|
இன்பமும் துன்பமும் நிறைந்தது மனித வாழ்க்கை. எல்லா
நேரத்திலும் வாழ்க்கை சுகமாக இருப்பதில்லை. அதில் நடக்கும்
நிகழ்வுகளும் இனிப்பாக இருப்பதில்லை.
மகிழ்ச்சி, ஆச்சரியம், அதிசயம், துக்கம், ஏமாற்றம், வலி,
துரோகம், பழிவாங்கப்படுதல், அவப்பெயர்... என்று பல
நிகழ்வுகள் கலந்தது மனித வாழ்க்கை. எந்த மனிதனும் சோகம்,
துக்கம் போன்றவற்றை விரும்புவதில்லை. என்ன விலை
கொடுத்தாவது மகிழ்ச்சியை வாங்க வேண்டும் என்ற மனம் கொண்ட
மனிதர்கள் தான் இந்த உலகில் அதிகம் உள்ளனர். இந்த
விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் இன்றைய
விஞ்ஞானிகளும் ஆர்வம் காட்டினார்கள். அதன் விளைவு தான்
சோகம் இன்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில்
மனிதனை மாற்றும் 'மருந்து'' கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி.
ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் எது தேவை என்பது
விடை காண முடியாத கேள்வி. இந்த கேள்விக்கு பதில்
ஒவ்வொருவரிடம் இருந்தும் விதவிதமாக வரும். அவரவர் தேவை
மற்றும் பிரச்சனைகளுக்கு ஏற்ப சந்தோஷமாக வாழ எது தேவை
என்பதற்கு பதில் கிடைக்கும்.
பணம் இல்லாதவன் பணம் இருந்தால் போதும் மகிழ்ச்சி தானாக
கிடைக்கும் என்று நினைப்பான். ஆனால் பணம் இருப்பவன் நிலையோ
வேறு விதமாக இருக்கும். கோடி கோடியாய் செல்வம் இருந்தும்
நிம்மதி இல்லையே, கொஞ்சி மகிழ குழந்தை இல்லையே, நல்ல உடல்
ஆரோக்கியம் இல்லையே என்ற ஏக்கங்கள் பல விதமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது மனிதர்களை பாதிக்கும்
நோய்களில் ஒன்றாக மனநோய் உள்ளது. மன அழுத்தம், ஏக்கம்
போன்றவற்றின் வெளிப்பாடாக மனநோய் அமைகிறது. சமீப காலமாக
இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் நோயாகவும் மனநோய்
உள்ளது. கல்வி-வேலைவாய்ப்பு போன்றவற்றில் உள்ள சவால்கள்,
வேலை செய்யும் இடத்தில் உள்ள நெருக்கடிகள், குடும்ப
பிரச்சினைகள் போன்றவை காரணமாக மனநோய் பாதிப்பில்
சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டே போகிறது. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி திருமணம்
ஆன ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் மன நோய் பாதிப்புகள் அதிக
அளவில் ஏற்படுகிறது. இதற்கு சமூக மற்றும் பொருளாதார
காரணங்கள் முக்கியமாக அமைகிறது. இது தவிர பிரச்சனைகளை
சந்திக்கும் மன உறுதி இல்லாதது, தவறான பழக்க வழக்கங்கள்
போன்றவையும் காரணமாக அமைகிறது.
சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் போதும்
அழ ஆரம்பித்து விடும். அந்த குழந்தை போன்ற மனநிலையில்
இருக்கும் இளைய தலைமுறையினரும் இருக்கிறார்கள். மருத்துவ
ரீதியாக இந்த மன நோய் குறித்தும் அதற்கு காரணமான ஜீன் எது
என்றும் ஆய்வுகள் நடைபெற்றது. இந்த ஆய்வில் பிரான்சு
நாட்டில் உள்ள நைஸ் பல்கலைக்கழகம் ஈடுபட்டது.
இதன் முதல் கட்டமாக, மன நோய்க்கு காரணமாக இருக்கும்
அம்சங்கள் எவை என்பது குறித்து ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது சிரோடோனின் என்ற திரவம்
மூளையில் சுரப்பதால் தான் மனநோய் பாதிப்பு ஏற்படுகிறது
என்று தெரியவந்தது. ஒரு மனிதனின் மகிழ்ச்சி, துக்கம் போன்ற
மனநிலை, தூக்கம், பாலியல் ஆர்வம் போன்றவற்றை நிர்ணயிக்கும்
அம்சமாக சிரோடோனின் இருக்கிறது. இந்த சிரோடோனின் சுரக்க
காரணமாக இருப்பது டிரெக்-1 என்ற ஜீன் ஆகும்.
இதன் அடிப்படையில் மரபணு பற்றி ஆராயும் விஞ்ஞானிகளும் மன
நோய் மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடத்தினார்கள்.
மனித உடலில் உள்ள ஜீன்கள் குறித்த வரைபடம் ஏற்கனவே
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மனித ஜீன் வரைபடமும் இந்த
ஆய்வுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
இந்த ஆய்வின் போது முதல் கட்டமாக சோதனைச்சாலையில் எலி
ஒன்றை உருவாக்கினார்கள். இந்த எலியின் உடலில் மனநோய்க்கு
காரணமான டிரெக்-1 ஜீன் இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.
அதாவது சோதனைச்சாலையில் வைத்து எலியின் கருமுட்டையில் உள்ள
டிரெக்-1 ஜீன் அகற்றப்பட்டது. பிரச்சினைக்குரிய அந்த ஜீன்
இல்லாமல் எலி வளர்க்கப்பட்டது. இந்த முறையில்
உருவாக்கப்பட்ட எலிக்கு 'நாக்அவுட்' எலி என்று பெயர்
சூட்டினார்கள்.
நாக்அவுட் எலியை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு
சோதனைக்கு உட்படுத்தினார்கள். எலிகளுக்கு மன அழுத்தம்
ஏற்படுத்தும் நிகழ்வுகள் செய்யப்பட்டது. பின்னர் அந்த
எலிகள் மனநோயால் பாதிக்கப்படுகின்றனவா என்பதை
கண்காணித்தனர். இதற்காக உரிய சோதனைகளான நடத்தை சோதனை,
எலக்ட்ரோ சைக்காலஜிக்கல் ஆய்வு, பயோ கெமிக்கல் ஆய்வு
போன்றவை செய்து பார்க்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இது
குறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் டெபோனல்
கூறும்போது...
'நாக்அவுட் எலிகளுக்கு பல்வேறு மனஅழுத்தம் தரும்
சூழ்நிலைகளை உருவாக்கினோம். ஆனால் அந்த எலிகள் அது
தொடர்பான பாதிப்புகள் எதுவும் இன்றி வழக்கம் போல இயங்கின.
இன்னும் சொல்வது என்றால் மனநோய் பாதித்தவர்களுக்கு
சிகிச்சை அளித்த பிறகு எத்தனை புத்துணர்ச்சியுடன்
இருப்பார்களோ அத்தனை வேகத்துடனும் தெளிவுடனும் அந்த
நாக்அவுட் எலிகள் இருந்தன. இது எங்களுக்கு மிகுந்த
ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் டிரெக்-1
ஜீனுக்கும் மன அழுத்த நோய்க்கும் உள்ள தொடர்பை அறிய
முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து மனநோய்க்கு புதிய மருந்தை உருவாக்க
முடியும். அதாவது 'டிரெக்-1' ஜீனை அமைதிப்படுத்தும்
வகையில் மருந்து தயாரித்தால் போதும்.
இவ்வாறு டாக்டர் டெபோனல் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது,
'விலங்குகள் மற்றும் பறவைகளை
பயன்படுத்தி இந்த ஆய்வுகள் இன்னும் விரிவாக நடத்தப்பட
வேண்டும். அதன் பின்னர் மனிதர்களை பயன்படுத்தி ஆய்வுகள்
நடத்த வேண்டும். இந்த ஆய்வின் போது பின்விளைவுகள்
குறித்தும் ஆராய்ந்து அறிதல் அவசியம். பொதுவாக
சோதனைச்சாலையில் விலங்குகளுக்கு உள்ள சூழ்நிலைகள்
ஒருவிதமானது. அதே நேரத்தில் மனிதர்களுக்கு அன்றாட
வாழ்க்கையில் உள்ள சவால்களின் இயல்புகள் வேறுவிதமானது.
எனவே இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தின் அடிப்படையில்
ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும் மரபணு மாற்றத்தின் மூலம் மனநோய்க்கு சிகிச்சை
அளிக்க முடியும் என்பது மருத்துவ ஆய்வின் புதிய மைல்கல்லாக
அமையும். இந்த ஆய்வின் அடிப்படையில் ஆபத்தான பிற
நோய்களுக்கும் சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும்',
என்றார்.
மேலும் பார்க்கின்சன் எனப்படும் ஞாபக மறதி மற்றும் நரம்பு
தளர்ச்சி நோய், மூளை பக்கவாதம் மற்றும் பிற வகையான மூளை
நோய்கள் போன்றவற்றுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க மரபணு
மாற்றத்தை பயன்படுத்தலாம் என்ற கருத்தும் இப்போது
எழுந்துள்ளது. இது தொடர்ச்சியாக இனிவரும் காலத்தில்
மனஅழுத்த நோய்களுக்கு எளிய சிகிச்சை முறைகள் வந்து விடும்.
இந்த நோய் பாதித்தவர்கள் ஆயுசு முழுக்க மருந்து
மாத்திரைகளை உட்கொள்ளும் நிலை வருங்காலத்தில் இருக்காது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில்
5 முதல் 8 சதவீதம் பேர் வரை மனநோய் பாதித்தவர்கள் என
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இந்த நோய் பாதிப்பு
ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. எனவே இந்தநோய்க்கு உரிய
மரபணு மாற்று சிகிச்சை முறை விரைவில் கொண்டுவரப்பட
வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் முயற்சியாக உள்ளது.
(அதிசயம் தொடரும்)
எம்.ஜே.எம்.இக்பால்
|