அறிவியல் அதிசயம் - MJM Iqbal

11-11-2006

Refer to Your Friends

பொய் சொன்னா தண்டனை உறுதி


'ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்'' என்பார்கள். ஆனால் ஒரு பொய் சொன்னாலே கண்டுபிடித்து விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆம்! பொய் சொல்லி குற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்க புதிய கருவி ரெடியாகி விட்டது. பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளுபவர்களின் முகத்தை இந்த அதிநவீன கருவி காட்டிக் கொடுத்து விடும். இந்த கருவியைப் பற்றிய அறிவியல் தகவல்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கருவியின் துணை கொண்டு குற்றவாளிகளின் வாக்கு மூலத்தில் பொய் எது? உண்மை எது? என்று கண்டறிய முடியும். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஒரு நிறுவனம் இந்த புதிய வகை கருவியைக் கண்டுபிடித்துள்ளது.

இதுவரை உபயோகப்படுத்தி வருகிற போலிகிராப் (Polygraph)  கருவியில் உடலிலுள்ள சில மாற்றங்களின் மூலம் பொய் சொல்வதை கண்டறிய முடிந்தது. ஏனென்றால் பொய் சொல்வதன் மூலம் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை கருவி ஒரு இ.சி.ஜி மெஷினைப் போல அறிக்கை கொடுக்கிறது. இது பழைய முறை. ஆனால் இப்போதுள்ள நவீன முறையில் பொய் சொல்வதை கண்டறியும் கருவி மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஸ்கேன் செய்கிறது. இதனை திரையில் கண்டறிய முடியும். அதாவது பொய் சொல்பவரின் மூளையில் சில பாகங்கள் மட்டும் அவர் அளிக்கும் தகவல் உண்மையா? பொய்யா? என்பதைக் காட்டி கொடுத்துவிடும். எப்.எம்.ஆர்.ஐ. (FMRI & Functional Magnetic Resonance Imaging) என்றழைக்கப்படும் இந்தக் கருவி மூளையில் எந்தப் பகுதி கடினமாக செயல்படுகிறது? எந்தப் பகுதி அதிக ஆக்ஸிஜனை செலவழிக்கின்றது என்பதைக் கண்டறிவதன் மூலம் பொய்யை அறிய முடிகிறது. இக்கருவி பொருத்தப்பட்டவருடன் பேசுவதன் மூலம் அல்லது வேறு செய்கைகள் மூலம் மூளையின் பல்வேறுப் பகுதிகள் ஸ்கேனில் ஒளிர ஆரம்பித்துவிடுகிறது.


பழைய போலிகிராப் முறையில் ரத்தக் கொதிப்பு, இதய துடிப்பு, சுவாசம் மற்றும் வியர்த்தல் முறையில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்படுகிறது. இது ஒரு இ.சி.ஜி போலவே வரைபடங்களுடன் கூடிய அறிக்கையை அளிக்கின்றது. இதன் மூலம் பொய் சொல்வதை ஆராய முடிகிறது.

பென்சில்வேனியா மற்றும் தெற்கு கரோலினாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இக்கருவியின் மூலம் பொய் சொல்வதை கண்டறிய முடியுமா? என்கிற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். முடிவாக பொய்யை மறைக்கும் ஒருவருடைய மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகள் இயக்கம் (Active) பெறுவதைக் கண்டறிந்தனர்.

"இந்த எப்.எம்.ஆர்.ஐ. (FMRI) கருவி சில நரம்பியல் சம்பந்தப்பட்ட கம்ப்ïட்டர் சாப்ட்வேர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்ப்ட்ட பயிற்சிகளைக் கொண்டு இதனை செயல்படுத்த முடிகிறது'' என்கிறார் இக்கருவியை தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனரும் ஆராய்ச்சியாளருமான ஜோ ஹுஸிங்கா (Joe Huizenga).

இவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இக்கருவியின் மூலம் 93 சதவீதம் வரை பொய்யை துல்லியமாக கண்டறியும்படி வடிவமைத்துள்ளோம். இன்னும் 99 சதவீத துல்லிய பலனைக் கொடுக்கும் அளவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்'' என்கிறார்.


ஒரு காலியான உருளையில் (Cylinder) சோதனைக்குட்படுத்தப்பட்டவரை இந்த (FMRI)  ஸ்கேன் கருவியில் வைத்து காதில் கருவிகள் பொருத்தப்பட்டு அவரிடம் சில கேள்விகள் "ஆம்'' அல்லது 'இல்லை" என்ற பதிலை சொல்லும் படி கேட்டோம். "ஆம்'' "இல்லை'' என்ற பதிலை அவர் வாயால் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதற்காகவே சிறப்பு தொழில்நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பட்டன்களை அழுத்தினால் போதும்.

இதன் மூலம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை திரையில் கண்டறியலாம். தற்பொழுது மருத்துவ மனைகளிலிருந்து மட்டுமே வாடகைக்கு பெறப்படுகிறது இந்தக் கருவி. படிப்படியாக உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும் என்கிறார் ஜோ.

இதைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறிய போது, "இந்தக் கருவியில் சோதனையை மேற்கொள்ள பெரிய வல்லுனர்கள் தேவையில்லை. யாரும் செயல்படுத்தும் வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட மூளையின் படங்கள் எங்களுக்கு விவரங்களாக (Data)  இணைய தளத்தின் மூலம் வந்துவிடும். இந்த விவரங்களை வைத்து நாங்கள் ஆராய்வோம் (Analysis). இச்சோதனையை நடத்துவதற்காக 50 பேர் வரை காத்திருக்கின்றனர். இவர்கள் எங்கள் நிறுவனத்தின் இந் நூதனக் கருவியைப் பற்றி கேள்விப்பட்டு எங்களை நேரடியாக அணுகினர். இவர்களில் பெரும்பாலானோர் நீதிமன்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களும், வழக்கறிஞர்களும் ஆவார்கள்.'' என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

இனி பொய் சொல்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். ஏமாற்று உலகத்தில் இதன் தேவை இனி அதிகம் இருக்கும் என்று சொல்லலாம். குற்ற வழக்குகளுக்கான விசாரணையையும் எளிதாக முடித்துவிடலாம். நம் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் எத்தனையோ வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இக்கருவிகள் எதிர்காலத்தில் இவ்வழக்குகளின் முடிச்சுகளை அவிழ்க்க ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். எல்லாத் துறையிலும் புகுந்துள்ள அறிவியல் நுட்பங்கள் இனி நீதிமன்ற பணிகளுக்கும் தேவைப்படுகிறது.

எம்.ஜே.எம்.இக்பால்