|

தலைப்பை பார்த்ததும் புல் பெட்ரோலா? இது என்ன புதுக்கதையாக
இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். இது கதை அல்ல.
அறிவியல் நிஜம். காடுகளிலும், தோட்டங்களிலும் வளரும்
புற்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும்
என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கச்சா
எண்ணையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பிரித்து
எடுக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் அதிக அளவில்
கிடைக்கும் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல்
போன்ற பொருட்களால் சுற்றுப்புற சூழல், காற்று போன்றவை
மாசுபடும் நிலையும் உள்ளது. மேலும் அவற்றின் உற்பத்தியும்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால் மாற்று எரிபொருள்
உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு
வருகிறார்கள்.
மூலிகையில் இருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் தயாரிக்கலாம்
என்று நம்ம ஊர் ராமர் பிள்ளை சொன்னார். காட்டாமணுக்கு
விதையில் இருந்து இயற்கை டீசல் தயாரிக்க முடியும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை டீசலை பயன்படுத்தி
வாகனங்களை ஓட்டும் முயற்சியும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
மேலை நாடுகளில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு
மாற்றாக ஹைட்ரஜன் மற்றும் பேட்டரியில் இயங்க கூடிய
வாகனங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான்
புற்களில் இருந்து இயற்கை எரிபொருள் மற்றும் மின்சாரம்
தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்து
இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில்
விஞ்ஞானியாக இருப்பவர் டேவிட் டில்மன். இவரும் இவரது
குழுவினரும் சேர்ந்து இயற்கை எரிபொருள் உருவாக்கும்
முயற்சியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
புல் தோட்டம் :
ஏற்கனவே சோயா மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து
இயற்கை எரிபொருள் தயாரிக்க முடியும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது. அது போல் வேறு தாவரங்களில் இருந்து
எரிபொருளை இயற்கையாக தயாரிக்க முடியுமா? என்று ஆய்வு
நடத்தினார்கள். அப்போது தரிசு நிலங்களிலும்,
காட்டுப்பகுதிகளிலும் விளையும் புற்களில் இருந்து
மின்சாரமும், இயற்கை எரிபொருளும் தயாரிக்க முடியும் என்பதை
கண்டுபிடித்தனர்.
இந்த இயற்கை எரிபொருள் தயாரிப்புக்காக இவர்கள்
பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு கார்பன்
நெகடிவ் என்பது பெயராகும். அதாவது சுற்றுப்புறத்தில்
இருந்து உள்இழுக்கப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை விட,
வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாக
இருக்கும்.
இந்த ஆய்வுக்காக 16 வகையான புல் இனங்கள்
எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இந்திய ரக புல்களும் உண்டு.
இந்த புற்கள் தங்களது இலை, தண்டு மற்றும் வேர் பகுதியில்
அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கும் திறன்
கொண்டது. இதனால் சுற்றுப்புற சூழுலில் இருந்து
உறிஞ்சப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த புற்களில் இருந்து மின்சாரம் மற்றும்
இயற்கை எரிபொருள் தயாரிக்கப்படும் போது வெளிப்படும்
கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாகவே இருக்கும். அதாவது
எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டதோ அதை விட
குறைவான அளவே வெளியாகும்.
தற்போது சோதனை சாலை அளவில் நடைபெற்ற இந்த ஆய்வுகள்
வெற்றியைத்தந்துள்ளன. இவை முழு அளவில் பயன்படுத்தப்படும்
போது பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு கணிசமாக குறையும்,
சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் பாதுகாக்கப்படும்.
கள்ள ஓட்டுக்கு 'ஆப்பு"!
தேர்தல் என்றாலே நமக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது-
அரசியல் கட்சிகளின் அலறல் பிரச்சாரங்கள், தேர்தல்
நேரத்தில் வரும் கலவரங்கள், ஓட்டுப்பதிவின் போது
நடத்தப்படும் கள்ள ஓட்டு' காட்சிகள்.
வாக்காளப் பெருமக்களே, உங்களுடைய பொன்னான வாக்குகளை
நாங்களே போட்டுக் கொள்கிறோம்,' என்று அதிகாரப்பூர்வமாய்
அறிவிக்காத குறை மட்டும் தான் பாக்கி. அந்த அளவிற்கு
நம்மவர்களிடயே இன்று கள்ள ஓட்டு கலாச்சாரம்' புரையோடிப்
போய் கிடக்கிறது. இதற்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளி
வைத்து விட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் தகவல்
தொழில் நுட்பத்துறையின் உதவியை நாடி வரும் தலைமை தேர்தல்
கமிஷனுக்கு ஒரு இனிப்பான செய்தி!
அமெரிக்காவில் சுதந்திரமான, ஒளிவு மறைவற்ற தேர்தல்
நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் நவீனமான
தொழில் நுட்ப யுக்திகளுடன் கிரிப்டோ கிராபிக்' எனப்படும்
ஓட்டுப்பதிவு எந்திரம், விஞ்ஞானிகளால்
உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம்ஸ் மாதிரி ரொம்ப
சிம்பிளாக இருக்கும் கிரிப்டோ கிராபிக், முழுக்க முழுக்க
ஹை-டெக் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட
வாக்குப்பதிவு எந்திரம் ஆகும்.
கிரிப்டோ கிராபிக் எந்திரத்தில் திரை ஒன்றும் உண்டு.
கம்யூட்டர் மானிட்டர் போன்று இருக்கும் இந்த திரையில்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல்,
அவர்களுக்கு உரிய சின்னங்கள் இடம் பெற்றிருக்கும்.
வாக்காளர்கள் அந்த எந்திரத்தை பயன்படுத்தி தங்களது
வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இதன்படி திரையில்
தெரியும் வேட்பாளர்களில் தாங்கள் விரும்பும் வேட்பாளரின்
பெயருக்கு நேராக இருக்கும் சின்னத்தில் தங்களின்
முத்திரையை பதிவு செய்து விட்டால் போதும். அடுத்த சில
நொடிகளிலேயே இந்த எந்திரத்துடன் இணைந்துள்ள பிரிண்டரில்
இருந்து நீங்கள் ஓட்டு போட்டதற்கான ஒப்புகை ரசீது உடனே
கிடைத்து விடும்.
ஓட்டு போடுபவர்களின் வாக்குப்பதிவை கிரிப்டோ கிராபிக்
எந்திரம், அப்படியே ஸ்கேன் செய்து ரகசிய குறியீடாக மாற்றி
சேகரித்து வைத்துக் கொள்ளும். கிரிப்டோ கிராபிக்
எந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண்ணும், வாக்காளருக்கான
எண்ணும் ஒன்றாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க
அம்சம்.
கிரிப்டோ கிராபிக் மெஷின் முலம் யார் யாருக்கு
வாக்களித்தார், அவருடைய வாக்கு எண்ணப்பட்டதா இல்லையா?
என்பதை இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ள இயலும். அதே
சமயத்தில் மற்றவர்கள் இதை சாதாரணமாக அறிய முடியாது.
தேர்தல் அதிகாரிகள் இந்த ரகசிய குறியீட்டை எந்திர
மொழியிலிருந்து, வழக்கு மொழிக்கு மாற்றம் செய்தால் தான்
உண்டு. இதற்கென பிரத்யேகமாக ஏ.டி.எம். மெஷின் மாதிரி
இருக்கும் நூதன எந்திரம் ஒன்றும் பயன்படுத்தப்படுகிறது.
கிரிப்டோ கிராபிக்கில் கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு என்கிற
பேச்சுக்கே இடமில்லை என்று சந்தோஷக் கூத்தாடுகிறார்கள்,
அமெரிக்கர்கள்.
ம்ம்ம்..... கிரிப்டோ கிராபிக் எந்திரம் நம்மூருக்கு
வருவது எப்போ?.
எம்.ஜே.எம்.இக்பால்

|