|
அமீரகத்தில் தமிழ்
இதழ்கள் - ஒரு பார்வை |
|
ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழகத்திலிருந்து வெளிவரும் பல்வேறு தினசரி,
வார, மாத இதழ்களுடன் சமுதாய இதழ்களும் கிடைத்து வந்தாலும்
அமீரகத்திலிருந்தும் சில தமிழ் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
என்பதனை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இனிய தமிழ்த் தென்றல், எனும் மாதமிருமுறை இதழ் ஜனரஞ்சக இதழாக வெளிவந்து
கொண்டிருக்கிறது. அமீரகத்தில் தமிழ் நாளிதழ் / மாத இதழ் என்று பெரிய
நிறுவனங்கள் துவக்கிட ஆர்வம் கொண்டிருந்தும் துவக்கிட முன்வராத
நிலையில் சமுதாய ஆர்வலர் அல்ஹாஜ் எம் ஜே முஹம்மது இக்பாலின் சகோதரர்
இளைஞர் ( ? ) எம் ஜே ஆர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு பளபளக்கும்
காகிதத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இதுவரை
மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. மாத இதழாக்கும் ஆர்வம்
ஆசிரியரிடம் இருந்து வந்தாலும் சென்னையில் இருந்து புத்தகங்களை
அச்சிட்டு வரவழைப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதை அறிய முடிகிறது.
இதனால் கால தாமதம் என்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது.
கீழக்கரை அஞ்சல்.அபூபக்கர் தம்பியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும்
இம்மாத இதழும் சென்னையிலிருந்தே அச்சிடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில்
கீழக்கரைச் செய்திகளை மட்டுமே கொண்டு வெளிவந்தாலும் தற்போது சமுதாயச்
செய்திகள் அனைத்தையும் தாங்கி அதிக பக்கங்களுடன் வெளிவருவது ஆசிரியர்
குழுமத்தின் அயராத உழைப்பையே காட்டுகிறது.
தென்றல் மற்றும் பாலை எனும் கையெழுத்துப் பிரதிகள் வி களத்தூர் கமால்
பாஷாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தன. எனினும் பிரதி வெளிவந்த சுவடே
தற்பொழுது தெரியவில்லை.
விரைவில் தமிழ் வாரம் எனும் வார இதழ் வெளிவர இருப்பதாக அதன்
நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமீரகத்தைப் பொறுத்தவரை பத்திரிகைத்துறையில் ஆர்வமுள்ள பலர்
பணிபுரிந்து வருகின்றனர். சமுதாய இதழ்கள் அவர்க்ளைத் தக்க முறையில்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )