராட்சத பட்டத்தைப் போல பறந்து கொண்டிருக்கும். மணிக்கு 200
மைல் வேகத்தில் காற்றாடிகள் விண்ணில்
சுற்றிக்கொண்டிருக்கும். இதன் மூலம் பெறப்படும் மின்சாரம்
கேபிள் இணைப்பு மூலம் தரை நிலையத்துக்கு அனுப்பப்படும்.
பின்னர் இந்த மின்சாரம் முறைப்படி தொழிற்சாலைகள் மற்றும்
வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் 600 பறக்கும்
மின்னியற்றிகளை விண்ணில் மிதக்கவிட முடியும். இதன்
மூலம் ஒவ்வொரு பறக்கும் மின்னியற்றிகளும் 20 மெகாவாட்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவைகளின் மூலம்
இரண்டு சிகாகோ நகரங்கள் அளவிற்கு மின்சாரத்தை கொடுக்க
முடியும்'', என்கிறார் ராபர்ட்ஸ்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி காற்றில் இருந்து
மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை அமெரிக்காவின் வான்
போக்குவரத்து நிர்வாகத்துறையின் அனுமதியுடன்
200 கிலோவாட் மின்சாரத்தை கொடுக்கும் ஒரு பறக்கும்
மின்னியற்றியை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ராபர்ட்ஸ் கூறுகையில், 'இதற்கான வடிவமைப்பு, எடை, அளவு
மற்றும் செலவு விபரங்களை தயாரித்துவிட்டோம். தற்பொழுது
இதற்கு 4 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது', என்கிறார்.
அதாவது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 18 கோடி
தேவைப்படுகிறது.
இந்த பறக்கும் மின்னியற்றிகள் 200 சதுர மைல்களுக்குள் காற்று
மண்டலத்தை சுற்றி வரும். இந்த மின்னியற்றிகளை விமானங்கள்
தயாரிக்கும் உலோகங்கள், பொருட்கள், கார்பன் நார் இழைகள்,
அலுமினியம் மற்றும் கண்ணாடி நார் இழைகளைக் கொண்டு
தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய எடை 45 ஆயிரம் பவுண்டுகள்
அதாவது 20,412 கிலோவாகும். 130 அடி குறுக்களவு விட்டமுள்ள
காற்றாடிகளைக் கொண்டு சுற்றி வருவதோடு மின்சாரத்தையும்
உற்பத்தி செய்கிறது. அதாவது இந்த காற்றாடி சுற்றும் போது
இரண்டு பணிகளை செய்கிறது. 200 சதுர மைல் பாதையை சுற்றி
வரும் அதே சமயத்தில் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.
3 அங்குல அலுமினியத்தாலான இணைப்புகள் மூலம் இந்த பறக்கும்
மின்னியற்றிகளுக்குள் தொடர்பு ஏற்படுத்தப்படும். இந்த
இணைப்பு மூலம் மின்சாரம் தரை நிலையத்திற்கு
கடத்தப்படுகிறது. ஒவ்வொரு இணைப்புக் கம்பிகளும் 20 ஆயிரம்
வோல்ட் மின்சாரத்தை கடத்துகிறது.
தரையிலிருந்து இந்த பறக்கும் மின்னியற்றிகள் தரை மின்
நிலையத்திலுள்ள மின்சாரத்தை உபயோகித்து மேலே உயர்வதற்கு
பயன்படுத்தப்படுகிறது. மேலே எழும்பியவுடன் இது ஒரு
ஹெலிகாப்டரைப் போல இயங்க ஆரம்பித்துவிடுகிறது. விமானப்
பாதையை அடைந்தவுடன் 40 டிகிரி சாய்வில் சுழல
ஆரம்பித்துவிடுகிறது.
மனிதன் சிந்திக்க சிந்திக்க அவனை சூழ்ந்துள்ள
சக்திகளிலிருந்து மாபெரும் ஆற்றல்களை விஞ்ஞானத்தின்
உதவியுடன் பெற்று வருகின்றான். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம்
நாம் நிறைய சாதகங்களை அடைந்துள்ளோம்.
விண்ணைப் பார்த்து கவிதைகளையும், கதை கட்டுரைகளயும்
மட்டுமே படைத்துக் கொண்டிருந்த மனிதன் இப்பொழுது உலக
நன்மைக்காக விண்வெளியை பயன்படுத்துவது பூமிக்கடியில்
மட்டும் அல்ல விண்ணிலும் ஏராளமான புதையல்கள் புதைந்துள்ளன
என்பதையே நிரூபிக்கிறது.
(தொடரும்)

|