அறிவியல் அதிசயம் - MJM Iqbal

30-09-2006

Refer to Your Friends

சந்திர மண்டலத்தில் தகவல் சேகரிப்பு மையம்


இந்த புவியில் கணக்கிலடங்கா ஜீவராசிகள் வசித்து வருகின்றன. இந்த பிரபஞ்சத்தை நோக்கினால், எத்தனை எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன என்பதை இதுவரை அறிய முடியவில்லை.

அது ஏன்? பிரபஞ்சத்தைப் பற்றியே இன்னும் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. விஞ்ஞானம் இன்றளவும் முயன்று கொண்டு தான் உள்ளது.

மனித இனத்தின் விஞ்ஞான வளர்ச்சி என்பது முற்று பெறாமல் தினமும் ஏதேனும் ஒரு புதுச்செய்தி வெளிவருகிறது. இந்த நிலையில் விண்ணைப் பற்றிய ஆராய்ச்சியும் புதிய புதிய செய்திகளோடு வெளிவரத்தான் செய்கிறது.

1969 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் நாள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஜ் ஆல்ட்ரின் ஆகியோர் முதன் முதலில் நிலவில் கால் பதித்து சாதித்ததை தொடர்ந்து இன்று வரையிலும் நிலவைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் இன்னும் முழுமையான அளவிற்கு எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாத சூழ்நிலைதான் இருக்கின்றது.

ஆனால் எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மனிதன் தன்னை தற்காத்துக்கொள்ள நாடினாலும், இயற்கையானது தனது கொடூரத்தை அவ்வப்போது நமக்கு காட்டிவிட்டுத்தான் செல்கிறது. புயல், மழை, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் என பல்வேறு பெயர்களில் வெளிப்பட்டாலும், அழிவு என்னவோ நமக்குத்தான்.

இயற்கை அழிவுகள் ஒருபுறம் இருக்க, செயற்கை அழித்தல்களும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. நாடுகளுக்கிடையே சண்டைகள், இனச்சண்டைகள், தீவிரவாதம் என்கிற பெயரில் நடைபெறும் அழிவுகள், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம். உலகம் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே போனால் என்ன செய்வது. ஒரு கால கட்டத்தில் எல்லாமே அழிந்து போகக்கூடிய நிலைக்கு வந்தால், பிற்காலங்களில் தோன்றக்கூடிய சமூகம் நமது வரலாறுகளை எல்லாம் அறிந்து கொள்ள முடியாமல் அல்லவா போய்விடும்.

உதாரணமாக, டைனோசர் என்கிற ராட்சத மிருகம் இருந்ததைப் பற்றி ஆராய்சியாளர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை முற்றிலுமாக உண்மை என்று நம்பிவிட முடியாது. ஏனெனில் இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம், என்று ஒரு ஆய்வின் அடிப்படையில் தான் கூறுகிறார்களேயொழிய, அப்படித்தான் இருந்தது, இப்படித்தான் இருந்தது என்று திடமாக கூறிவிட முடியாது. ஏனெனில் அதனைப் முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சரியான தகவல்கள் சேகரித்து வைக்கப்படவில்லை. இப்படித்தான் டைனோசர் இருந்தது, அது இந்த உருவத்தை கொண்டிருந்தது, அதனுடைய வாழ்க்கை முறை இப்படி இருந்தது என்றெல்லாம் யாரேனும் கண்டதுண்டா? இல்லை. நம்பகத்தன்மைக் கொண்ட ஆய்வின் அடிப்படையில், நமக்கு கிடைத்த புதை படிவங்கள் மற்றும் எலும்புக்கூடுகளை வைத்து தான் இவைகளைப்பற்றி நாம் அறிந்துகொள்கிறோம்.

எகிப்திய மம்மிகளை எடுத்துக்கொள்வோம், அந்த மம்மிகளை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் உருவாக்கினார்கள் என்று நம்மால் கூற முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏனெனில் அவர்கள் எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த மம்மிகளை உருவாக்கினார்கள் என்பது இன்றளவும் நமக்கு கேள்விக்குறிதான். நாம் இன்று ஆயிரம் காரணங்களை சொல்லலாம். இப்படி கட்டியிருக்கலாம், அப்படி கட்டியிருக்கலாம் என்று. ஆனால் உண்மையாக பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் என்ன?

பண்டைய கால தொழில் நுட்பங்கள், வரலாறுகள் போன்றவைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் அல்லவா? ஆனால் அதனை அவ்வளவு எளிதில் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறதா? கஷ்டமாகத்தானே இருக்கின்றது. இது போன்ற கஷ்டங்களை பிற்காலங்களில் வரக்கூடிய சந்ததிகள் சந்திக்கக்கூடாது என்கிற காரணத்திற்காக ஒருவர் குரல் கொடுத்துக்கொண்டுள்ளார்.


அவர்தான் அமெரிக்காவைச்சேர்ந்த வில்லியம் பரோஸ். ஏ.ஆர்.சி. என்கிற அமைப்பைச் சேர்ந்த வில்லியம் பரோஸ் விமான போக்குவரத்தின் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றியவர். இவர் எழுதிய ஹடீப் பிளாக்' என்கிற புத்தகம் மிகவும் பிரபலமானது. உலகம் முழுவதையும் கண்காணிக்க உளவு பார்க்கக்கூடிய செயற்கைகோளை அமெரிக்கா வைத்திருக்கிறது என்பதை பற்றியும் இவர் எழுதியுள்ளார்.

பண்டைய கால தொழில் நுட்பங்கள், வரலாற்று தகவல்கள் போன்றவை நமக்கு முழுவதுமாக கிடைக்காமல் போனது போல், பிற்காலங்களில் வரக்கூடிய சந்ததிகளுக்கு நம்மைப்பற்றிய தகவல்கள், தொழில் நுட்பங்கள், வரலாறுகள் கிடைக்காமல் போகக்கூடாது. அதற்கான முன்னேற்பாடுகளை இன்றைய விஞ்ஞான உலகம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில்;

இந்த உலகமானது கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. புயல், வெள்ளம், மழை, சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் இதற்கான முழு காரணிகளாக விளங்குகின்றன.

உலக அழிவிற்கு இயற்கை காரணிகள் ஒரு புறம் இருக்க, பல நாடுகள் தங்களிடம் உள்ள அணு சக்தியை அழிவுப்பாதையில் பயன்படுத்துவதில் குறியாக உள்ளன. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு ஏற்படுத்திய கோரத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.


இனிவரும் ஆண்டுகளில் போர் மூண்டால், அது அணு யுத்தமாகத்தான் இருக்கும். அந்த யுத்தத்தில் பல பெரிய அழிவுகள் ஏற்படும். இத்தகைய அழிவுகளிலிருந்து நம்முடைய தொழில் நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சிகள், வரலாற்று சுவடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடுமையான வெள்ளம் ஏற்பட்ட பொழுது 'நோவா" எப்படி தனக்கும் தன் கூட்டத்தார்களுக்கும் தேவையான அனைத்து பொருள்களையும் கப்பலில் சேகரித்துக் கொண்டாரோ, அதேபோல் நாமும் தகவல்களை, முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். இவைகள் நமக்கு 'விதை நெல"களாகும். இந்த விதை நெல்களிலிருந்து தேவையான விளைச்சல்களை பின் வரும் சந்ததிகள் அறுவடை செய்துகொள்ளும்.

இவற்றை எல்லாம் சேகரித்து வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடம் பூமியில் இருக்கக்கூடாது. ஏனெனில் பூமி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் பூமிக்கு மிக அருகில் இருக்கும் பூமியின் துணை கோளான, சந்திரனில் சேகரித்து வைக்கலாம். இதற்காக ஒரு தகவல் தொழில் நுட்ப சேகரிப்பு மையம் ஒன்றினை சந்திரனில் ஏற்படுத்தி அங்கே அனைத்து தகவல்கள், ஆவணங்கள் போன்றவைகளை சேகரித்து வைக்கலாம்.

இது சாத்தியமா? சாத்தியமே என்கிறார் வில்லியம் பரோஸ். சந்திரன்தான் பூமியிலிருந்து 2ஷி லட்சம் மைல் தொலைவில் உள்ளது. தற்பொழுது சந்திரனுக்கு செல்ல குறைந்த பட்சம் நான்கு நாட்கள் ஆகின்றது. வரும் காலத்தில் ஒரே நாளில் சந்திரனை அடையக்கூடிய ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த ராக்கெட்கள் மூலமாக இலகுவாக சந்திரனை அடைய முடியும். சந்திரனில், பகல் இரவு என்பது பூமியில் இருப்பது போல் இருப்பதில்லை. காரணம் சந்திரன் பூமியையும் சுற்றி வருவதினால், அதற்கு முழுமையாக சூரிய ஒளி தினமும் கிடைப்பதில்லை. பவுர்ணமி அன்று மட்டும் தான் முழுமையான சூரிய ஒளி சந்திரனின் மீது படுகிறது.


ஆகையினால், சோலார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் அதனை சேகரித்து சூரிய ஒளி இல்லாத காலங்களில் பயன்படுத்திக்கொள்ள இயலும். மேலும் அங்கு ஈர்ப்பு சக்தி குறைவாக இருப்பதினால் அதற்கேற்றவாறு அங்கு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.

இதற்கான செலவு மிகவும் அதிகமாகும். இந்த செலவு எவ்வளவு என்றும் கூற முடியாது. உலக நாடுகள் ஒன்றிணைந்தால் இது சாத்தியமாகும். ஆயுத தயாரிப்பிலும், ராணுவ பலத்தை வலுப்படுத்தவும், செலவிடும் தொகையினை குறைத்துக்கொண்டாலே இது சாத்தியமாகும்.

உதாரணமாக அமெரிக்காவின் உபரி பட்ஜெட் ஆனது ஈராக்கின் மீது போர் தொடுத்து ஏற்பட்ட இழப்பின் காரணமாக பற்றாக்குறை பட்ஜெட்டாக மாறிவிட்டது. இது போன்ற செயற்கை அழிப்புகளை தவிர்த்துக் கொண்டாலே போதும், சந்திரனில் தகவல் சேகரிப்பு மையத்தை நிறுவி விடலாம். இந்த ஆராய்ச்சியானது, மற்ற ஆராய்ச்சிகளுடன் அதாவது எயிட்ஸ், ஸ்டெம் செல் போன்ற ஆராய்ச்சிகளை எவ்வாறு மேற்கொண்டு வருகிறோமோ அதேபோல் மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக துவங்கினாலே போதும். நாம் முழுமையான வெற்றியினை பெற்று சக்தி வாய்ந்த தகவல் தொழில் நுட்ப மையத்தை சந்திரனில் அமைத்துவிட முடியும், என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வில்லியம் பரோஸ்.

தொடரும்

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=9/16/2006&secid=76