அறிவியல் அதிசயம் - MJM Iqbal

10-06-2006

Refer to Your Friends

சாலையிலும் வானிலும் செல்லும் டூ இன் ஒன் கார்

'அலைகளுக்கு ஓய்வில்லை' என்பார்கள். அது நம் விஞ்ஞானிகளுக்கும் பொருந்தும். அவர்களது ஓய்வில்லாத முயற்சியால்தான் நமக்கு இன்று புதுப்புது தொழில்நுட்பங்களுடன் வசதியான வாழ்வு கிடைக்கிறது என்று சொல்லலாம். புதிய கண்டு பிடிப்புகளினால் எத்தனையோ கஷ்டங்கள், சிரமங்கள் விடைபெற்றிருக்கின்றன. வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலி என்னவென்று கேட்டால் `ட்ராபிக்' என்றுதான் பதில் வரும். அந்த அளவிற்கு அதிக வாகனப் பெருக்கம், மக்கள் தொகை நெரிசல் இவையெல்லாம் காரணம். 200 கி.மீ தூரம் உள்ள ஒரு ஊருக்கு செல்வதற்கு மொத்தம் 3 மணி நேரம் ஆகும் என்றால் ஒன்றரை மணி நேரம் நகரின் எல்லையை தாண்டவே சரியாகிவிடுகிறது. போக்குவரத்து காவல் நிர்வாகத்தினரும், அரசாங்கமும் இதை தவிர்க்க செய்யாத முயற்சிகளே இல்லை எனலாம். ரெயில், கேபிள் கார் என்று சில நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் இவைகள் கை கொடுக்குமா? என்பது சந்தேகம் தான். ஹெலிகாப்டர் என்றால் அது சாதாரணமானவர்கள் செல்லக்கூடியதல்ல. மேலும் அதற்கு செலவும் அதிகம். விமானதளமோ அல்லது மைதானத்திலோ சென்று விட்டு அதற்கு பிறகு செல்ல வேண்டிய இடங்களுக்கு தனியாக காரில்தான் செல்ல வேண்டும். இது சாத்தியப்படாத ஒன்று. ராட்சத விசிறியுடன் இருக்கும் ஹெலிகாப்டரை உங்கள் வீடு வரை கொண்டு செல்ல முடியாது.

அதற்கெல்லாம் விடிவுகாலமாக அமெரிக்க பல்கலைக் கழக வானூர்தி பொறியியல் மாணவர் ஒருவர் கார் மற்றும் விமானமாக பயன்படுத்தக்கூடிய `டூ இன் ஒன்' விமானக் காரை வடிவமைத்திருக்கிறார். ஏற்கனவே பறக்கும் கார், பைக் இவைகளை பற்றி முந்தைய கட்டுரைகளில் பார்த்திருந்தாலும் இது வித்தியாசமாக இயங்கக்கூடியது. பறக்கும் காராக இல்லாமல் பறக்கும்போது விமானமாகவும், சாலையில் செல்லும் போது காராகவும் மாறிக்கொள்ளும் அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்தது. அதைப்பற்றி பார்ப்போம்.



அமெரிக்காவிலுள்ள Massachusset Institute of Technology பல்கலைக் கழகத்தில் பயிலும் வானூர்தி பொறியியல் மாணவர் கார்ல் டைட்ரிச் என்பவர் சாலையிலும், வானிலும் பறக்கும் காரை வடிவமைத்துள்ளார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், கார் நிலைக்கு  மாறும்போது இதன் இறக்கைகளையும்,வால் பகுதியையும் தானாகவே மடித்து வைத்துக் கொள்ளும். மேலும் காருக்கு முன் உள்ள பம்பரை  விரித்துக் கொள்ளும். ஒரு பறவை பறந்து வந்து இறங்கி ஓடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதை போலத் தான் இருக்கும். மதுரையிலோ அல்லது திருச்சியிலோ இருக்கும் நீங்கள் சென்னை வரை பறந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கி சென்னை மாநகரின் உள்ளே காராகவே பயன்படுத்தி வலம் வரலாம். முக்கியமாக நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மழை, வெள்ளம் இவைகளினால் சாலை துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட செல்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கார் நிலையில்  விமானமாக மாறும்போது இறக்கைகளை விரிக்கிறது

இந்த விமானக் கார் இரண்டு இருக்கைகள் மட்டுமே கொண்டுள்ளது. தேவையில்லாத அளவிற்கு இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும் சிரமம் தவிர்க்கப்படுகிறது. 6 1/2 அடி உயரம் கொண்ட இந்தக் கார் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு சுமார் 9 கி.மீட்டர் செல்கிறது. எந்த எரிபொருள் நிலையத்திலும் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். கார் நிலையில் செல்லும்போது திடீரென்று அவசரமாகவோ அல்லது ட்ராபிக் அதிகம் இருந்தாலோ உடனே விமான நிலைக்கு பட்டனை திருகினால் போதும் உடனே இறக்கைகள் விரிக்கப்பட்டு, வால் பகுதி நீட்டப்பட்டு உடனே பறக்கும் நிலைக்குத் தயாராகிவிடுகிறது.


பறக்கும் வேகம் மணிக்கு 120 மைல் வேகத்தில் பறக்கின்றது. அதனுடைய முழுவதும் நிரப்பப்பட்ட எரிபொருளைக் கொண்டு 500 மைல்கள் வரை பறக்க முடியும். "ஒரு விமானத்தின் விமான கட்டுப்பாட்டு அறையில் அனைத்து கட்டுப்பாட்டு சாதனங்களும் இருக்கும். ஆகையால் இது விமானிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்றானதுதான்'' என்கிறார் கார்ல்.

நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ள விமான தளம் வரை சென்று எஞ்சிய இடங்களுக்கு கார் நிலையிலேயே செல்ல முடியும்.

இப்பொழுது ஆராய்ச்சிப் பணியில் இருக்கும் இது 2010ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம்.

எத்தனையோ புதுப்புது ரகக் கார்கள் வந்துவிட்டாலும், இதுமாதிரியான டூ இன் ஒன் விமானக் கார்கள் சாலையிலேயே சென்று அலுத்துப் போன வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான். ட்ராபிக், நேர விரயம் எல்லாம் தவிர்க்கப்படுகிறது. இனி விண்ணிலும் ஒரு ட்ராபிக் கண்ட்ரோல் நிலையம் நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு லோன் தருவது போல் இனி டூ இன் ஒன் விமானக் கார்களுக்கும் லோன் கிடைக்கலாம்.



(தொடரும்)
 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=6/10/2006&secid=76