விண்வெளி
ஆராய்ச்சியில் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை விஞ்ஞானிகள்
நிகழ்த்தி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள
'நாசா' விண்வெளி நிலையத்தைச்
சேர்ந்த விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி
இருக்கிறார்கள். இவர்களின் புதிய கண்டுபிடிப்பு தான் நவீன
விண்வெளி உடை. இது பற்றி இந்த வாரம் காண்போம்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட 16 நாடுகள் இணைந்து
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில்
அமைத்துள்ளது. விண்வெளியில் மிதக்கும் இந்த ஆராய்ச்சி
நிலையத்தில் வீரர்களும், ஆராய்ச்சியாளர்களும் தங்கி
இருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்த
விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பும் வகையில்
விண்வெளி ஓடங்களை 'நாசா' உருவாக்கி இருக்கிறது.
கொலம்பியா, டிஸ்கவரி, அட்லாண்டிஸ், எண்டியுவர் ஆகிய
விண்வெளி ஓடங்கள் சுழற்சி முறையில் விண்வெளிக்கு சென்று
திரும்பி வந்தன. இந்த நிலையில் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்வெளி விபத்தில்
கொலம்பியா ஓடம் சிக்கியது. பூமிக்கு திரும்பும் வழியில்
நடுவானில் அது வெடித்து சிதறியது. இந்த ஓடத்தில் பயணம்
செய்த அமெரிக்கா வாழ் இந்திய பெண் கல்பனா சாவ்லா உள்பட
வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பிறகு
சமீபத்தில் கடந்த மாதம் டிஸ்கவரி ஓடத்தை விண்வெளிக்கு
அனுப்பினார்கள். இதில் பயணம் செய்த வீரர்கள் விண்வெளியில்
நடந்து சென்று பல்வேறு பழுது பார்க்கும் பணியை செய்தனர்.
இது போன்ற பழுது பார்க்கும் பணிகளை விண்வெளியில் செய்வது
மிகவும் ஆபத்து நிறைந்தது ஆகும். சுவாசிப்பதற்கு ஆக்சிஜன்
இல்லாத நிலையில் அதிக அழுத்தம் இருக்கும் சூழ்நிலையில்,
புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத நிலையில் விண்வெளியில்
மிதந்த படி பழுது பார்க்கும் பணிகளை வீரர்கள் செய்ய
வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணிக்கு அவர்கள்
அணியும் கவச உடை பாதுகாப்பு நிறைந்ததாக இருப்பது
அவசியம்.
விண்வெளியில் உள்ள அழுத்தம் தாங்க முடியாமல் கவச உடையில்
பாதிப்பு எதுவும் ஏற்பட்டால் அது விண்வெளி வீரர்களின்
உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே பாதுகாப்பு மிகுந்த கவச
உடைகளை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாசா விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஸ்பேஸ் சூட் எனப்படும்
விண்வெளி வீரர்களுக்கான உடைகளை தயாரித்துக்கொடுக்கும்
பணிகளை ஒரு தனி அமைப்பு கவனித்து வருகிறது. இந்த அமைப்பு
சார்பில் அதி நவீன விண்வெளி உடை உருவாக்கப்பட்டுள்ளது.
2018 ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர்கள் நிலவுக்கு
செல்லும்போது இந்த நவீன உடைகளை அணிந்து செல்வார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பு பணிகள் முடிந்து
தற்போது சோதனை நிலையில் இந்த விண்வெளி உடை உள்ளது.
இந்த உடையின் சிறப்புகள் வருமாறு:-
நவீன
விண்வெளி உடையில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அது தானாகவே
அந்த பழுதுகளை சரிசெய்து கொள்ளும்.
விண்வெளியில் உள்ள அழுத்தம் காரணமாக வீரர்கள் அணிந்துள்ள
உடையில் சிறு சிறு துளைகள் மற்றும் கிழிசல்கள் ஏற்படும்
வாய்ப்பு அதிகம் உள்ளது. இது போன்ற நிலை உருவானால் அதிக
அழுத்தம் ஏற்பட்டு வீரர்கள் உயிரிழக்கும் ஆபத்து அதிகம்
உள்ளது. எனவே இது போன்ற பிரச்சினைகள் வரலாமல் தடுக்க பல
அடுக்குகள் கொண்டதாக விண்வெளி வீரர்களின் உடைகள்
உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக விண்வெளி உடையின் எடை
அதிகரிக்கிறது. மேலும் இந்த உடையை அணிந்துள்ள வீரர்களின்
உடல் வெப்பநிலையை சம நிலையில் வைத்துக்கொள்ளவும் இந்த உடை
உதவுகிறது. இதனால் தற்போதுள்ள விண்வெளி உடை சிக்கல்
நிறைந்ததாக உள்ளது. எனவே இதில் உள்ள குறைகளை போக்கும்
வகையில் நவீன விண்வெளி உடை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நவீன விண்வெளி உடையில் சிறிய துளை அல்லது கிழிசல்
ஏற்பட்டால் அது உடனே தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும். நவீன
விண்வெளி உடை பல அடுக்குகள் கொண்டதாக
தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு
வகையான துணிகள் மற்றும் செயற்கை இழைகள் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக 2
பாலியுரித்தீன் துணிகளுக்கு இடையே ஜெல் போன்ற திரவம்
தடவப்பட்ட அடுக்கு ஒன்றும் உள்ளது. விண்வெளி உடையில் சிறிய
துளை அல்லது கிழிசல் எதுவும் ஏற்பட்டால் ஜெல் போன்ற திரவம்
துளை அல்லது கிழிசல் உள்ள பகுதிக்கு நகர்ந்து சென்று அதை
சரி செய்து விடும்.
- ஒரு வேளை பெரிய அளவில் ஓட்டை அல்லது கிழிசல்
ஏற்பட்டால் உடனே அந்த உடையில் உள்ள
'சென்சார்' கருவிகள் விண்வெளி வீரருக்கு
எச்சரிக்கை அனுப்பும். மேலும் அந்த விண்வெளி வீரர் உடை
பழுது அடைந்துள்ள தகவலை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும்
தெரிவித்து விடும்.
- நவீன விண்வெளி உடையில் பாலிமர் அல்லது சிலிக்கான்
அடிப்படையிலான சிறிய பேட்டரியும் இணைக்கப்பட்டு
இருக்கும். இந்த பேட்டரிகள் மூலம் விண்வெளி உடையில்
உள்ள சென்சார் கருவிகள் மற்றும் பிற முக்கிய தகவல்
தொடர்பு கருவிகள் இயங்கும்.
- விண்வெளியில் கண்ணுக்குத் தெரியாத பல
நுண்ணுயிர்கள் மற்றும் கிருமிகள் உள்ளன. விண்வெளியில்
நட(மித)ந்து சென்று ஆய்வுகள் நடத்தும் போது இந்த
நுண்ணுயிர்கள் வீரர்களின் உடைகளில் ஒட்டிக்கொண்டு
பூமிக்கு வரும் ஆபத்து உள்ளது. ஆனால் இந்த விண்வெளி
உடையில் கண்ணுக்கு தெரியாத கிருமிகளை??அழிக்கும்
வகையில் அல்லது அந்த கிருமிகள் உடையில் ஒட்டிக்கொள்ளாத
வகையில் ரசாயன கலவை தடவப்பட்டுள்ளது. அதாவது சில்வர்
உலோகம் தடவப்பட்ட நிலையில் புதிய விண்வெளி உடை உள்ளது.
இதில் இருந்து வெளிப்படும் சில்வர் அணுக்கள்
நுண்ணுயிர்களை அழிக்கும் திறன் கொண்டவை.
- விண்வெளியில் கதிர் வீச்சு ஆபத்தும் அதிகமாக
உள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் பாலிஎத்திலீன்
மூலம் உருவாக்கப்பட்ட அடுக்கும் இந்த விண்வெளி உடையின்
வெளிப்புறத்தில் உள்ளது. இதன் மூலம் கதிர் வீச்சு
தாக்குதல் எதுவும் பாதிப்பை ஏற்படுத்தாக வغயில் இந்த
நவீன உடை அமைந்துள்ளது.
- நவீன விண்வெளி உடை தற்போதுள்ள விண்வெளி உடையை விட
எடை குறைந்ததாக இருக்கும். அதே நேரத்தில் ஆபத்து
காலத்தில் பல வகையில் பயன் தரும்வகையில் மற்றும் தகவல்
தொடர்பு வசதிக்கு ஏற்ற வகையில் அமைந்து இருக்கும்.

(அதிசயம் தொடரும்)
எம்.ஜே.எம்.இக்பால்
|