அறிவியல் அதிசயம் - MJM Iqbal

13-3-2004

Refer to Your Friends

விண்வெளி சுற்றுலா

இன்றைய நவீன உலகில் மனித வாழ்க்கை எந்திரத்தனமாகிவிட்டது. பணம் சம்பாதிக்க, அலுவலகப்பணி, வீட்டு வேலை, மருத்துவ தேவை, குடும்பத்தேவை, விருந்து, விழாக்கள், கல்வி... என்று மனிதன் எந்திரத்தனமாய் பணத்தை தேடி கனவுகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். அவசியத் தேவை நிறைவேறியதும் ஆடம்பர கனவுகள் துரத்த... மனிதனின் 'பண ஓட்டம்" மட்டும் முடிவில்லாமல் தொடருகிறது.

எந்திர வாழ்க்கையில் இருந்து மீள மனிதனுக்கு உதவ பல்வேறு பொழுது போக்கு வசதிகளும் சாதனங்களும் உள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்டது சுற்றுலா. உடலுக்கும், மனதுக்கும் உற்சாகமும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது சுற்றுலா. புதிய இடம், புதிய சூழல், புதிய முகங்கள்... என்று எல்லாமே புதிதாய் இருக்க... அந்த சூழலில் சுற்றுலா செல்லும் சில நாள் அனுபவம் மறக்க முடியாதது. புதிய சிந்தனைகள், தொலைநோக்கு பார்வை, சவால்களை சந்திக்கும் மனத்துணிவை தரக்கூடியது சுற்றுலா.சுற்றுலாவின்போது நாம் காணும் பூத்துக்குலுங்கும் சோலைகள், மலைப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், புண்ணிய தலங்கள், வரலாற்று சாதனைகள் போன்றவை உடலையும் மனதையும் இளமைத்துள்ளலோடு ஊஞ்சலாட்டும்.நிலம், நீர், ஆகாயம் என்பதோடு சுற்றுலாவின் எல்லைகள் முடிந்து விடவில்லை. அதையும் தாண்டி விண்வெளி வரை சுற்றுலா சிறகு விரிந்துள்ளது.

''நிலவில் மனிதனை குடியமர்த்துவோம், செவ்வாய்க்கு மனிதன் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை" என்று விஞ்ஞானிகள் கற்பனைகளை நிஜமாக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். 'விண்வெளி சுற்றுலா" என்பது கற்பனை அல்ல. அது நிஜம் என்பதை டென்னிஸ் டிட்டோ, மார்க் ஷட்டில் ஒர்த் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆம். இவர்கள் இருவரும் 'சுற்றுலா பயணி"களாக பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்று அங்கு விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்துவிட்டு பத்திரமாக திரும்பியுள்ளனர்.

விண்வெளி சுற்றுலா பற்றிய தகவல்கள் ''அறிவியல் அதிசயம்"" பகுதியில் இடம்பெறுகிறது.


விண்வெளி சுற்றுலா

 

பயணிகள் கவனிக்க... பூமியில் இருந்து நிலவுக்கு செல்லும் ராக்கெட் இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.

மைக்கில் இனிமையான பெண் குரல் தேனாய் பேசியது.

பயணிகள் தங்கள் சூட்கேஸ்களை இழுத்துக்கொண்டு ராக்கெட் ஏற விரைந்தனர்....""

'விண்வெளி சுற்றுலா" பற்றிய கற்பனை கதையின் ஆரம்பம் இப்படி இருக்கலாம். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இது நிஜமாகும் என்று அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். சாதாரண பொது மக்களும் 'டிக்கெட்" எடுத்து விண் வெளியில் 'ரவுண்டு" அடித்துவிட்டு திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை"" என்பது விஞ்ஞானிகளின் வாதம்.

'விண்வெளி சுற்றுலா" என்ற மகத்தான திட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. 1950_ம் ஆண்டுகளில் விண்வெளிக்கு செல்ல பயன்படும் ஏவுகணையின் வடிவமைப்பு மற்றும் நிலவைப்பற்றி ஆய்வுகளும் 'நம்பிக்கை அலை"யை பரப்பியது. விண்வெளி ஆய்வில் மனிதன் ஏதோ சாதிக்கப் போகிறான் என்று உலக மக்கள் நம்பிக்கையுடன் கவனிக்க ஆரம்பித்தனர்.

விண்வெளிக்கு ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் அனுப்பும் தொழில்நுட்ப வளர்ச்சி தான் 'விண்வெளி சுற்றுலா"வின் முதல் கட்டமாகும்.

விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் ஆய்வு முதலில் 'ஒரு வழிப்பாதை"யாகவே இருந்தது. அதாவது விண்வெளிக்கு செல்லும் வகையில் மட்டுமே முதலில் 'ராக்கெட்டு"கள் தயாரிக்கப்பட்டன.

1960_ம் ஆண்டுகளில் 'அப்பல்லோ" கலம் வடிவமைக்கும் பணியின்போது 'மறு உபயோக ஏவுகலம் வடிவமைக்கும் தொழில்நுட்பம் உருவானது. எஸ்.ஏ.எஸ்.எஸ்.டி.ஓ. மற்றும் வி.டி.ஓ.எல் தொழில் நுட்ப முறைகளை இணைத்து மறுஉபயோக ஏவுகலம் வடிவமைக்கப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வுகளில் முனைப்புடன் ஈடுபட்டனர். பசுபிக் - அமெரிக்க ஏவுகள நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஹட்சன் என்பவர் விண்வெளிக்கு பயணம் சென்று திரும்பும் வாகனமான ''போனிக்ஸ்"" பற்றிய தகவலை வெளியிட்டார்.

இதனையடுத்து பால்ஸ் மற்றும் அமெரிக்க பயண நிறுவன கழகம் ''விண்வெளி பயண திட்டம்"" ஒன்றை அறிவித்தது. இதன்படி போனிக்ஸ் வாகனம் மூலம் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு பயணிகளை அழைத்துச் செல்லப் போவதாக கூறினார்கள்.

இதற்கு ஆகும் செலவு பணத்தை பயணிகளிடம் முன்கூட்டியே வசூலிக்கவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் தேவையான பணம் சேராததால் இந்த திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

விண்வெளியில் ஓட்டல் அமைத்தல், விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், விண் வெளியில் மனிதர்கள் தங்கும் குடி இருப்புகளை அமைத்தல்.... என்று பல்வேறு திட்டங்கள் நீண்ட காலமாக ஆராயப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஆய்வுப் பணிக்காக விண்வெளி நிலையங்களை அமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினார்கள். பின்னர் அதுவே 'விண்வெளி சுற்றுலா" தொடர்பான திட்டத்துக்கும் வழிகாட்டுவதாக அமைந்தது.

 

விண்வெளி ஓட்டல்


விண்வெளி சுற்றுலா ஏற்படுத்திய ஆர்வம் ரஷியாவோடு நிற்கவில்லை. இன்று விண்வெளி சுற்றுலாவை ஒரு வணிகம் சார்ந்த துறையாக மாற்றி பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பல திட்டங்கள் தயாராகி வருகின்றன. அவை பற்றிய விவரம் இதோ...

பிஜியோ ஏரோ ஸ்பேஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டல் அதிபர் ராபர்ட் பிஜியோ நிறுவியது தான் பிஜியோ ஏரோ ஸ்பேஸ். சுமார் மைல் நீளம் கொண்ட விண்வெளி விமானம் பூமியில் இருந்து புறப்பட்டு நிலவுக்கு பறந்து சென்று விட்டு பூமிக்கு திரும்பும். இந்த திட்டத்துக்கான செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டது.

ஸ்பேஸ் ஐலேண்ட் குரூப்

இந்நிறுவனம் மோதிர வடிவ, சுற்றிக் கொண்டேயிருக்கும் விண்வெளி ஓட்டலை கட்ட இருக்கிறது. இது '2001 ஸ்பேஸ் ஓடிசி" திரைப்படத்தில் இடம்பெற்ற விண்வெளி ஓடத்தைப் போல் இருக்கும். நாசா விண்வெளி ஓடத்தின் 12 எரிபொருள் அறைகளைக் கொண்டு கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த விண் ஓடம் பூமியிலிருந்து 644 கி.மீ. தொலைவில் 2006_ம் ஆண்டு நிறுவப்பட இருக்கிறது. இந்த விண்வெளி ஹோட்டல் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றுவதால் 3_ல் ஒரு பங்கு அளவு கொண்ட புவிஈர்ப்பு விசையை ஏற்படுத்தும்.

ஸ்பேஸ் அட்வென்ட்சர்ஸ்:

2005_ம் ஆண்டு சிறுதூர சுழல்வட்டப் பாதையில், மறுஉபயோக செலுத்து வாகனத்தை வடிவமைத்து மக்களை ஏற்றிச் செல்லவிருக்கிறது. இந்த விண்வெளிக் கப்பலை பூமியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இயங்கும். 30 நிமிடத்திலிருந்து 150 நிமிட பயண நேரம் கொண்ட இந்த விண்வெளி சுற்றுலாவிற்காக இவ்வாகனத்தின் இருக்கைகளுக் கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.

ஹில்டன் ஹோட்டல்ஸ்:

இந்த நட்சத்திர ஓட்டல் விண் வெளியில் சுற்றுலாத்துறையின் திட்டங்களுக்கு பங்குதாரராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த திட்டங்கள் நிறைவேற்ற இன்னும் 5 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளது.

விண்வெளி சுற்றுலாத்துறை முதலில் குறைவான எண்ணிக்கையில் தங்கும் இடங்களை ஏற்படுத்தும் அதேவேளையில் மிகவும் சிறப்புடையதாகவும் இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையம் முதலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கும். இன்று நிலப் பரப்பில் அமைந்திருக்கும் ஓட்டல்களைப் போல் வெளியில் சுற்றிப் பார்க்க எதுவும் இருக்காது. ஏனென்றால் இந்த விண்வெளி நிலையம் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டது. பொழுதுபோக்கிற்காக அல்ல. இருந்தாலும் முதற்கட்ட விண்வெளி ஓட்டல்கள் விண்வெளி விருந்தாளிகளுக்கு சொகுசான தங்கும் வசதி மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்கத் தயாராக இருக்கும்.

ஸ்பேஸ் ஐலேண்ட் ஓட்டல் சுற்றிக் கொண்டே இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள புவிஈர்ப்பு விசை இழுப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் விருந்தாளிகள் நிலப்பரப்பைப்போல் நடப்பதற்கும் சுற்றி வருவதற்கும் வழிவகை செய்கிறது. இந்த ஓட்டலில் ஒரு நீரோடை, நீர் மறுசுழற்சி மையம், தோட்டம் மற்றும் மருத்துவ வசதிகள் உட்கொண்டதாக இருக்கும்.

இதைத் தவிர விருந்தாளிகள் விண் வெளியிலும் நடக்கும் வசதிகளையும் அளிக்கிறது. இந்த ஓட்டல் நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றிவருவதால் இந்த ஓட்டல்களில் ஜன்னல்கள் இருக்காது. ஏனென்றால் இவ்வாறு சுற்றும்பொழுது விருந்தாளிகள் விண்வெளியைப் பார்த் தால் உடல் கோளாறு ஏற்படும் என்பதால் ஜன்னல்கள் தவிர்க்கப்படுகிறது. இதை ஈடுசெய்வதற்காக அறையில் திரைகள் பொருத்தப்பட்டு விண்வெளிக் காட்சிகளின் படக்காட்சிகள் திரையிடும் எண்ணத்தில் உள்ளனர்.


விண்வெளி சுற்றுலா போட்டிகள் சூடு பிடித்து விட்டதால் திருவாளர் பொது ஜனம் 'ஜம்" என்று கால்மேல் கால் போட்டுக் கொண்டு விண்வெளிக்கு பறந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தற்போது சென்னை - மதுரை இடையே சாதாரண விமான போக்கு வரத்து இருப்பது போல இன்னும் 20 ஆண்டுகளில் பூமிக்கும் விண்வெளிக்கும் விமானப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர் லாந்து என்று செல்வது போல இனி வரும் காலத்தில் புதுமணத் தம்பதிகள் விண்வெளிக்கு தேனிலவு கொண்டாடப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சமீபத்தில் ரஷிய விண்வெளி வீரர் ïரிமெலன் சென்கோ விண்வெளியில் தங்கி இருந்தபடியே பூமியில் உள்ள தன் காதலி எக்கார்டினா டிமிட்ரேலை திருமணம் செய்து கொண்டார். இந்த 'விண்வெளி திருமணம்" புதுமையாக இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் விண்வெளி பயணத்திற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இன்னும் எத்தனை காலத்துக்கு 'நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா" என்று பாட்டுப்பாடி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது. இந்த காலத்து குழந்தைகள் 'நிலா இங்கு வராது, நாம் தான் நிலா வுக்கு போக வேண்டும்", என்று அம்மா விடம் கூறுவதற்குள் விண்வெளி பய ணத்தை முழுமையாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

 







 

'மிர்' நிலையம்


ரஷியாவின் 'மிர்" விண்வெளி நிலையம் தான் முதல் விண்வெளி சுற்றுலா தலமாக அமைய இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் மிர் விண்வெளி நிலையம் செயல்படுவது நிறுத்தப்பட்டு கடலில் விழ செய்தனர். 'மிர்" நிலையத்தின் வீழ்ச்சி என்.பி.சி. என்ற டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியது.

'நாங்க ரெடி? நீங்க ரெடியா?" என்ற பாணியில் ஒரு நிகழ்ச்சியை என்.பி.சி. நடத்தியது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு விண் வெளி வீரருக்கான பயிற்சி அளிக்கப்படும். பின்னர் விண்வெளி நிலையத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று என்.பி.சி. அறிவித்தது. ஆனால் 'மிர்" கடலில் விழுந்ததை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது

அடுத்த வாரம்

அடுத்த வாரம் விண்வெளி ஓடங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது.

தகவல் தொகுப்பு :
எம்.ஜே. இக்பால்,
துபாய்.