|
விபத்து, இயற்கை பேரழிவு, தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும்
போர்க்காலங்களில் ஏராளமானவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும்
இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர். சிலர்
தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர். இப்படிபட்ட சூழ்நிலைகளில்
அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது.
சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம் கிடைப்பதில்லை. அப்படியே
கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. இதனாலும்
அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் ரத்த தானம்
உயிர்தானத்துக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது. ஆபத்து நேரங்களில்
ரத்தம் கிடைக்க அதிக சிக்கல்கள் இருப்பதால் மாற்று வழி ஒன்றை
கண்டுபிடித்தால் என்ன? என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளாக
தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவு
மனிதர்களை பிரம்மாவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது. இந்த விஞ்ஞான
புரட்சி பற்றி விரிவாக காணலாம்.
பரம்பரை, வம்சம் இவைகளெல்லாம் ரத்த பந்தத்துடன் சம்பந்தப்பட்டது.
இதனால் முன்னோர்களின் ஒரு சில குணாதிசயங்கள் தனது வம்சாவளியை
சேர்ந்தவர்களுக்கும் இருப்பதை நாம் கண் கூடாக காண்கிறோம்.
எடுத்துக்காட்டாக, தாத்தாவின் குணம் அப்படியே இருக்கிறது என்று
கூறுவோம். இப்படி மரபு வழி பண்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று
மனித ரத்தம். இது பல குணாதிசயங்களைக் கொண்டது. உடலுக்குத் தேவையான
முக்கிய பணிகள் அனைத்தும் ரத்த ஓட்டத்தின் மூலம் நடக்கின்றது. மனித
உடல் இயக்கத்தின் முதுகெலும்பு ரத்த ஓட்டம் என்றும் குறிப்பிடலாம்.
இதில் குறைபாடோ அல்லது தட்டுபாடோ ஏற்படும்போது மனித உடலில் பலவகை
நோய்கள் மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது.
ரத்தத்தை பார்த்தாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ரத்தம்
சிந்தியவர்களை பார்ப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் ரத்தம்
சிந்தியவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யூகித்து
கொள்ளுங்கள். இதனால் ஆபத்து காலங்களில் பலர் ரத்த தானம் அளிக்க
முன்வருவதில்லை. இதற்கு அவர்கள் கூறும் காணம் என்ன தெரியுமா?
தன்னுடைய உடலிலிருந்து குடம் குடமாக ரத்தத்தை எடுத்துவிடுவார்கள்
என்ற நினைப்பு அவர்களுக்கு வந்துவிடும். சிலர் ரத்த தானம் செய்ய
விரும்பினாலும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள்
அனுமதிக்கமாட்டார்கள். இதனால் ரத்த வங்கியின் சேவை உலகில் உன்னத
சேவையாக விளங்குகிறது.
ரத்ததானம் பெறும்போது ரத்தம் எந்த குறைபாடுகளும் இல்லாமல்
இருக்கின்றதா? அதாவது தொற்று வியாதிகள், எய்ட்ஸ், புற்றுநோய்,
மஞ்சள் காமாலை, மலேரியா, புளூ போன்ற நோய்கள் இல்லாமல் இருக்கிறதா
என்பதை அறிந்து கொண்ட பிறகுதான், அதை தானமளிப்பவரிடமிருந்து
பெறுவார்கள். எடுத்த ரத்தத்தை சில ரசாயன முறைகளுக்குட்படுத்தி
பதப்படுத்தப்பட்டு சில குறிப்பிட்ட வெப்பநிலைக்குக் கீழ்
குளிர்சாதன இயந்திரத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும். மேலும்
ரத்தம் பெறுபவர் ரத்தத்தை பெறும் முன் அவருக்கேற்ற பிரிவைச்
சார்ந்த ரத்தம்தானா என்பதையும் சோதித்து செலுத்த வேண்டும்.
சில நேரங்களில் சில குறிப்பிட்ட பிரிவு ரத்தம் அவசரத்திற்கு
கிடைப்பதில்லை. இதனால் விபத்திற்குள்ளானவர்கள், போரில் அடிபட்டு
ரத்தத்தை அதிகம் இழந்தவர்கள் தங்களுக்குரிய ரத்தம் கிடைக்காமல்
உயிரிழக்க நேரிடும். இப்பொழுது எவ்வளவோ முன்னேற்றங்கள்
வந்துவிட்டன.
மக்களிடையே ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வும் வந்துவிட்டது. இதனால்
அன்றாடம் ரத்ததான முகாம்கள் நடப்பதை பார்த்திருப்போம். ஆனால்
விஞ்ஞானிகள் ரத்தத்திற்காக ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்?
செயற்கையாகவே ரத்தத்தை உருவாக்கினால் என்ன? என்று ஆராய
ஆரம்பித்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் மனித உடலில் ரத்தம் எவ்வாறு சுழற்சி
செய்கிறது? என்பதை கண்டுபிடித்தபோது அனைவரும் ஆச்சரியமாக
பார்த்தார்கள். ஆனால் தற்போது இயற்கை ரத்தத்திற்கு பதிலாக செயற்கை
ரத்தம் என்னும் தந்திரத்தை கையாண்டுள்ளனர். என்ன இப்போது நீங்கள்
விஞ்ஞானிகளை ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்களா! முற்றிலும் உண்மை.
இந்த செயற்கை ரத்தத்தின் முக்கிய நன்மை தொற்று வியாதிகள், எய்ட்ஸ்
மற்றும் ரத்தம் மூலம் பரவும் எவ்வளவோ கிருமிகள் தடுக்கப்படுகிறது.
ரத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹீமாகுளோபினை காலம் கடந்த
ரத்தம், பசுவின் ரத்தம் மற்றும் தாவரங்களிலிருந்துகூட எடுக்க
முடியும். இதன் பிறகு செயற்கை ரத்தத்திற்கு இதனை பயன்படுத்தவும்
முடியும். பாதுகாக்கவும் முடியும். எஸ்ஸக்ஸ் பல்கலைக் கழகத்தின்
உயிரியல் பேராசிரியர் க்ரிஸ் கூப்பர் இந்த ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளார். இவருடைய தலைமையில் என்ற மையம் இந்த செயற்கை ரத்த
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ்,
ஆலந்து, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் அங்கேரி போன்ற நாடுகளிலிருந்தும்
ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பெர்ப்லூரோகார்பன்
என்றழைக்கப்படும் செயற்கை திரவ ரத்தத்தை தயாரிக்கும் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கை ரத்தத்தில் அதிக அளவு ஆக்சிஜனை
கலக்கக்கூடிய திறன் கொண்டது. மேலும் குறைந்த செலவில் இதனை
பெறமுடியும். மேலும் இதனை பாதுகாப்பது மிகவும் எளிது. ஆனால் இதை
இயக்குவதற்கு நோயாளிகள் ஆக்சிஜன் முகமூடி மூலம் 70 முதல் 100
சதவீதம் வரை சுவாசிக்க வேண்டும். அதன்பிறகு இது இயற்கை ரத்தம் போல
செயல்பட ஆரம்பித்துவிடும்.
மருத்துவமனைகளில் சோதனையின் போது இந்த தயாரிப்புகள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சில பேருக்கு ஃப்ளூ போன்றவைகளை
ஏற்படுத்தினாலும் இதனையும் களையக்கூடிய ஆராய்ச்சியில்
ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சில அமெரிக்க நிறுவனங்கள்
செயற்கை ரத்த தயாரிப்பில் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கின்றன.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ ரத்த ஆராய்ச்சிக் குழுவும்
மக்களிடையே செயற்கை ரத்தத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பில்
ஈடுபட்டுள்ளன. 'ஆரம்பத்தில் சமூக ரீதியாக மற்றும் விஞ்ஞான ரீதியாக
சில தடைகள் இருந்தாலும் இறுதியில் இந்த செயற்கை ரத்த திட்டம்
நிச்சயம் வெற்றிபெறும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்
பேராசிரியர் கூப்பர்.
செயற்கை ரத்தம் சமீபத்தில் பிரபல இசை கலைஞர் ஹேங்க் வில்லியம்
என்பவரின் 27 வயதான மகள் ஹில்லாரி வில்லியம் ஒரு கார் விபத்தில்
படுகாயம் அடைந்தார். அதிக ரத்தத்தை இழந்த இவரை அவசர மருத்துவக்
குழுவினர் 75 கி.மீட்டர் தொலைவிலுள்ள நகர மருத்துவமனைக்கு
எடுத்துச் செல்வதற்குள் இவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. இன்னும்
அதிகாரப்பூர்மாக அங்கீகரிக்கப்படாமல் அதே சமயத்தில் சோதனை
கட்டத்தில் இருந்த பாலிஹீம்; என்ற செயற்கை ரத்தத்தை மயக்க நிலையில்
இருந்த இவரது அனுமதியைக் கூட எதிர்பார்க்காமல் மருத்துவக்
குழுவினர் செலுத்தியதன் மூலம் இவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
மருத்துவக் குழுவில் உள்ள க்ளிண்டி பார்க்கர் என்பவர் கூறுகையில்,
'இந்த செயற்கை ரத்தத்தை மட்டும் ஹிலாரி வில்லியமிற்கு
செலுத்தாவிடில் இவர் இறந்திருக்க நேரிட்டிருக்கும்'' என்றார்.
ஹில்லாரி வில்லியம் அமெரிக்க பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,
'இது ஒரு பெரிய விஷயம் தான். பாலிஹீம் என்னுடைய உயிரை
காப்பாற்றியுள்ளது. இதற்காக இந்த தயாரிப்பிற்கும், கடவுளுக்கும்
எனது நன்றியை தெரிவிக்கின்றேன்'' என்றார்.
பிரிட்டிஷ் மருத்துவ கூட்டமைப்பின் பெண் செய்தி தொடர்பாளர் ஒருவர்
கூறுகையில், 'இம்மாதிரியான அவரசமான தருணங்களில் நோயாளிகளின்
அனுமதியின்றிக்கூட மருத்துவர்கள் இம்மாதிரியான செயற்கை ரத்தத்தை
பயன்படுத்தலாம். இது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்' என்கிறார்.
இயற்கையை வெல்ல முடியுமா? என்று சர்ச்சை இருந்தாலும், இயற்கைக்கு
மாற்றாக செயற்கையான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். இயற்கைக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது
அதற்கு என்ன மாற்றுவழி என்று ஆராய்வது நியாயமான ஒன்றுதான். இப்போது
செயற்கை ரத்தம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னும் நாளடைவில் செயற்கை
ரத்தம் மருந்துக் கடைகளிலும் கிடைக்கக்கூடிய காலம் வரலாம்.
எம்ஜேஎம் இக்பால்
|