|
நேர்மையான உழைப்பே நம்மை
வழிநடத்தி செல்லும் ஒளி* குடியரசு தின உரையில் ஜனாதிபதி கலாம் யோசனை
புதுடில்லி : "நேர்மையான உழைப்பே நம்மை வழிநடத்திச் செல்லும் ஒளியாகும் '
என ஜனாதிபதி அப்துல் கலாம் தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அப்துல் கலாம் ஆற்றிய உரை வருமாறு:
நமது நாட்டின் மிக முக்கியமான தேவைகள் இரண்டு. முதலாவது, தேசிய இயக்கம்
மற்றும் அதன் வளர்ச்சி. இரண்டாவது நமது வளர்ச்சியை பாதுகாப்பது,
தனிப்பட்டவர்கள் மற்றும் மக்களின் வருவாய் ஈட்டும் திறனைத் தொடர்ந்து நிலை
நிறுத்துவது. நான் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பலருடன்
உரையாற்றியுள்ளேன். இதன்மூலம் 2020ம் ஆண்டை தொலைநோக்கு இலக்காக கொண்ட
இயக்கம் உருவானது. ஆந்திரா, உ.பி., ம.பி., மாநிலங்களில் நதிகளை இணைக்கும்
திட்டம் துவங்கியுள்ளது. கிராமப்பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை அளிக்கும்
புரா திட்டம் தமிழகம், மகாராஷ்டிரா, ம.பி., உ.பி., மாநிலங்களில் செயல்பட்டு
வருகிறது.
நமதுநாட்டின் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனடியாக
செயல்படுத்தக் கூடிய ஐந்து உடனடி திட்டங்கள் உள்ளன. அதிநுண்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சக்தி திறனை 14 சதவீதத்தில்
இருந்து 45 சதவீதமாக உயர்த்த வேண்டும். நோய்களை உண்டாக்கும் முறை மற்றும்
சிகிச்சைக்கான புதிய முறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை கண்டறிய
"புரோட்டியோமிக்சில்' ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். பூகம்பத்தின் மூலம்
ஏற்படும் பாதிப்புகளை முன்பே கண்டறிந்து தெரிவிக்க முன்னெச்சரிக்கை
கருவிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேகத்தின் அளவைக் கொண்டு எந்தப்
பகுதியில் எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்பதை கணிப்பதற்கான புதிய ரேடார்
கருவிகளை அமைக்க வேண்டும். அதிநுண் உயிரி மற்றும் தொழில் நுட்பங்களை
பயன்படுத்தி சுகாதார பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் மற்றும் நாட்டின்
தேவைக்கேற்ப கருவிகளை உருவாக்க வேண்டும்.
எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார
பாதுகாப்புத் திட்டத்துக்கு உயர் முன்னுரிமை வழங்க வேண்டும். 2007ம்
ஆண்டுக்கு முன் எச்.ஐ.வி., நோய்க்கு சிறந்த மருந்தை கண்டு பிடிக்க
வேண்டும்.
நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஒரு சம்பவம். அப்போது
வீட்டில் நான் படித்துக் கொண்டிருந்தேன். தந்தையைத் தேடி வந்த ஒருவர் அவர்
வீட்டில் இல்லாததால் தான் கொண்டு வந்த வெகுமதிகளை வீட்டில் வைத்து விட்டுச்
சென்றார். வீட்டுக்கு வந்த எனது தந்தை அதைப் பார்த்து மிகவும் கோபம்
கொண்டார். தனது அனுமதி இல்லாமல் வெகுமதிகள் வாங்குவது தவறு என்று என்னை
மிகவும் கண்டித்தார். அடிக்கவும் செய்தார். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல.
உள்நோக்கத்துடன் பரிசுகளை பெறுவது தான் வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய
மிகப்பெரிய ஆபத்தான தவறு. மனு சாஸ்திரத்திலும் இத்தகைய வெகுமதிகளை பெறுவது
தவறு என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது. அதுபோல் எப்போதும் உண்மையையே சொல்ல
வேண்டும். " மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு தனஞ்செய்வாரின் தலை,' என்ற
வள்ளுவரின் வாக்குப்படி வாழ வேண்டும். அருந்தவத்தையும், வாரி வழங்கும்
கொடையையும் விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி
வாய்ந்தது என்பதே இந்த குறளின் பொருளாகும்.
நமது நாட்டின் 25 வயதுக்கு கீழ் உள்ள 54 கோடி இளைஞர்களும் பார்லிமென்ட்
உறுப்பினர்களின் பணியை பின்பற்றி சிறந்த தலைவர்களாக உருவாகும் நிலை வர
வேண்டும். அரசியலிலும், வளர்ச்சி இலக்குகளிலும் நல்ல மாற்றத்தை கொண்டு
வருவதில் பார்லிமென்ட் உறுப்பினர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ
வேண்டும்." சமூகமோ, அரசியலோ அனைத்து முயற்சிகளுக்கும் அடிப்படை மனிதனின்
நல்ல தன்மையே. ஒரு பார்லிமென்ட் சட்டத்தை இயற்றி விடுவதாலேயே எந்த நாடும்
சிறந்ததாக உயர முடியாது. அந்த நாட்டில் உள்ள மனிதர்கள் சிறந்தவர்களாகவும்,
நல்லவர்களாகவும் இருப்பது முக்கியம்' என்ற சுவாமி விவேகானந்தரின் பிரபலமான
கூற்றை நினைவு கூற விரும்புகிறேன்.
தவறே இல்லாமை தெய்வீகமாகும். நாம் தெய்வீகமானவர்கள் அல்ல. தவறு செய்யக்
கூடியவர்கள். பிழை செய்வது மனித இயல்பு. இந்த உண்மையை உணர்ந்து தவறு நேரும்
போது நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெய்வீகத்தின்
விருப்பமாகும். என்றும் நிலைத்திருக்கும் சில மதிப்பு முறைகளை நாம்
குடிமக்களிடையே உருவாக்க வேண்டும். சில ஒழுங்குமுறைகளை அவர்களுக்கு ஊட்ட
வேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் 18 மாதம் கட்டாயமாக தேசிய மாணவர்
படையில் பயிற்சி அளிப்பது அவசியம். இதனால் ஒழுக்கம் நிறைந்த அரசியல்,
வியாபாரம், நிதித்துறை, விளையாட்டுகள், ஆட்சிமுறை மற்றும் அறிவியல்
தேடல்களுக்கு வழியுண்டாகும். அனைவரும் வாய்மை, நேர்மை, சகிப்புத்தன்மை
ஆகியவற்றை அன்றாட வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். "நேர்மையான உழைப்பே
நம்மை வழிநடத்திச் செல்லும் ஒளியாகும்'. கடினமாக உழைத்தால் நாம் எல்லாரும்
வளமடையலாம். சிறந்த எண்ணங்களை தாங்கி செயல்பாடுகளில் உயர்வோம். நேர்மையான
வழிமுறைகள் நமக்கு துணையாகலாம். இறையருளால் நாடு மென்மேலும் வளம் பெறும்.
இவ்வாறு ஜனாதிபதி அப்துல் கலாம் உரை நிகழ்த்தினர்.
ஜனாதிபதி கலாம் சொன்ன தொலைந்த ஆட்டின் கதை : குடியரசு தின உரையில் ஜனாதிபதி
அப்துல் கலாம் கூறிய தொலைந்த ஆட்டின் கதை வருமாறு:ஏசு கிறிஸ்து சொன்ன
தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100
ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால், மற்ற ஆடுகளை விட்டு விட்டு தொலைந்த
ஆட்டைத் தேடும் பணியில் மட்டுமே ஈடுபடுவீர்கள். ஆடு திரும்பக் கிடைத்து
விட்டால் அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். அதைக் கொண்டாட அனைவருக்கும்
விருந்து அளிப்பீர்கள். இந்த கதையை போல உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு
வீடு விளக்கு இல்லாமல் இருண்டிருக்கலாம். அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள்.
வகுப்பறையில் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அன்புடன் சொல்லித் தர
வேண்டியுள்ளது. இதுபோல உடனடியாக உதவி தேவைப்படுவோர்களை கண்டறிந்து அவர்களை
முக்கிய நீரோட்டத்துக்கு அரசு அழைத்து வர வேண்டும்.இவ்வாறு கலாம் கூறினார்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ ) |