அபுதாபியில் சட்டப்பேரவைத்தலைவர் டாக்டர் கா.காளிமுத்து அவர்கள்

அபுதாபி காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் அப்துல் ரவூப் மாண்புமிகு சபாநாயகர் டாக்டர் காளிமுத்து அவர்களுக்கு மலர்கொத்தையும், பரிசையும் கொடுக்கும் காட்சி.

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் டாக்டர் காளிமுத்து அவர்களுக்கு அபுதாபி தமிழ் சங்கத்தின் சார்பாக அபுதாபியில் உள்ள செட்டிநாடு ஓட்டலின் வளாகத்தினுள் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இடிஏ அபுதாபி மெல்கோ டிவிசனின் மூத்த ஆலோசகர்
திரு நடராஜன் தலைமை தாங்கினார். திரு ரெஜினால்டு முன்னிலை வகித்தார். திரு அப்துல் ரவூப் வரவேற்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சிக்கு வருகை தந்த சபாநாயகருக்கு அபுதாபி காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர்
அப்துல்ரவூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அபுதாபி தலைவர் திரு ஜெய்லானி, அபுதாபி அய்மான் சங்கத்தலைவர் திரு காதர் பக்ஸ், அல் ஹப்தூர் நிறுவனத்தின் கட்டிடத்துறை மேலாளர் திரு சுப்புராம் ராஜூ, ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.


விழாவில் சபாநாயகர் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் சபாநாயகரிடம் அபுதாபியில் உள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து ஒரு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் மூன்றரை லட்சம் தமிழர்கள் இங்கே வேலை செய்கிறார்கள், அதில் பெரும்பாலோர் தொழிலாளர்கள்தான், குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்கள் இதனால் இவர்கள் அதிகப்படியான விமானக் கட்டணம் செலுத்தி தாயகம் சென்று திரும்ப முடியவில்லை, இதனாலேயே பலர் மூன்று ஆண்டு, நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் விடுமுறையில் செல்கிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து உரிய நேரத்தில் தாயகம் சென்று திரும்பக்கூடிய சூழ்நிலை உருவாகிட கேரளா, மற்றும் மகாராட்டிர மாநிலங்களுக்கு வழங்கிய பட்ஜெட் ஏர்லயன்ஸ் போல
தமிழ்நாட்டு மக்களுக்கும் பட்ஜெட் ஏர்லைன்ஸை அறிமுகப்படுத்த வேண்டும், தமிழர்கள் பயன் பெற வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட சபாநாயகர், உங்களது அனைவரின் ஒட்டு மொத்த கருத்தை, மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன், முதல்வர் அவர்கள் இப்பிரச்சனையை மாநில அரசின் மூலம் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.


விழாவிற்கு வந்திருந்து இவ்விழாவினைச் சிறப்பித்த அனைவருக்கும்
திரு ரெஜினால்டு நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் இடிஏ அபுதாபி மெல்கோ டிவிசன் கிருஷ்ணன், மைதீன் ஆகியோர் விருந்து உபசரித்து விழா ஏற்பாடுகளை கவனித்தனர்.


மற்றும் இந்நிகழ்ச்சியில் அபுதாபி மகளிர் அசோசியேசன் தலைவி
சித்ரா ராஜசேகர், நசிரா முகம்மது இலியாஸ், லதா கலைச்செல்வன் மற்றும் இடிஏ எம்கோ ஜெயக்குமார், அபுதாபி தமிழ்சங்கத்தின் முஸாஃபா பகுதி ஒருங்கிணைப்பாளர் கா.காதர் இப்ராஹிம், துபாய் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அஷ்ரப் அலி மற்றும் பாரதி நட்புக்காக வீராச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.